நடந்து முடிந்த பொதுத் தேர்தலின்போது சில வாக்களிப்பு நிலையங்களில் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்தனர். இது மீண்டும் நடக்காமல் இருக்க, தன் செயல்முறைகளில் பல மேம்பாடுகளைச் செய்யவுள்ளதாக தேர்தல் துறை நேற்று தெரிவித்தது.
தயார்நிலையில் உள்ள தேர்தல் அதிகாரிகள் மற்றும் சாதனங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது, பெரிய அளவிலான வாக்களிப்பு நிலையங்களில் வாக்காளர்களின் எண்ணிக்கையைக் குறைப்பது, வாக்காளர்களுக்குக் குறிப்பிட்ட ஒரு நேரத்தை ஒதுக்குவதன் தேவையை மறுஆய்வு செய்வது போன்றவை இந்த மேம்பாடுகளில் அடங்கும்.
"இந்த பொதுத் தேர்தலில் மக்களின் சுகாதாரத்தையும் பாதுகாப்பையும் நோக்கமாகக் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் நடப்புக்குக் கொண்டுவரப்பட்டன. ஆனால் அதனால் முறையாக வாக்களிப்பது பாதிக்கப்பட்டது. சில வாக்களிப்பு நிலையங்களில் நீண்ட வரிசைகளும் உருவாகின," என்றது தேர்தல் துறை.
கூடுதல் மனிதவளம், வளங்கள்
தயார்நிலையில் கூடுதல் தேர்தல் அதிகாரிகள் இனி சேர்க்கப்படுவதால் நீண்ட வரிசைகள் போன்ற எதிர்பாராத சூழல்கள் உருவானால் உடனே உதவி தேவைப்படும் வாக்களிப்பு நிலையங்களுக்கு அனுப்பப்படுவர்.
மின்பதிவுச் சாதனங்களையும் கூடுதலாக வழங்கும் என்று தேர்தல் துறை குறிப்பிட்டது. இது பதிவுச் செய்யும் செயல்முறையைத் துரிதப்படுத்தும். அத்துடன் பழுதான சாதனங்களையும் உடனுக்குடன் மாற்றிக்கொள்ளலாம்.
பெருமளவு வாக்களிப்பு நிலையங்களைத் தவிர்த்தல்
பெரிய அளவிலான வாக்களிப்பு நிலையங்கள் முடிந்தால் பிரிக்கப்படும் என்றும் தேர்தல் துறை கூறியது. தலா 4,400க்கு மேலான வாக்காளர்களைக் கொண்ட 25 வாக்களிப்பு நிலையங்களில் 22 நிலையங்களில் நீண்ட வரிசைகள் காணப்பட்டன.
மேலும் பத்தில் மூவருக்குத் தங்களின் வாக்களிப்பு அனுபவம் திருப்தி அளிக்கவில்லை என்று 'ரீச்' அரசாங்கக் கருத்துக்கணிப்புப் பிரிவு கண்டறிந்தது. இது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்று தேர்தல் துறை குறிப்பிட்டது.
வாக்களிப்பு நிலையத்தைப் பிரிக்க முடியாத நிலையில் அதற்குக் கூடுதல் மனிதவளமும் உபகரணங்களும் வழங்கப்படும் என்று கூறப்பட்டது.
வெவ்வேறு நேரத்தை ஒதுக்கும் திட்டம் பரிசீலனை
வாக்களிப்பு தினத்தன்று மக்கள் வெவ்வேறு நேரங்களில் வாக்களிக்கச் செல்ல வேண்டும் என்பதற்காக தேர்தல் துறை குறிப்பிட்ட ஒரு நேரத்தை அளித்தது. இதனைத் தொடர்வதாக இருந்தால் காலையில் குறைந்த எண்ணிக்கை வாக்காளர்கள் செல்வதற்கு ஏற்பாடு செய்யப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டது. தரப்பட்ட நேரத்தில் வாக்களிக்க விரும்பாமல் காலையிலேயே வாக்களிக்கச் செல்வோருக்குத் தகுந்தாற்போல் இந்த ஏற்பாடு அமையும்.
"மூத்த வாக்காளர்கள் அனைவரையும் நாங்கள் காலையில் வாக்களிக்க வைத்திருக்கக்கூடாது. இனி வரும் தேர்தல்களில் மூத்த வாக்காளர்களையும் மற்றவர்களையும் எவ்வாறு வெவ்வேறு நேரத்திற்கு ஏற்ப வர வைப்பது என்பது குறித்து நாங்கள் ஆலோசிப்போம்," என்றது. சக்கர நாற்காலிகள், தேவை ஏற்பட்டால் இருக்கைகள், மூத்த வாக்காளர்களுக்கு ஏற்ற இடவசதி போன்ற தளவாட ஏற்பாடுகளையும் மூப்படையும் சமூகத்தைக் கருத்தில் கொண்டு மறுஆய்வு செய்திடும் என்று கூறியது.
முன்னெச்சரிக்கைநடவடிக்கைகள் பலனளித்தன
இந்த பொதுத் தேர்தலில் ஒரு சில சிக்கல்களை எதிர்நோக்கிய போதும், தான் அமல்படுத்திய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியமானவை என்றும் அவை பலனளித்தன என்றும் தேர்தல் துறை தெரிவித்தது. 1997ஆம் ஆண்டு பொதுத் தேர்தலை அடுத்து இவ்வாண்டின் பொதுத் தேர்தலில் அதிகமான எண்ணிக்கையில் 95.63% மக்கள் வாக்களித்ததாக துறை குறிப்பிட்டது.
அத்துடன் பொதுத் தேர்தலில் பங்கேற்றதன் விளைவாக வாக்காளர்கள் மற்றும் தேர்தல் அதிகாரிகள் யாருக்கும் சமூகக் கிருமித்தொற்று ஏற்படவில்லை என்றும் தேர்தல் துறை தகவல் பகிர்ந்துகொண்டது.

