சுடச் சுடச் செய்திகள்

ஊழியர்களைக் குறைக்கிறது சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமம்: 2,400 பேர் பாதிப்பு

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமம் சுமார் 2,400 பேரை ஆட்குறைப்பு செய்கிறது. இது பற்றி மெய்நிகர் கூட்டம் வழி இன்று ஊழியர்களிடம் தெரிவிக்கப்பட்டது. 

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமம் தன்னுடைய நிறுவனங்களில் ஏறக்குறைய 4,300 பேரைக் குறைப்பது என்று முடிவெடுத்தது.

ஆட்சேர்ப்பு முடக்கம், தாங்களாகவே விலகிக் கொள்ளும் திட்டங்கள், பணி ஓய்வு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு கணக்கிட்டு பார்த்ததில் சிங்கப்பூரிலும் வெளிநாடுகளிலும் சுமார் 2,400 பேர் ஆட்குறைப்புக்கு ஆளாவார்கள் என்று இக்குழுமம் தனது அறிக்கையில் தெரிவித்தது. 

கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்படுத்திய விளைவுகளால் உலகளாவிய விமான தொழில்துறை மோசகமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. 

கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக பல நாடுகளும் எல்லைகளில் கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்தி இருக்கின்றன. இதன் காரணமாக அனைத்துலக விமான பயணங்கள் தொடர்ந்து முடங்கியுள்ளன. 

கொவிட்-19க்கு முன்பு இருந்த விமானப் பயணச் சூழல் மறுபடியும் 2024ல்தான் திரும்பக்கூடும் என்று அனைத்துலக விமானப் போக்குவரத்துச் சங்கம் அண்மையில் தெரிவித்தது. 

சிங்கப்பூருக்கும் குறிப்பிட்ட சில நாடுகளுக்கும் இடையில் அண்மைய வாரங்களில் சில சேவைகள் மீண்டும் தொடங்கி இருக்கின்றன என்றாலும் கொவிட்-19க்கு முந்தைய சூழலை இப்போதைக்கு நினைத்துப் பார்க்க முடியாத நிலையில் ஆட்குறைப்பு பரவலாக எதிர்பார்க்கப்பட்டது.  

எஸ்ஐஏ குழுமம் ஜூன் 30ல் முடிவடைந்த காலாண்டில் தனக்கு $1.12 பில்லியன் இழப்பு ஏற்பட்டதாக ஜூலை மாதம் அறிவித்தது. 

இந்தக் குழுமத்திற்கான வருவாய் 79.3 விழுக்காடு  குறைந்து ஆண்டுக்காண்டு அடிப்படையில் $851 மில்லியனாக இருந்தது. 

அதேவேளையில், செலவினம் 51.6 விழுக்காடு குறைந்து $1.89 பில்லியனாக இருந்தது என்றும் தெரிவிக்கப்பட்டது. எஸ்ஐஏ, சில்க்ஏர், ஸ்கூட் ஆகிய எல்லா நிறுவனங்களும் பயணிகளை 99.5 விழுக்காடு அளவுக்கு இழந்துவிட்டன. 

கடந் 2003ல் தொற்றுநோய் ஏற்பட்டபோது விமானிகள், விமானச் சிப்பந்திகள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான ஊழியர்களை எஸ்ஐஏ ஆட்குறைப்பு செய்தது குறிப்பிடத்தக்கது. 
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon