ஆறு மாதங்களில் 5,280 குடிமக்கள் ஆட்குறைப்பு

2 mins read
1e095332-527e-4d6e-a007-c77c413dd646
-

சிங்கப்பூரில் இந்த ஆண்டு ஜனவரி மாதத்துக்கும் ஜூன் மாதத்துக்கும் இடையில் 5,280 குடிமக்கள் ஆட்குறைப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள் என்று மனிதவள அமைச்சர் ஜோசஃபின் டியோ நேற்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

செங்காங் குழுத் தொகுதி பாட்டாளிக் கட்சி உறுப்பினருக்குப் பதிலளித்த திருவாட்டி டியோ, அதே காலகட்டத்தில் 11,000 சிங்கப்பூரர்கள் சம்பளம்இல்லா விடுப்பில் சென்றார்கள். இப்படி விடுப்பு அளிக்கப்பட்ட குடிமக்களாக அல்லாத மற்றவர்களின் எண்ணிக்கை 33,000 என்று அவர் குறிப்பிட்டார். கொவிட்-19 கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தொடங்கியது முதல் 50 விழுக்காட்டுக்கும் அதிக அளவுக்குச் சம்பளம் குறைக்கப்பட்ட சிங்கப்பூரர்களை பற்றி பாட்டாளிக் கட்சி உறுப்பினர் ஹி டிங் ரு கேட்டிருந்தார். இதற்குப் பதிலளித்த திருவாட்டி டியோ, பாதிக்கும் அதிக அளவு சம்பளம் இழந்த ஊழியர்களின் எண்ணிக்கை ஆகஸ்ட் 20 நிலவரப்படி குறைவுதான் என்றார்.

சிங்கப்பூர் குடிமக்கள், நிரந்தரவாசிகள் இருவருக்கும் இடையிலான இத்தகைய புள்ளிவிவரங்களை முதலாளிகள் தங்களுடைய தகவல்களில் பிரித்து தெரிவிப்ப தில்லை என்பதால் அவற்றைத் தெரிவிக்க இயலவில்லை என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

வேலையிழந்த 50க்கும் அதிக வயதுள்ள ஊழியர்களின் எண்ணிக்கையையும் அவர்கள் மீண்டும் வேலை பெற சராசரியாக எவ்வளவு காலம் பிடித்தது என்பதையும் அங் மோ கியோ குழுத் தொகுதி உறுப்பினர் திருவாட்டி இங் லிங் லிங் கேட்டார். இந்த ஆண்டு ஜூன் நிலவரப்படி வேலையில்லாத சிங்கப்பூர் வாசிகள் 90,500 பேர் இருந்தனர் என்றும் இந்த எண்ணிக்கை சென்ற ஆண்டு டிசம்பருடன் ஒப்பிடும்போது 16,600 அதிகம் என்றும் குறிப்பிட்டார்.