390 ஹெக்டரில் உயர்தொழில்நுட்ப உணவுப் பண்ணைகள் லிம் சூ காங் வட்டாரத்தை சீரமைக்க பெருந்திட்டம்

390 ஹெக்டரில் உயர்தொழில்நுட்ப உணவுப் பண்ணைகள் லிம் சூ காங் வட்டாரத்தை சீரமைக்க பெருந்திட்டம்

2 mins read
b9e6cce9-aa90-4d3b-9287-34c88f4da670
-

லிம் சூ காங் பகுதியை ஓர் உயர்தொழில்நுட்ப வேளாண்-உணவுக் குழுமமாக மறுமேம்பாடு செய்யப்படவுள்ளதாக சிங்கப்பூர் உணவு அமைப்பு நேற்று அறிவித்தது. உலகளாவிய உணவு விநியோகத்தில் ஏற்படக்கூடிய தடங்கலுக்கு எதிராக உள்ளூரிலேயே உணவு தயாரிக்கும் முயற்சிகளை நாடு தீவிரப்படுத்தி வருவதில் இப்பெருந்திட்டமும் அங்கம் வகிக்கும்.

தற்போது சிங்கப்பூர் 10 விழுக்காட்டுக்கும் குறைவான அளவு உணவுப்பொருட்களே உள்ளூரில் உற்பத்தி செய்கிறது. இதை 2030ஆம் ஆண்டுக்குள் 30 விழுக்காடாக உயர்த்துவதே இந்தப் பெருந்திட்டத்தின் நோக்கம்.

"தற்போதைய கொவிட்-19 கொள்ளை நோயால், உணவு வளங்களை விரிவுபடுத்துவதும் உணவு விநியோகச் சங்கிலி மீள்திறனுடன் இருப்பதும் மிக முக்கியமாகியுள்ளது," என அமைப்பு கூறியது.

சுமார் 390 ஹெக்டர் அளவிலான நிலம் இந்தப் பெருந்திட்டத்திற்கு மறுமேம்பாடு காணும் என்று அமைப்பு தெரிவித்தது. உயர்தொழில்நுட்பம், உயர் உற்பத்தித்திறன், வளங்களில் சிக்கனத்திறன் ஆகியவற்றைப் பெற்ற வேளாண்-உணவுக் குழுமமாக அது விளங்கும் என்றும் குறிப்பிடப்பட்டது.

தற்போது லிம் சூ காங் வட்டாரத்தில் இயங்கி வரும் பண்ணைகள் மேலும் பயன்மிக்கதாக விளங்க இத்திட்டம் கைகொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது 2 ஹெக்டர் நிலத்தில் அமைந்துள்ள ஒரு சராசரி காய்கறிப் பண்ணை, ஆண்டுக்கு ஒவ்வொரு ஹெக்டருக்கும் சுமார் 130 டன்கள் காய்கறிகளை உற்பத்தி செய்து வருகிறது. ஆனால் உயர்தொழில்நுட்பத்தைக் கொண்டு இயங்கும் ஒரு காய்கறிப் பண்ணையால் ஒரு ஹெக்டர் நிலத்தில் ஆண்டுக்கு 1,000க்கும் மேற்பட்ட டன்கள் காய்கறிகளை உற்பத்தி செய்ய முடியும் என்று அமைப்பு உதாரணம் காட்டியது. லிம் சூ காங் வட்டாரம் அதன் தற்போதைய உணவு உற்பத்தியை, மறுமேம்பாடு செய்த பின் மும்மடங்காக்கலாம் என்றும் அமைப்பு கூறியது.

பண்ணை உரிமையாளர்கள், வேளாண்-உணவு நிபுணர்கள் ஆகிய பங்காளிகளை ஆலோசனை கேட்டு அடுத்த இரண்டு, மூன்று ஆண்டு காலத்தில் அணுகும் என்று கூறப்பட்டது. மேம்பாட்டுப் பணிகள் 2024ஆம் ஆண்டு தொடங்கும் என்றும் அது கட்டம் கட்டமாக நடக்கும் என்றும் அமைப்பு அதன் அறிக்கையில் குறிப்பிட்டது.

2019ஆம் ஆண்டில் 111 உரிமம் பெற்ற உணவுப் பண்ணைகள் இருந்தன. அவற்றில் பெரும்பாலானவை நாட்டின் வடமேற்குப் பகுதியில் அமைந்திருந்தன. இந்நிலையில் லிம் சூ காங் பகுதியில் அமைந்துள்ள அனைத்து பண்ணைகளும் அவற்றின் குத்தகைக் காலம் முடியும் வரை தொடர்ந்து இருக்கலாம் என்று அமைப்பு தெரிவித்தது.

இவ்வாண்டுக்கும் 2022ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் பத்து உணவுப் பண்ணைகள் மற்றும் 13 வேறுவகை பண்ணைகளின் குத்தகைக் காலம் முடிவுறும். இவற்றுக்கு குறுகிய கால வாடகை ஒப்பந்த நீட்டிப்பு வழங்கப்படும் என்றும் அதன் பின்னர் பெருந்திட்டத்திற்கு ஏற்ப நிலம் மறுமேம்பாடு செய்யப்படும் என்றும் அமைப்பு கூறியது.