இவ்வாண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து நிபுணத்துவ சேவைகளில் 5,870 வேலைகள் வழங்கப் பட்டன.
அவற்றில் ஐந்தில் நான்கு வேலைகள் ‘பிஎம்இடி’ எனப்படும் நிபுணர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் தொழில்நுட்பர்களுக்கானவை.
அத்துடன், நிபுணத்துவ சேவைகள் துறையைச் சேர்ந்த நிறுவனங்கள் மூலமாக கிட்டத்தட்ட 2,070 வேலைப் பயிற்சி, வேலை இணைப்பு வாய்ப்புகளும் 1,080 பயிற்சி இடங்களும் வழங்கப்பட்டதாக மனிதவள அமைச்சர் ஜோசஃபின் டியோ தமது வாராந்திர வேலை நிலவர அறிக்கையில் நேற்று தெரிவித்தார்.
நிபுணத்துவச் சேவைகள் துறையின் துணைத் துறைகளான ஆலோசனை, விளம்பரம் மற்றும் சந்தைப்படுத்தல், வடிவமைப்பு, கணக்கியல், கட்டடக் கலை மற்றும் பொறியியல் ஆகியவை இந்த வாய்ப்புகளை வழங்குகின்றன.
நிபுணத்துவச் சேவைகள் துறையில் கொவிட்-19 நோய்ப் பரவல் ஏற்படுத்திய தாக்கம் சீரற்றதாக இருந்து வருகிறது என்று அமைச்சர் டியோ குறிப்பிட்டார்.
நோய்ப் பரவல் முறியடிப்புக் காலகட்டத்தின்போது கட்டுமானப் பணிகள் பெரும்பாலும் நிறுத்தி வைக்கப்பட்டதால் கட்டடக் கலை மற்றும் பொறியியல் துறை நடவடிக்கைகள் பெரும் வீழ்ச்சி கண்டன.
சட்ட நிறுவனங்களில் ஏறத்தாழ 70% பணிகள் குறைந்துவிட்டதாக சிங்கப்பூர் வழக்கறிஞர் சங்கத்தின் ஆய்வு தெரிவிக்கிறது.
இருப்பினும், தணிக்கையியல், கணக்கியல், வரிவிதிப்புச் சேவைகளுக்குத் தேவை இருந்ததால் கணக்கியல் துறை குறைவான பாதிப்பையே எதிர்கொண்டது. அதேபோல, ஆலோசனை, வடிவமைப்பு, விளம்பரம் மற்றும் சந்தைப்படுத்தல் ஆகியவற்றுக்கும் தேவை இருந்ததாகக் கூறப்பட்டது.
குறிப்பாக, ஆலோசனை சேவைகளில் தொழில்நுட்பம் மற்றும் இணையப் பாதுகாப்பு நிபுணத்துவத்திற்கு அதிக தேவை இருந்ததாக திருவாட்டி டியோ குறிப்பிட்டார்.
வேலைக்கான திறன்கள் துல்லியமாகப் பொருந்தாதபோதும் சரியான வேலை மனப்பான்மையைக் கொண்டுள்ள பணியிடைக்கால ஊழியர்களை வேலைக்கு எடுக்கும்படி நிறுவனங்களை அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
வாழ்க்கைத்தொழில் மாற்றும் திட்டங்கள் மூலம் அவர்கள் தேவையான திறன்களைப் பெற முடியும் என்றும் அவர் கூறினார்.
இதனிடையே, விளம்பரம் மற்றும் சந்தைப்படுத்தல் துறையில் உட்பொருள் உத்தியாளர், சமூக மேலாளர்கள், வர்த்தக மற்றும் சந்தைப்படுத்தல் விற்பனை நிர்வாகிகள் போன்ற பணிகளுக்கு அதிக தேவை இருக்கிறது.
விளம்பரம் மற்றும் சந்தைப்படுத்தல் நிபுணர்களுக்கு $4,750 முதல் $9,500 வரையும் வர்த்தக மற்றும் சந்தைப்படுத்தல் விற்பனை நிர்வாகிகளுக்கு $2,250 முதல் $4,500 வரையும் மாத ஊதியமாக வழங்கப்படுகிறது.
வடிவமைப்புச் சேவைகள் துறையில், வரைகலை, பல்லூடக வடிவமைப்பாளர்களுக்கு $6,750 முதல் $9,250 வரையும் உட்புற வடிவமைப்பாளர்கள், அழகுபடுத்துநர்களுக்கு $2,900 முதல் $4,600 வரையும் மாத ஊதியமாக வழங்கப்படுகிறது.
இறுதியாக, கணக்கியல் மற்றும் பொறியியல் துறைகளைப் பொறுத்தமட்டில் ஆழ்ந்த தேர்ச்சிகள் தேவைப்படுவதால் அத்தகைய திறன்களைக் கொண்டுள்ளோரே வேலைக்குத் தேர்ந்தெடுக்கப்படலாம் என்று திருவாட்டி டியோ சொன்னார்.
ஆயினும், வேலை தேடுவோர் நிறுவனங்கள் வழங்கும் வேலைப் பயிற்சி, வேலை இணைப்பு வாய்ப்புகள் மூலமாக பொருத்தமான திறன்களை வளர்த்துக்கொள்ள முடியும் என்றும் அமைச்சர் டியோ குறிப்பிட்டார்.