கொவிட்-19 சோதனைகளை மேற்கொள்ளவேண்டிய சுமார் 16,000 ஊழியர்கள் எப்போது அந்தச் சோதனையை மேற்கொள்வர் என்று அவர்களது முதலாளிகள் இன்னும் உறுதி செய்யவில்லை. இன்றைக்குள் ஊழியர்கள் சோதனை செய்யப்படாவிட்டால் ஊழியர்களால் வேலைக்குத் திரும்ப முடியாது என்று அதிகாரிகள் நேற்று கூட்டு அறிக்கை வெளியிட்டனர்.
நேர அட்டவணையின்படி சோதனை செய்யப்படும் என மனிதவள அமைச்சு, கட்டட கட்டுமான ஆணையம், பொருளியல் வளர்ச்சிக் கழகம், சுகாதார மேம்பாட்டுக்கழகம் ஆகியவை கடந்த மாதம் 11ஆம் தேதி அறிவித்தன.
அதிக அபாயகரமான சூழலில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பதினான்கு நாட்களுக்கு ஒருமுறை 'சுவாப்' சோதனை செய்யப்படும் என்றனர் அதிகாரிகள்.
ஊழியர்கள் மீண்டும் தங்கள் வேலையைத் தொடங்குவதை அனுமதிப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளில் அடிக்கடி சோதனை செய்வதும் ஒன்று. ஊழியர் தங்கும் விடுதிகளில் பாதுகாப்பாகத் தங்குவதற்கான நடவடிக்கைகள், ஒரே நேரத்தில் அல்லாமல் ஊழியர்களை வெவ்வேறு நேரங்களில் அவரவர் வேலையிடங்களில் விட்டுச் சென்று அவர்களை மீண்டும் விடுதிகளுக்குக் கொண்டு செல்வது போன்றவை மற்ற நடவடிக்கைகளில் அடங்கும்.
ஊழியர்களைச் சோதனைக்கு அனுப்புவதற்கான நேரத்தை அவர்களது முதலாளிகள் உறுதி செய்யாவிட்டால் அந்த ஊழியர்கள் பணியாற்றுவதற்கான அனுமதி இருக்காது என்று அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதனால் வர்த்தகச் செயல்பாடுகளில் தடங்கல் ஏற்படுவதைத் தடுக்க விதிமுறைகளுக்கு உடன்படும்படி அதிகாரிகள் முதலாளிகளைக் கேட்டுக்கொண்டனர்.
முதலாம் சோதனைக்கான செப்டம்பர் 5ஆம் தேதி காலக்கெடு ஆகஸ்ட் 22ஆம் தேதியன்று உறுதி செய்யப்பட்டது. இது குறித்த இறுதி நினைவூட்டல் குறிப்பு செப்டம்பர் 1ஆம் தேதியன்று முதலாளிகளுக்கு விடுக்கப்பட்டது.
"முதலாளிகளைத் தொலைபேசி வழியாக அல்லது மின்னஞ்சல் வழியாகத் தொடர்புகொண்டு அவர்களைக் காலக்கெடுவுக்குள் சோதனை செய்து முடிக்க அவர்களை நினைவூட்டும் முயற்சிகளை அமைப்புகள் துரிதப்படுத்தியுள்ளன," என்று அதிகாரிகள் நேற்று முன்தினம் தெரிவித்தனர். தொடர்ந்து ஒத்துழைக்காத முதலாளிகளின் வேலை அனுமதி அட்டைச் சலுகைகள் ரத்து செய்யப்படலாம் என்றும் அவர்கள் கூறினர்.
தங்களது ஊழியர்களை சோதனைக்காக இன்னமும் பதிவு செய்யாத முதலாளிகள் எச்பிபியின் சுவாப் பதிவு முறை வழியாக அவ்வாறு செய்யலாம். முதலாம் சோதனைக்குச் சென்றுள்ள ஊழியர்கள் இனி வரும் சோதனைகளுக்கான தேதி உடனடியாகக் கொடுக்கப்படும்.

