2030ஆம் ஆண்டு இலக்கின் உத்திகள், திட்டங்கள்; மேலும் பசுமை, குளிர்ந்த சூழல்

2030ஆம் ஆண்டு இலக்கின் உத்திகள், திட்டங்கள்; மேலும் பசுமை, குளிர்ந்த சூழல்

3 mins read
faa4c560-3374-41b6-8d62-33768eaeef86
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

வரும் 2030ஆம் ஆண்டுக்குள் சிங்கப்பூரின் நகர்ப்புறங்கள் இன்னும் பசுமைமிக்கதாய், கண்களுக்குக் குளிர்ச்சிமிக்கதாய் காட்சிஅளிக்கும். இன்னும் அதிகமான கட்டடங்கள் பச்சை நிறத்தில், இயற்கையின் வனப்பைப் பிரதிபலிப்பதாக இருக்குமென தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ அறிவித்துள்ளார்.

வெளிப்புறத்தை இன்னும் குளிர்ச்சியாக வைத்திருக்க அரசாங்கம் சுமார் ஒரு மில்லியன் மரங்களை நட உள்ளது. கட்டடங்களின் உட்புறத்தின் வெப்பநிலை இன்னும் ஏதுவாக வைத்திருக்கப்படும். சன்னல்கள் இயற்கையான வெளிச்சத்தை உள்ளிழுக்கும் வகையில் வடிவமைக்கப்படும்.

இந்த எல்லா முயற்சிகளும் உலக வெப்பமடைதல் காரணமாக அதிகரித்து வரும் வெப்பத்தை, கூடுதல் குளிரூட்டி சாதன வசதிகள் இல்லாமல் குறைக்க உதவும் என்று திரு லீ, ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழுக்கு அளித்த சிறப்பு நேர்காணலில் கூறினார்.

இந்த மாற்றங்கள் ஒருபுறம் இருக்க, இருக்கும் வளங்களைச் காப்பது தொடர்பான இன்னும் அதிகமான விழிப்புணர்வு முயற்சிகளும் குடியிருப்பாளர்களிடையே மேற்கொள்ளப்படும்.

பயன்படுத்தாதபோது விளக்குகளை அணைத்தல், மறுசுழற்சி முறைகளைக் கையாளுதல், தண்ணீரைச் சேமித்தல் ஆகியவற்றுடன் நாளடைவில் வனவிலங்குகளையும் நகர்ப்புறத்தின் பசுமைவனப்புடன் இணைக்கும் திட்டமும் ஆராயப்படும் என்றார் அமைச்சர்.

சுருங்கச் சென்னால், தேசிய வளர்ச்சி அமைச்சு நகர்ப்புற நீடித்த நிலைத்தன்மைக்காக அதிக முயற்சிகளை எடுக்கும் என்று விவரித்த திரு லீ, இதில் உள்கட்டமைப்பு வசதிகள் தொடர்பானது மட்டுமல்ல, மக்கள் இவற்றை எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதும் அடங்கி உள்ளது என்றார்.

நீடித்த நிலைத்தன்மை என்பது சிங்கப்பூருக்குப் புதியது அல்ல. ஆனால், கொரோனோ கிருமித்தொற்றுச் சூழ்நிலை நாடு தனது வழக்கமான எல்லைகளைக் கடந்து செயல்பட வைத்துள்ளது.

அதிபர் ஹலிமா யாக்கோப் சென்ற மாதம் 14வது நாடாளுமன்றத்தைத் தொடங்கி வைத்து உரையாற்றினார். அப்போது, கொவிட்-19 காரணமாக ஏற்பட்டு வரும் பொருளியல் பாதிப்புகளைச் சமாளித்து மீண்டு வரும் முயற்சிகளில், பொருளியல் வளர்ச்சியுடன் இயற்கை வளத்தையும் கட்டிக்காக்கும் அணுகுமுறை கடைப்பிடிக்கப்படும் என்று கூறினார்.

இதை விவரித்த அமைச்சர் திரு லீ, பொருளியல் வளர்ச்சியுடன் இயற்கை வளத்தையும் கட்டிக்காப்பது என்பது பல அமைச்சுகளை உள்ளடக்கிய, முழு அரசாங்கமும் மேற்கொள்ளும் ஒரு முயற்சி என்று குறிப்பிட்டார்.

தேசிய வளர்ச்சி அமைச்சைப் பொறுத்த வரையில் சிங்கப்பூரின் உள்கட்டமைப்பு வசதிகளில் அது ஒருமித்த கவனம் செலுத்தும் என்று திரு லீ தெரிவித்தார்.

கட்டடங்கள் அதிகம் உள்ள சூழலில் வளங்கள் அதிகமாகத் தேவைப்படும். ஆகையால் வளங்களும் இடவசதிகளும் விவேகமாக பயன்படுத்தப்படுவதை உறுதிப்படுத்த வேண்டியது முக்கியமானது என்றார் அமைச்சர்.

நீடித்த நிலைத்தன்மையும் மீள்திறனும் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து செயல்படுபவை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

"நீடித்த நிலைத்தன்மை என்பது மனப்போக்கையும் குறிப்பதாகும். ஆகையால் வளங்களை மிகக் கவனமாக பயன்படுத்த வேண்டும். எதிர்காலத்துக்கு அவற்றை ஒதுக்கிவைக்க வேண்டும்.

"இப்படி செய்து வந்தால் கொவிட்-19 போன்ற சவால்களைச் சமாளிப்பதற்கு ஏற்ற நல்ல முறையில் நாடு இருக்கும்," என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

திரு லீ, 44, உயிரியல் பற்றி அதிக ஞானம் உள்ளவர். சுற்றுச்சூழல் மீது தான் கொண்டிருக்கும் நாட்டத்தை அவர் அண்மையில் வெளிப்படுத்தினார். சிங்கப்பூர் பூமலையில் கடந்த புதன் அன்று அளித்த ஒரு பேட்டியில் அங்குள்ள தாவரங்களின் தாவர வியல் பெயர்களைக் கூறினார்.

நிழல் தரும் மரங்கள் காற்றைத் தூய்மையாக்குகின்றன. காற்றில் இருக்கும் கரியமில வாயுவைக் கிரகித்துக் கொள்கின்றன. அதனால் இயற்கை வளங்களை நாம் கட்டிக்காக்க வேண்டும். செயற்கை அல்லது தொழில்துறை தீர்வுகளுக்குச் செலவு மிக அதிகம் என்பதே இதற்குக் காரணம் என்றார்.

இயற்கை நகராகத் திகழ்வது, அதே சமயம் மக்கள் நலன்களைப் பூர்த்தி செய்வது ஆகிய இரண்டுக்கும் இடையில் சிங்கப்பூர் எப்படி சரிசம முறையைச் சாதிக்கும் என்று கேட்டபோது பதில் அளித்த அமைச்சர், மேம்பாட்டிற்கும் இயற்கை வளங்களைக் காப்பதற்கும் இடையில் பெரும் போராட்டம் இருப்பதாக ஒப்புக்கொண்டார்.

"தேசிய வளர்ச்சி அமைச்சைப் பொறுத்தவரையில் எல்லா சிங்கப்பூரர்களிடத்திலும் நாம் அக்கறை காட்டுகிறோம் என்பதை உறுதிப்படுத்த வேண்டும். இயற்கை நகர் என்ற இலக்கை நிறைவேற்றுவது என்பது ஒரு சிலரின் நாட்டத்தைப் பூர்த்தி செய்வதாக மட்டும் இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

"சிங்கப்பூரில் நிலப் பற்றாக்குறை இருக்கிறது. அனைத்து தேவைகளுக்கும் இடையில் சமநிலையை நாம் காணவேண்டும்," என்றும் அவர் குறிப்பிட்டார்.