பொருளீட்ட வந்த இந்திய ஊழியர் புற்றுநோயுடன் தாயகம் திரும்புகிறார்; வாழ்க்கை இன்னும் சில மாதங்கள்தான்...

திரு தனபால் சுரேஷுக்கு 39 வயதுதான். 3 வயது மகளும் இரண்டாம் குழந்தையை வயிற்றில் சுமந்திருக்கும் இளம் மனைவியும் சொந்த ஊரான பாண்டிச்சேரியில். 

ஆகஸ்ட் மாதத்தில் இரண்டாவது குழந்தை பிறப்பு பற்றிய நல்ல செய்தி வரும் என்று காத்திருந்தார்.

கடல் கடந்து பொருள் ஈட்ட சிங்கப்பூருக்கு வந்த அவருக்கு, நான்காம் நிலை வயிற்றுப் புற்றுநோய் (metastatic gastric cancer) பாதிப்பு இருப்பதாக, கடந்த மாதம் (ஆகஸ்ட்) 21ஆம் தேதி செங்காங் மருத்துவமனை உறுதிப்படுத்திய செய்தி பேரிடியாய் வந்திறங்கியது.

அடுத்த சில நாட்களில் இரண்டாவது குழந்தை பிறந்த நல்ல செய்தியும் வந்தது.

குழந்தை பிறந்தது மகிழ்ச்சியளித்தாலும் அந்தக் குழந்தைக்கு விவரம் தெரிந்து தந்தையை அறிந்துகொள்ளும் முன்பே, அவர் காலன் வசமாகக்கூடும்.

ஆம். அந்திமக்கால ரசாயன சிகிச்சை (கீமோதெரபி) வழங்கப்படவில்லை என்றால் இன்னும் 3 முதல் 6 மாதம் வரை மட்டுமே இவ்வுலக வாழ்க்கை என்று கணிக்கப்பட்டுள்ளது. 

ஈரல், குடல் பகுதி, உணவுப் பாதை என உடலின் மற்ற பகுதிகளுக்கும் புற்றுநோய் பரவிவிட்டதாம். சிகிச்சை அளித்தாலும் நோயிலிருந்து விடுபட வழியில்லை.

ஆனால், அளிக்கும் சிகிச்சை மூலம் ஆயுளை கொஞ்சம் நீட்டிக்கலாம்; வலியின் கொடுமையைக் குறைக்கலாம். 

தமது பச்சிளம் குழந்தையுடன் இன்னும் கொஞ்ச காலம் வாழ்ந்திருக்க அது உதவலாம்! 

சிகிச்சை பெறவும், எஞ்சிய காலத்தை குடும்பத்துடன் கழிக்கவும் வேண்டி அவர் சிங்கப்பூரிலிருந்து தாயகம் திரும்புகிறார்.

அவரது மருத்துவ சிகிசைக்காகும் செலவைச் சமாளிக்க, இட்ஸ்ரெய்னிங்ரெயின்கோட்ஸ் (Itsrainingraincoats) எனும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு உதவி வரும் அமைப்பின் தொண்டூழியர்கள், திரு சுரேஷுக்கு பாண்டிச்சேரியில் சிகிச்சை மற்றும் அந்திமக்கால பராமரிப்பு வழங்குவதற்கு உரிய மருத்துவரைக் கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அவரது சிகிச்சை செலவுக்காக Give.asia உடன் இணைந்து நிதி திரட்டும் பணியில் Itsrainingraincoats இறங்கியுள்ளது.

வழங்கப்படும் நன்கொடை திரு சுரேஷ் - அவரது மனைவியின் கணக்குக்கு நேரடியாகச் செலுத்தப்பட்டு, அவரது சிகிச்சைக்காகப் பயன்படுத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பெற்றோரையும் இழந்த நிலையில், திரு சுரேஷின் சகோதரர் மட்டும் பாண்டிச்சேரியில் இருக்கிறார்.

தமக்குப் பிறகு, இரு குழந்தைகளுடன் தம் மனைவியின் நிலை என்னவாகும் என்பதே, பொருளியல் ரீதியாக வலுவற்ற குடும்பப் பின்னணியைச் சேர்ந்த திரு சுரேஷின் பெரும் கவலையாக உள்ளது.

மேல் விவரங்களுக்கு: https://give.asia/campaign/cancer-stage-4-a-scary-word#/

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!