உமிழ்நீர் பரிசோதனையை பரவலாக்க முயற்சி; கொவிட்-19 கிருமிப் பரவலுக்கு எதிரான போரில் அடுத்த கட்டம்

உமிழ்நீரைப் பரிசோதித்து கொவிட்-19 கிருமித்தொற்று இருக்கிறதா இல்லையா என்பதைக் கண்டறிய இப்போது களப் பரிசோதனைகள் நடந்து வருகின்றன.

பரவலான பயன்பாட்டிற்கு இந்த முறை உகந்ததாக இருக்குமா என்பதை சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.

தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பத்திரிகையின் கேள்விகளுக்கு நேற்று பதிலளித்த சுகாதார அமைச்சு, மாதிரி சேகரிப்பில் நிலையான, நேர்மையான வழிமுறைகள், ஆய்வக செயல்முறைகளின் செயல்திறன் அத்துடன், ஒரே நேரத்தில் அதிக அளவிலான மாதிரிகளைச் சோதிக்கும் திறன் ஆகிய அம்சங்களை ஆராய்வதாகத் தெரிவித்தது.

கொவிட்-19 பரிசோதனைக்கான பெரும்பாலான மாதிரிகள் மூக்கின் உட்புறம் அல்லது தொண்டையின் உட்புறத்திலிருந்து சேகரிக்கப்படுகின்றன. அவற்றை ஒன்றுதிரட்டலாம்.

இதனால் அதிக அளவு சோதனைகளை அன்றாடம் திறம்பட மேற்கொள்ள முடிகிறது.

இத்தகைய குழு சோதனையில், கிருமித்தொற்று இருக்கக்கூடும் என சந்தேகத்திற்கிடமான குழுவில் ஒருவருக்கு சோதனை செய்யப்படும்.

சோதனையில் கிருமித்தொற்று இருப்பது உறுதியானால், அக்குழுமத்தைச் சேர்ந்த அனைவரும் சோதிக்கப்படுவர்.

உமிழ்நீர் சோதனை “சிலருக்கு சற்று வசதியாக இருக்கும்” என்று ஆரம்பக்கட்ட முடிவுகள் தெரிவிக்கின்றன. எனினும், அதற்கான வழிமுறைகள் இன்னும் உருவாக்கப்பட்டு வருகின்றன என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது.

“மையத்தால் முன்னர் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு உட்பட உமிழ்நீர் பரிசோதனையில் மேற்கொள்ளப்பட்ட மூன்று உள்ளூர் ஆய்வுகள், வெவ்வேறு முடிவுகளைத் தந்துள்ளதை இந்த மையம் அறிந்துள்ளது,” என்று தொற்று நோய்களுக்கான தேசிய மையத்தின் (என்சிஐடி) தேசிய பொது சுகாதார ஆய்வகத்தின் இயக்குநரான இணை பேராசிரியர் ரேமண்ட் லின் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தார்.

“பல்வேறு மாதிரி முறைகளை சரிபார்க்க, அமைச்சின் ஒப்புதலுடன் கட்டமைக்கப்பட்ட தரப்படுத்தப்பட்ட சோதனை அணுகுமுறையைப் பயன்படுத்தி கூடுதல் ஆய்வுகளை தொற்று நோய்களுக்கான தேசிய மையம் மேற்கொள்கிறது,” என்றார் அவர்.

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் சா சுவீ ஹொங் பொது சுகாதார பள்ளியின் தொற்று நோய்ப் பிரிவு திட்டத் தலைவரும், உலக சுகாதாரத்தின் இணை இயக்குநருமான இணை பேராசிரியர் சு லி யாங் தலைமையிலான ஆய்வில், தொண்டையின் உட்புறத்திலிருந்து எடுக்கப்பட்ட உமிழ்நீர் பரிசோதனை கொவிட்-19 சோதனைக்கு ஒரு சாத்தியமான முறை எனத் தெரியவந்துள்ளது.

ஜூன் 2ஆம் தேதி முதல் ஜூன் 26ஆம் தேதி வரை நடத்தப்பட்ட அந்த ஆய்வில், சமூக பராமரிப்பு இடங்களிலும் ஊழியர் தங்கும் விடுதிகளிலும் இருந்த 200 வெளிநாட்டு ஊழியர்கள் பங்கேற்றனர்.

இந்தச் சோதனையில், கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களும் தொற்று இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டவர்களும் கடுமையான சுவாசப் பிரச்சினைகள் உள்ளவர்களும் இடம்பெற்றிருந்தனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட மூக்கு திரவ சோதனை (ஸ்வாப் டெஸ்ட்), உமிழ்நீர் சோதனை, சொந்தமாக மூக்கு திரவம் எடுப்பது ஆகிய மூன்று வகையான சோதனைகளில், உமிழ்நீர் சோதனை அதிக விகிகத்தில் கிருமித்தொற்று இருப்பதை உறுதிப்படுத்தியது.

உமிழ்நீர் பரிசோதனையை மேற்கொள்ள, நோயாளிகள் இருமி தங்கள் தொண்டை நீரையும் எடுக்க வேண்டும். இதனால் அவர்களின் மாதிரியில் தொண்டை சுரப்பு அதிக கிருமிகளைக் கொண்டிருக்கும்.

இதில் தவறான முடிவுகள் ஏற்படக்கூடிய சாத்தியம் இருப்பதை முழுதாக மறுக்க முடியாது என்று குறிப்பிட்ட பேராசிரியர் சு, எனினும் அந்த விகிதம் மிகக் குறைவு என்றார்.

இருப்பினும், கொவிட்-19 கிருமிக்கான உமிழ்நீர் சோதனை குறித்து உலகளவில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வுகள் மாறுபட்ட முடிவுகளைக் காட்டுகின்றன. இத்தகைய முடிவுகளுக்கு வேறுபட்ட பரிசோதனை முறைகள் காரணமாக இருக்கலாம் என்றார் அவர் .

உமிழ்நீர் சோதனை சாத்தியமானது, நோயாளிகளுக்கு குறைந்த சிரமத்தைக் கொடுக்கக்கூடியது என்பன உள்ளூரில் இதனை செயல்படுத்த ஏற்புடைய காரணங்கள் என்று பேராசிரியர் சு குறிப்பிட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!