சுடச் சுடச் செய்திகள்

சிங்கப்பூர்: திருமண விழாக்கள், சமய நிகழ்வுகளில் 100 பேர் வரை கலந்துகொள்ள அனுமதி

திருமண நிகழ்வுகளிலும் கூட்டு வழிபாட்டுச் சேவைகளிலும் அடுத்த மாதம் மூன்றாம் தேதியிலிருந்து அதிக எண்ணிக்கையிலானவர்கள் பங்கேற்க அனுமதிக்கப்படுவர் என சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் இன்று (செப்டம்பர் 23) அறிவித்தார்.

உணவு, பானங்கள் வழங்க அனுமதிக்கப்பட்டுள்ள இடங்களில், திருமண ஜோடி உட்பட 100 பேர் வரை திருமண நிகழ்வுகளில் பங்கேற்கலாம் என இன்று நடத்தப்பட்ட மெய்நிகர் செய்தியாளர் கூட்டத்தில் திரு கான் குறிப்பிட்டார். தற்போது 50 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி உள்ளது.

திருமணச் சேவை, உணவுச் சேவை வழங்கும் நிறுவனங்களைச் சேர்ந்தோர் இந்த 100 பேரில் உட்படுத்தப்படமாட்டார்கள்.

ஆனால், அனைத்து நிகழ்வுகளிலும் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டியது அவசியம்.

தற்போது சோதனை அடிப்படையில், தேர்ந்தெடுக்கப்பட்ட சில சமயத் தலங்களில் மட்டும் 100 பேர் வரை பங்கேற்கும் முன்னோடித் திட்டம் நடப்பில் உள்ளாது.

அக்டோபர் 3 முதல், அனைத்து சமய நிகழ்வுகளிலும் வழிபாடுகளிலும் 100 பேர் வரை கலந்துகொள்ளலாம்.

சிங்கப்பூரில் உள்ளூர் சமூகத்தில் கொவிட்-19 சம்பவங்கள் தொடர்ந்து குறைவாக இருப்பதையடுத்து, இந்தத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கொரோனா தொற்றுப் பிரச்சினைகள் முடிந்த பிறகு திருமணம் செய்து கொள்ளலாம் என சிலர் தள்ளிப்போட்டிருப்பதைச் சுட்டிக் காட்டிய திரு கான், அதற்காக திருமணத்தைத் தள்ளிப்போடுவது உகந்த தீர்வல்ல என்றார்.

திருமணம் நடைபெறும் இடங்களில் 50 பேர் வரையிலான பிரிவுகளாகப் பிரிக்கப்பட வேண்டும் எனவும் அந்தப் பிரிவினர் வேறு பகுதிகளில் ஒரே நேரத்தில் இருக்கலாம். அல்லது வெவ்வேறு நேரங்களில் அவர்கள் அந்த இடங்களில் இருக்கலாம்.  

திருமண நிகழ்வுகளில் ஒரு குழு கலந்துகொண்டு அங்கிருந்து கிளம்பிச் சென்ற பிறகு இன்னொரு குழு வருவதற்கு முன்பு அவ்விடத்தைச் சுத்தம் செய்ய குறைந்தது 30 நிமிட இடைவெளி ஒதுக்கப்பட வேண்டும்.

இட வசதி குறைவாக இருந்தால், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் 100க்கும் குறைவானவர்கள் மட்டுமே பங்கேற்கலாம் என்ற கட்டுப்பாட்டையும் சம்பந்தப்பட்டவர்களிடம் தெரிவிக்கலாம்.

ஆனால், வீடுகள், பொது மற்றும் முஸ்லிம் திருமணப் பதிவகங்களில் திருமணம் பதிவு செய்யப்படும்போது அதிகபட்சமாக 10 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon