கொரோனா பிடியில் டிரம்ப், மெலனியா

கொரோனா பிடியில் டிரம்ப், மெலனியா

2 mins read
c6595ba0-6ba8-4eef-a95a-a92ca16ea2cd
செப்டம்பர் 11 அன்று எடுக்கப்பட்ட படத்தில் முகக் கவசமின்றி காணப்படும் அதிபர் டிரம்ப், மெலனியா டிரம்ப். படம்: ராய்ட்டர்ஸ் -

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், அவரின் மனைவி மெலனியா ஆகியோருக்கு கொரோனா கிருமித்தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால் நிச்சயமற்ற பாதையில் நாட்டின் தலைமைத்துவம் தூக்கியெறியப்பட்டதுடன் கொள்ளை நோயால் ஏற்பட்டுள்ள நெருக்கடி மேலும் அதிகரித்துள்ளது.

கிட்டத்தட்ட 7.5 மில்லியன் அமெரிக்கர்களைத் தாக்கியுள்ள கொரோனா கிருமி, அரசாங்கத்தின் உயர் மட்டத்திலும் ஊடுருவிச் சென்றுவிட்டதற்கான அறிகுறி இது என்று கூறப்படுகிறது. அதிபர் டிரம்பின் நெருங்கிய ஆலோசகர்களில் ஒருவரான திருவாட்டி ஹோப் ஹிக்ஸ் என்பவரும் கொரோனா பாதிப்புக்குள்ளானார்.அதைத் தொடர்ந்து கொவிட்-19 பரிசோதனையைச் செய்துகொண்டதில் 74 வயது டிரம்புக்கும் அவரின் துணைவியாருக்கும் கிருமி தொற்றியிருப்பது உறுதியானது. இதன் தொடர்பில் அதிபர் டிரம்ப் தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

"கொவிட்-19 கிருமியால் நானும் என் மனைவியும் பாதிக்கப்பட்டுள்ளோம். உடனே எங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டோம். நிச்சயம் இதிலிருந்து ஒன்றாக மீண்டு வருவோம்," என்று அதிபர் குறிப்பிட்டிருந்தார். இதற்கிடையே தம் அதிபர் பணிகளை திரு டிரம்ப் தொடர்ந்து ஆற்றி வருவார் என எதிர்பார்க்கலாம் என்றார் அதிபரின் மருத்துவரான ஷோன் கொன்லி.

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் திரு டிரம்பின் இந்த அறிவிப்பு வந்துள்ளது. இதனால் ஜோ பைடனுக்கு எதிரான தமது அதிபர் பிரசார இயக்கத்திற்கு உடனடி நெருக்குதல்கள் வரலாம்.

கிருமித்தொற்றுக்கான அறிகுறிகள் ஏதும் இல்லாவிட்டாலும் திரு டிரம்ப் பிரசார இயக்கத்தில் கலந்துகொள்ளாமல் வெள்ளை மாளிகையில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இருப்பார். கிருமித்தொற்றால் கடுமையாகப் பாதிக்கப்படாவிட்டாலும் பல மாதங்களாக கொள்ளை நோயின் கடுமையை அவர் பெரிதுபடுத்தாத போக்கு அவரது அரசியல் வாழ்க்கைக்குப் பெரும் சேதத்தை ஏற்படுத்தலாம் என்பது பல அரசியல் ஆர்வலர்களின் கருத்து.

பொது இடங்களில் முகக் கவசம் அணிவதைப் பல முறை தவிர்த்து வந்த திரு டிரம்ப், அதன் பயன் என்ன என்று கேட்டு முகக் கவசம் அணிந்திருந்த திரு பைடனைக் கேலி செய்திருந்த சம்பவமும் குறிப்பிடத்தக்கது.

புதன்கிழமையன்று திரு டிரம்புடன் பிரசாரத்துக்காக விமானத்தில் செல்லவிருந்த திருவாட்டி ஹிக்ஸ், முகக் கவசமின்றி காணப்பட்டார். அதிபர் டிரம்ப் இம்மாதம் 15, 22 தேதிகளன்று ஜோ பைடனை இரண்டாம், மூன்றாம் அதிபர் விவாதங்களுக்குச் சந்திக்கவுள்ளதாக இருந்தது.