சுடச் சுடச் செய்திகள்

30ஆம் தேதி வரைதான் தேசிய கொடியை பறக்கவிடலாம்

இன்னும் சில நாட்களில், குடியிருப்பாளர்கள் தங்கள் வீட்டுக்கு வெளியே பறக்கவிடப்பட்ட தேசிய கொடியை அகற்றிவிட வேண்டும் என்று நினைவூட்டப் பட்டுள்ளது. இம்மாதம் 30ஆம் தேதி புதன்கிழமைக்குப் பிறகு வீட்டுக்கு வெளியே தேசிய கொடியைப் பறக்கவிடுவோர் மீது சிங்கப்பூர் ஆயுதங்கள், கொடிகள் மற்றும் தேசிய கீதம் விதிமுறைகள் சட்டத்தின்படி $1,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.

ஒவ்வோர் ஆண்டும் ஜூலை மாதம் 1ஆம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி வரை தேசிய கொடிகள் கட்டடத்துக்கு வெளியிலும் அல்லது கொடிக் கம்பம் இல்லாமல் திறந்தவெளியிலும் பறக்கவிட அனுமதிக்கப்படும்.ஆனால் இவ்வாண்டு முற்பகுதியில், கொவிட்-19 கொள்ளைநோயை எதிர்கொள்ளும் தேசிய முயற்சியை வெளிப்படுத்தும் விதமாக, தேசிய கொடியைப் பறக்கவிடும் காலம் ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி வரை  நீட்டிக்கப்பட்டது.

தேசிய கொடியை நிர்ணயிக்கப்பட்ட காலத்தைவிட சற்று அதிக காலம் பறக்கவிட வேண்டும் என்று பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்ததால். விதிமுறைகளில் மாற்றம் செய்து  தேசிய கொடியைப் பறக்கவிடும் காலம் நீட்டிக்கப்பட்டது என்று கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சு தெரிவித்தது.

இந்த மாற்றத்துக்குப் பிறகு, ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வாசகர் கருத்துப் பகுதிக்கு எழுதிய வாசகர் ஒருவர், தேசிய கொடியை ஆண்டு முழுவதும் பறக்கவிட அமைச்சு பரிசீலிக்குமா என்று கேள்வி எழுப்பினார்.

“முறையான வழிமுறைகள் கடைப்பிடிக்கப்படுவதை உறுதி செய்து, தங்கள் வீடுகளில், வர்த்தக மனைகளில், வாகனங்களில் ஆண்டு முழுதும் தேசிய கொடியைப் பறக்கவிட பல நாடுகள் அனுமதித்துள்ளன,” என்று வாசகர் திரு தேவராஜன் தேவதாஸ் தமது கடிதத்தில்  குறிப்பிட்டிருந்தார்.

“தேசிய தினக் காலகட்டத்தில் தேசிய கொடியை தங்கள் வீடுகளுக்கு வெளியே பறக்கவிடுவோரின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளதைத் தம்மால் உணர முடிகிறது. அதனால்தான் ஆண்டு முழுவதும் அதைப் பறக்கவிட வேண்டும்,” என்று திரு தேவதாஸ் யோசனை தெரிவித்தார். அதற்குப் பதிலளித்த கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சின் மீள்திறன் மற்றும் ஈடுபாட்டுப் பிரிவின் மூத்த இயக்குநர் திரு லட்சுமணன் நாராயணன், “தேசிய கொடியின் கண்ணியத்தை நம்மால் கட்டிக்காக்க முடியுமா என்பதே தேசிய கொடியைப் பறக்கவிடுவதில் நாம் கருத்தில் கொள்ள வேண்டிய அம்சம். 

“மேலும் அனுமதிக்கப்பட்ட காலத்தைவிட  தேசிய கொடியைப் பறக்கவிடுவதால் அன்றாட பயன்பாட்டினால் ஏற்படும் சேதத்தையும் நாம் நிராகரிக்க முடியாது.

“தேசிய கொடியைப் பறக்கவிடுதலுக்கான விதிமுறைகள் ஆண்டுகள் கடந்து பல மாற்றங்களைக் கண்டுள்ளன,” என்றும் கூறினார்.
கடந்த 2007ஆம் ஆண்டில், ஜூலை மாதம் 1ஆம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி வரை கொடிக்கம்பம் இல்லாமல் தேசிய கொடியைப் பறக்கவிடுவதற்கும் அல்லது தேசிய கொடி மீது ஒளி படும்படி வைப்பதற்கும் ஏதுவாக, விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டது. 

இதற்கு முன்னதாக இவை இரண்டும் தேசிய தினக் காலத்தில் மட்டுமே அனுமதிக்கப்பட்டன.ஒவ்வோர் ஆண்டும் தம் வீட்டுக்கு வெளியே தேசிய கொடியைப் பறக்கவிடுவதில் பெருமிதம் கொள்கிறார் புக்கிட் பாத்தோக் குடியிருப்பாளரான 29 வயது அமீலியா கோ. இந்த ஆண்டு தேசிய கொடியை அதிக காலம் பறக்கவிட்டது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

“கொவிட்-19 நெருக்கடி காலம் தொடங்கியபோது, நாட்டு மக்களின் ஒற்றுமையைப் பிரதிபலிக்கும் வகையில் தேசிய கொடியை வீட்டுக்கு வெளியே பறக்கவிட அரசாங்கம் ஊக்கப்படுத்தியது. அது தேசிய தினக் காலத்தின்போதும் தொடர்ந்தது அதிக உற்சாகத்தை ஏற்படுத்தியது,” என்று கூறினார் பொறியாளராகப் பணியாற்றும் 
திருவாட்டி கோ.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon