கொரோனா கிருமி பாதிப்பில் உலக அளவில் அமெரிக்காவுக்கு அடுத்து, இரண்டாவது இடத்திற்கு இந்தியா வந்துவிட்டது. அந்நாட்டில் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 4.2 மில்லியனைக் கடந்துவிட்டது.
கடந்த சில நாட்களாக அங்கு ஒருநாள் கொரோனா எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. நேற்று முன்தினம் 90,802 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 1,016 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்த பாதிப்பு 4,204,614 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 71,642 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உலக அளவில் கொரோனா பாதிப்பில் மூன்றாவது இடத்தில் இருந்த இந்தியா தற்போது பிரேசிலை முந்தி இரண்டாவது இடத்திற்கு வந்துள்ளது.
பரிசோதனை, கண்காணிப்பு மற்றும் சிகிச்சை என்னும் யுக்தியின் கீழ் செயல்படுத்தப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளின் மூலம் பரிசோதனைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு, பாதிப்புகள் விரைவில் கண்டறியப்பட்டு வருகின்றன. அதனால், அனைத்துலக அளவில் இந்தியாவில் உயிரிழப்பு விகிதம் குறைவாக உள்ளது. குணமடைந்தோர் விகிதம் 77.31% உயர்ந்துள்ள நிலையில், பலியானோர் விகிதம் 1.70% குறைந்துள்ளது என்றும் அந்நாட்டு சுகாதாரத்துறை கூறியது.
இதுவரை 325,042,9 பேர் குணமடைந்துள்ளனர் என்றும் தற்போது 882,542 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் அது குறிப்பிட்டது.
நேற்று முன்தினம் அதிக எண்ணிக்கையில் புதிய கொரோனா நோயாளிகளை பதிவு செய்துள்ள மகாராஷ்டிரா, ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நாட்டின் 60% மொத்த பாதிப்புகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இங்கு கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
ஏறக்குறைய 1.3 பில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட இந்தியா உலகிலேயே ஆகப் பெரிய அளவிலான முடக்கத்தை மார்ச் மாதம் அறிவித்தது.
ஆனால், கிருமிப் பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையிலும் முடக்கத்தினால் ஏற்பட்ட பொருளியல், சமூகப் பாதிப்புகளில் அந்நாடு முடக்கத்தை தளர்த்த வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.
கடந்த காலாண்டில் முக்கிய பொருளியல்களில், இந்தியாதான் ஆக அதிகமான பொருளியல் வீழ்ச்சியைக் கண்டுள்ளது.
இதற்கிடையே, கிருமிப் பரவலைத் தடுக்க மோடி அரசாங்கம் தவறி விட்டதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. காங்கிரஸ் கட்சியில் தலைமைப் பேச்சாளர் ரந்தீப் சுர்ஜிவாலா, கிருமிப் பரவலைத் தடுக்க முடியாததது தலைமைத்துவத்தின் தோல்வி என்றார். சோதனை விகிதத்தை அதிகரிக்க விடுக்கப்பட்ட கோரிக்கைகள் கண்டுகொள்ளப்படவில்லை. மேலும் முடக்கநிலையின் போது தடம் கண்டறிதலுக்கான போதிய நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்றார் அவர்.
இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன், நாட்டின் பொருளாதாரம் 23.9% வீழ்ச்சி அடைந்தது அனை வருக்கும் மிகப்பெரிய எச்சரிக்கை மணியாக இருக்க வேண்டும். உலகப் பொருளாதார வல்லுநர்கள் கணித்த வீழ்ச்சியைவிட இது அதிகமாக இருக்கிறது.
கொரோனா கிருமியால் இத்தாலியில்கூட பொருளாதாாரம் 12.4% தான் வீழ்ந்தது, அமெரிக்காவில் 9.5%தான் சரிந்தது. இந்த இருநாடுகள்தான் அதிகமான பொருளாதாராச் சரிவைச் சந்தித்துள்ளன. கிருமிப் பரவலைக் கட்டுக்குள் கொண்டுவரும்வரை பொருளாதார சிக்கல் காரணமாக, மக்கள் விருப்பப்படி செலவு செய்யும் அளவு குறையும். ஆதலால், அரசு சார்பில் அளிக்கும் நிவாரண உதவிதான் மிகவும் முக்கியமானது என்றார் அவர்.

