பாலின சமத்துவத்துக்கு முக்கியத்துவம்

பாலின சமத்துவம், பெண்களுடன் பரஸ்பர மரியாதை போன்ற பண்புநெறிகள் தொடர்பாக மக்களின் மனப்போக்கில் மாற்றத்தைக் கொண்டு வர பெண்களைப் பாதிக்கும் விவகாரங்கள் குறித்த முழுமையான மறுஆய்வு தொடர் கலந்துரையாடல்கள் மூலம் நடத்தப்படவுள்ளது. இதுகுறித்து பொதுமக்களுடனும் தனியார் துறையுடனும் மகளிர் மற்றும் இளையர் அமைப்பு களுடனும் அரசாங்கம் இணைந்து செயல்படும் என்று சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் தெரிவித்தார்.

கலந்துரையாடல்களுக்கு அரசியல் பதவி வகிக்கும் மூன்று பெண்கள் தலைமை தாங்குவர் என்று அவர் தெரிவித்தார்.கல்வி மற்றும் சமுதாய, குடும்ப மேம்பாட்டு துணை அமைச்சர் சுன் சூலிங், கலாசார, சமூக, இளையர் துணை அமைச்சர் லோ யென் லிங், சுகாதார அமைச்சுக்கான நாடாளுமன்றச் செயலாளர் ரஹாயு மாசாம் ஆகியோர் கலந்துரையாடல்களுக்குத் தலைமை தாங்குவர்.

கலந்துரையாடல்கள் மூலம் பெறப்படும் ஆலோசனைகளும் பரிந்துரைகளும் அடுத்த ஆண்டின் முதல் பாதியில் நாடாளுமன்றத்தில் வெள்ளை அறிக்கையாக தாக்கல் செய்யப்படும் என்று திரு சண்முகம் கூறினார்.

இந்த விவகாரம் தொடர்பான முதல் மெய்நிகர் கலந்துரையாடல் நேற்று நடைபெற்றது.அதில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் சண்முகம், ஆண்களுக்கு இருக்கும் வாய்ப்புகளைப் போல பெண்களுக்கு வழங்கவும் பாலின சமத்துவத்துக்கும்

சிங்கப்பூர் அதிக முயற்சிகளை எடுத்துள்ளது என்று கூறினார். இருப்பினும், நிலைமையை மேம்படுத்த இன்னும் நிறைய செய்ய வேண்டி இருக்கிறது என்றார் அவர். இதற்குத் தொடர்ந்து இடையூறாக இருந்துவரும் கலாசார, சமூகத் தடைகளை எதிர்கொள்ள கலந்துரையாடல்கள் மூலம் கருத்துகள் சேகரிக்கப்படும் என்று திரு சண்முகம் தெரிவித்தார்.

‘பெண்கள் மேம்பாட்டுக் கலந்துரையாடல்கள்’ எனும் தலைப்பின்கீழ் நேற்றைய மெய்நிகர் கலந்துரையாடல் நடத்தப்பட்டது. இதே போல பல மெய்நிகர் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு கருத்துகள் சேகரிக்கப்படும்.

“சிங்கப்பூரில் பெண்களைப் பாதிக்கும் விவகாரங்களை எதிர்கொள்ள வெள்ளை அறிக்கை இலக்கு கொண்டிருக்கும். கூடுதல் பாலின சமத்துவத்துக்குப் பாதை வகுக்க அது முற்படும்,” என்று நேற்றைய மெய்நிகர் கலந்துரையாடலில் கலந்துகொண்ட ஏறத்தாழ 60 பேரிடம் அமைச்சர் சண்முகம் தெரிவித்தார்.

இந்தத் திட்டத்தை சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு ஒருங்கிணைக்க, கலாசார, சமூக, இளையர் அமைச்சும் உள்துறை அமைச்சும் ஆதரவு வழங்குகின்றன. சிங்கப்பூரில் உள்ள பெண்கள் ஊழியரணி, அரசியல், கல்வி போன்ற துறைகளில் முன்னேற்றம் அடைந்திருப்பதாக அமைச்சர் கூறினார். ஆனால் பாலின சமத்துவத்தில் சமுதாயம் மேலும் மேம்பட வேண்டும் என்றார் அவர்.

“ஒவ்வொரு சிறுவனும் சிறுமியும் பாலின சமத்துவம் முக்கியம் என்பதை உணர்ந்து வளர வேண்டும். ஆண்களும் பெண்களும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்றும் மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும் என்று சிறு வயதிலிருந்து அவர்களுக்குப் போதிக்க வேண்டும். பாலின சமத்துவம் குறித்து மக்களின் மனப்போக்கு மாற வேண்டும்.

“பாலியல் வன்முறை, பாலினச் சமத்துவமின்மை போன்றவை அடிப்படை நெறிமுறை மீறல்கள் என்ற எண்ணம் அனைவருக்கும் வர வேண்டும்,” என்றார் திரு சண்முகம்.

பாலின சமத்துவம் குறித்து மக்களின் மனப்போக்கை மாற்ற தேவையான வழிமுறைகள் கலந்துரையாடல்களில் ஆராயப்படும் என்று திரு சண்முகம் கூறினார்.

பெண்கள் வீட்டில் எதிர்நோக்கும் பிரச்சினைகளைப் பற்றி அலசி ஆராயப்படும். உதாரணத்துக்கு, கணவரால் துன்புறுத்தப்படும் பெண்களுக்குப் பாதுகாப்பு வழங்கப்படும். மேலும் பள்ளிகளிலும் வேலை இடங்களிலும் பெண்கள் பற்றி நிலவும் எண்ணங்கள் குறித்தும் பாலியல் ரீதியிலான தொல்லைகள், தாக்குதல்கள், வேலையிடப் பாரபட்சம் ஆகியவற்றிலிருந்து பெண்களைப் பாதுகாப்பது குறித்தும் ஆராயப்படும் என்று திரு சண்முகம் தெரிவித்தார்.

“பெண்களுக்குத் தெரிவுகள் உள்ளன என்று கூறும்போது அவை உண்மையான தெரிவுகள்தானா? தங்கள் ஆற்றலை நிரூபிக்க பெண்களுக்கு வாய்ப்பு இருக்கிறதா?” என்று நேற்றைய கலந்துரையாடல் முடிந்த பிறகு திருவாட்டி சுன் கேள்வி எழுப்பினார்.

வேலையிடங்கள், பள்ளிகள், சமூகம் ஆகிய இடங்களில் பெண்களைப் பாதிக்கும் விவகாரங்கள் குறித்து திருவாட்டி ரஹாயுவும் திருவாட்டி லோவும் பேசினர்.

“பெண்கள் பல ஆண்டுகளாக எதிர்நோக்கும் பிரச்சினைகளை கொவிட்-19 தற்போது தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. குடும்பப் பொறுப்புகளைத் தனியாகச் சுமப்பது, வேலையிடப் பாரபட்சத்தை எதிர்நோக்குவது போன்ற சவால்களைப் பெண்கள் எதிர்நோக்குகின்றனர்.

“நமது தாய்மார்கள், மகள்கள், சகோதரிகள் இத்தகைய சவால்களை ஒவ்வொரு நாளும் எதிர்நோக்குகின்றனர். சில துறைகளில் முன்னேற்றம் உள்ளது. ஆனால் சிங்கப்பூர் பெண்கள் மேம்பட அனைவரும் பங்காற்ற வேண்டும்,” என்று திருவாட்டி ரஹாயு தெரிவித்தார்.

“அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் பாரபட்ச நிலையை முடிவுக்குக் கொண்டு வரலாம். அதோடு சிங்கப்பூர் பெண்களின் நிலை மேம்பட வழிவகுக்கலாம். பழைய மனப்போக்குகளை நீக்கி பெண்களின் முன்னேற்றத்துக்கு இடையூறாக இருக்கும் அணுகுமுறைகளை முடிவுக்குக் கொண்டு வரலாம். இதன் மூலம் நமது சமுதாயம் மேலும் முன்னேற்றம் அடையும்,” என்றார் திருவாட்டி லோ.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!