தங்களுக்கு அறிமுகமான ஒருவரை நான்கு மலாக்கா ஆடவர்கள் ஏழு ஆண்டுகளுக்கு முன் கொலை செய்ததன் தொடர்பில் 46 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர்.
இதையடுத்து நால்வருக்கும் நேற்று முன்தினம் மலாக்கா உயர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. தங்களுக்கு எதிரான வழக்கில் அரசுத்தரப்பு சாட்சியத்தில் சந்தேகத்தை ஏற்படுத்த அவர்கள் தவறியதால் நால்வரும் குற்றவாளிகள் என்று உயர் நீதிமன்ற நீதிபதி முகம்மது ஃபிருஸ் ஜஃப்பிரில் தீர்ப்பளித்து மரண தண்டனை விதித்தார்.
குற்றவாளிக் கூண்டில் நடுக்கத்துடன் காணப்பட்ட எம்.பி.நமச்சிவாயம் (30), பி.நரேந்திரன்பதி (33), பி.சேதுபதி (32) மற்றும் அய்மான் மஸ்லான் (27) தண்டனை விதிப்புக்குப் பின் கண்ணீர் விட்டதாக பெர்னாமா செய்தி நிறுவனம் கூறியது. 2013ஆம் ஆண்டு மே 4ஆம் தேதியன்று இரவு 10.45 மணிக்கு ஒரு வீட்டின் முன்னால் 32 வயது பி.ஆர்.சிவன் என்பவரைக் கொன்றதன் தொடர்பில் இந்த நான்கு பேர் உட்பட அறுவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
ஆனால் அ.சதிஷ் (26) மற்றும் ஜி.வின்சண்ட் லாரன்ஸ் (28) மீது பதிவான கொலைக் குற்றச்சாட்டு தொடர்பில் அரசு தரப்பால் போதுமான ஆதாரங்களைத் திரட்ட முடியாததால் அவர்களைக் குற்றமற்றவர்கள் என்று நீதிபதி தீர்ப்பளித்து விடுதலை செய்தார்.
இந்த வழக்கு விசாரணைக்காக 36 அரசுத்தரப்பு சாட்சிகளும் 10 தற்காப்புத் தரப்பு சாட்சிகளும் சாட்சியம் அளித்திருந்தனர்.

