உள்ளூர் பயணத்துறையை ஊக்கப்படுத்த $2 மி. திட்டம்

உள்ளூர் பயணத்துறையை ஊக்கப்படுத்த $2 மி. திட்டம்

2 mins read
5c6f2c11-b1e5-4311-b1ec-81e759af4e39
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரின் உள்ளூர் பயணத்துறையை ஊக்கப்படுத்த அரசாங்கம் எடுத்திருக்கும் முயற்சிகளில் ஒன்றாக $2 மில்லியன் மதிப்புள்ள திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் பயணத்துறை கழகமும் சுற்றுலா பதிவுத்தள நிறுவனமுமான 'குளுக்'கும் ஏழு மாதம் நீடிக்கும் பங்காளித்துவ உடன்பாட்டில் கையெழுத்திட்டு உள்ளன.

இதன் மூலம் குடிமை வட்டாரம், காத்தோங்-ஜூ சியாட் ஆகிய பகுதிகளில் உணவருந்துதல், சுற்றுலாக்கள், பொழுதுபோக்கு இடங்கள், தங்குமிடம் ஆகியவற்றுக்கு உதவும் வகையில் சலுகைகள் வழங்கப்படும்.

உதாரணத்துக்கு, ஒரு சலுகைத் தொகுப்பில் சைனாடவுனில் உள்ள மோனோ ஹோட்டலில் தங்குதல், அந்தப் பகுதியில் சைக்கிள் ரிக் ஷாவில் பவனி வருதல் போன்றவை உள்ளடக்கப்பட்டிருக்கும். உள்ளூர் பயணத்துறையை ஊக்கப்படுத்தும் அரசாங்கத்தின் $45 மில்லி யன் மதிப்புள்ள சிங்கப்பூர் ரீடிஸ்கவர்ஸ் திட்ட விளம்பர இயக்கத்தின் ஒரு பகுதிதான் இந்த $2 மில்லியன் பங்காளித்துவம் என்பது குறிப்பிடத்தக்கது.

குளுக் நிறுவனத்தின் இணையத் தளத்தில் உணவருந்துதல், பார்க்க வேண்டிய இடங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய சலுகைத் தொகுப்புகள் பற்றி தெரிந்துகொள்ளலாம்.

விற்பனை தொடர்பான திட்டங்கள் ஒருபுறம் இருக்க, வர்த்தகங்கள் புதிய பொருட்களையும் அனுபவங்களையும் உருவாக்க இந்தப் பங்காளித்துவம் ஊக்குவிக்கிறது என்று சிங்கப்பூர் பயணத்துறைக் கழகமும் குளுக் நிறுவனமும் தங்கள் அறிக்கையில் தெரிவித்தன. தங்கள் இணையத் தளத்தில் மக்களைக் கவரும் 600 உள்ளூர் நடவடிக்கைகள் பட்டியலிடப்பட்டுள்ளன என்றார் குளுக் நிறுவனத்தின் ஆசிய பசிபிக் வட்டாரத்தின் விற்பனைப் பிரிவு உதவித் தலைவர் திரு மார்கஸ் யோங்.

துணைப் பிரதமர் கடந்த மாதம் உள்ளூர் பயணத்துறையை ஊக்கப்படுத்த $320 மில்லியன் மதிப்புள்ள பயணத்துறைப் பற்றுச்சீட்டுத் திட்டத்தை அறிவித்தார்.

இந்தப் பற்றுச்சீட்டுகளைப் பெறும் சிங்கப்பூரர்கள் அவற்றைப் பயன்படுத்தி, சிங்கப்பூரில் உள்ள பல்வேறு கவரும் இடங்களுக்கும் உணவகங்களுக்கும் செல்லலாம், ஹோட்டல்களில் தங்கும் சலுகைகளையும் பெறலாம்.

சிங்கப்பூரின் வெவ்வேறு இடங்களை உள்ளூர் மக்கள் கண்டு களிக்கச் செய்யும் பொதுவான நோக்கத்தைத் தாங்கள் கொண்டிருப்பதாக சிங்கப்பூர் பயணத்துறைக் கழகமும் குளுக் நிறுவனமும் தெரிவித்தன.