3 வெளிநாட்டு ஊழியர்களை 40 நாள்கள் முறையின்றி சிறை வைத்ததற்காக நிறுவன மேலாளருக்கு $9,000 அபராதம்

சிங்கப்பூரில் பணியாற்றும் இந்தியாவைச் சேர்ந்த 3 வெளிநாட்டு ஊழியர்களை 40 நாட்களுக்கு சட்டவிரோதமாக சிறை வைத்த ஷான் பாங் டோங் ஹெங் எனும்  ஆடவருக்கு $9,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவைச் சேர்ந்த கணேசன் பாண்டி, பாண்டியன் ஜககாந்தன், முத்துராஜ் தங்கராஜ் எனும் அந்த மூவரையும் இவ்வாண்டு மே முதல் ஜூன் மாதத்துக்குட்பட்ட காலத்தில் அவர்களை ஓர் அறையில் தடுத்து வைத்ததை பாங் ஒப்புக்கொண்டார். அம்மூவரும் பணியாற்றும் நிறுவனத்தின் மேலாளர் பாங்.

சிறைப்படுத்தப்பட்ட இம்மூவரின் தொடர்பிலான இதே போன்ற மேலும் 3 குற்றச்சாட்டுகள், தண்டனைவிதிப்பின்போது கணக்கில் கொள்ளப்பட்டன.

அந்த மூவரையும் தொல்லை கொடுப்பவர்களாக பாங் கருதியதாகவும், தனது செயலுக்காக பாங் வருந்துவதாகவும் அவரது வழக்கறிஞர் நீதிமன்றத்தில் குறிப்பிட்டார்.

கொவிட்-19 குழுமத்துக்கு அருகில் குடியிருந்தபோதும் திரு பாண்டியனும் திரு கணேசனும் மதுபானம் வாங்குவதற்காக துவாசுக்கு  சென்றதாக பாங்கின் வழக்கறிஞர் தெரிவித்தார். 

ஓட்டுநர் உரிமம் இல்லாத நிலையில் நிறுவனத்தின் லாரியை திரு பாண்டியன் ஓட்டியதாகவும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதற்காக திரு முத்துராஜ் ஏற்கெனவே பிடிபட்டவர் எனவும் வழக்கறிஞர் குறிப்பிட்டார்.

அம்மூவரும் சிறை வைக்கப்பட்டிருந்த அறையில் சுத்தமான படுக்கைகள், ஒரு கழிவறை, வைஃபை இணைப்பு போன்ற வசதிகள் இருந்ததாகவும் அவர்களுக்கு உணவும் நீரும் வழங்கப்பட்டதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

அதிகாரத்தைக் கையிலெடுத்து மூவரையும் பாங் சிறை வைத்ததற்கு இந்த சாக்குப்போக்கு உதவாது என அரசுத் தரப்பு வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார்.

ஊழியர்கள் தவறிழைத்தால், அதுகுறித்து பாங் போலிசிடம் தெரிவித்திருக்க வேண்டும் என்றார் நீதிபதி.

சட்டவிரோதமாக சிறைப்படுத்திய ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் குற்றவாளிக்கு மூன்றாண்டுகள் வரை சிறைத் தண்டனை, அபராதம் விதிக்கப்படலாம்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon