இன உணர்வில்லா நாடாக இன்னமும் பரிணமிக்கவில்லை

இன உணர்வில்லா நாடாக இன்னமும் பரிணமிக்கவில்லை

2 mins read
d8255d1a-a24d-4b62-a0ec-854b56988a8b
-

சிங்கப்பூர், இன உணர்வு இல்லா நாடாக இன்னமும் பரிணமிக்கவில்லை என்று கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சர் எட்வின் டோங்கும் பிரதமர் அலுவலக அமைச்சர் மாலிக்கி ஒஸ்மானும் நாடாளுமன்றத்தில் தெரிவித்தனர்.

இனங்களுக்கு இடையிலான பரஸ்பர மரியாதையையும் புரிந்துணர்வையும் நிலைநாட்டி வரவேண்டியது முக்கியமானது என்று இருவரும் வலியுறுத்தினர். அதிபர் உரை மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை நான்காவது நாளாக நடந்தது. அதில் கலந்துகொண்டு பேசிய பாட்டாளிக் கட்சித் தலைவி சில்வியா லிம், இனங்களை அடிப்படையாகக் கொண்ட கொள்கைகளை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இன உணர்வற்ற சமூகத்தைச் சாதிக்க சிங்கப்பூர் மேற்கொள்ளும் முயற்சிகளை எப்படி வேகப்படுத்த முடியும் என்பதைப் பற்றி விவாதிக்க தேசிய அளவிலான நடவடிக்கை தேவை என்றார் அவர். இன ஒருங்கிணைப்புக் கொள்கை, சுய உதவிக் குழுக்கள் போன்ற இன அடிப்படையிலான கொள்கைகளைப் பகிரங்கமாக விவாதிக்கலாம் என்றும் அவர் யோசனை தெரிவித்தார்.

அமைச்சர்கள் தெரிவித்த கருத்துகளுக்குப் பதில் அளித்த சில்வியா லிம், இனம் தொடர்பான விவாதிப்புகளை சிங்கப்பூர் தொடர்ந்து புதுப்பித்து வரவேண்டும் என்று குறிப்பிட்டார்.

இன அடிப்படையிலான சுய உதவிக் குழுக்களுக்குப் பதிலாக இனம் பாராத பொது நிதி ஏற்பாடு ஒன்றைச் சிங்கப்பூரர்கள் விரும்புவார்களா என்று அவர் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதில் அளித்த தொடர்பு, தகவல் அமைச்சரும் சிண்டா எனப்படும் சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கத்தின் முதல் தலைமை நிர்வாகியுமான எஸ் ஈஸ்வரன், அப்படி எனில் சுய உதவிக் குழுக்களைக் கலைத்துவிடலாம் என்று எதிர்த்தரப்பு உறுப்பினர் தெரிவிக்கிறாரா என்று கேட்டார்.

சுய உதவிக் குழுக்கள் தேக்கமடைந்துவிடாமல் பல்வேறு சமூகங்களின் தேவைகளுக்கு ஏற்ப அவை பரிணமித்து வந்துள்ளதாகவும் அவர் கூறினார்.