தொற்று நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு முயற்சிகளை பலப் படுத்துவதே சிங்கப் பூருக்கும் சீனாவுக்கும் உள்ள முக்கிய கடமை என சிங்கப்பூர் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவும் ஒத்துழைப்பும் நான்காம் பத்தாண்டில் அடியெடுத்து வைப்பதாக 'சாவ்பாவ்' சீன நாளி\தழுக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் அவர் தெரிவித்தார். தொற்றுநோய் கட்டுப்பாடு தவிர்த்து இரு நாடுகளும் இணைந்து ஈடுபட வேண்டிய இதர அம்சங்களையும் திரு ஹெங் பட்டியலிட்டார். விதிகளின் அடிப்படையிலான பலதரப்பு வர்த்தக முறை, நிதி, தொழில்நுட்பம், மூப்படையும் மக்கள்தொகை நிர்வாகம் உள்ளிட்டவை அவை.
"நமது இப்போதைய முக்கியப் பணி கொள்ளைநோயைக் கட்டுப்படுத்துவது. இதனைக் கட்டுப்படுத்திவிட்டால் பொருளியல், சமூக நடவடிக்கைகள் படிப்படியாக மீளும். எனவேதான் இந்தப் பணி இப்போதைய அவசியமாகக் கருதப்படுகிறது," என்றார் துணைப் பிரதமர்.சீனாவின் யுவான் நாணய பயன்பாடு, மின்னிலக்க நிதி போன்றவை தொடர்பிலும் இரு நாடுகளும் ஒத்துழைக்க வேண்டி உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
"பொருளியல் நிலைத்தன்மைக்கும் வளர்ச்சிக்கும் நிதிதான் முக்கிய அடித்தளம். ஆசிய நிதி நெருக் கடியின்போதும் 2008 உலக நிதி நெருக்கடியின்போதும் இது உணரப்பட்டது," என்றார் திரு ஹெங்.
சிங்கப்பூரும் சீனாவும் தங்களுக்கு இடையிலான அதிகாரபூர்வ உறவின் முப்பதாண்டு நிறைவை இவ்வாண்டு கடைப்பிடித்தன. சீனாவின் மிக மூத்த அரசதந்திரியான யாங் ஜியேச்சி கடந்த ஆகஸ்டில் சிங்கப்பூர் வருகை தந்து பிரதமர் லீ சியன் லூங் உள்ளிட்ட தலைவர்களைச் சந்தித்துச் சென்றார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் தனது 71வது ஆண்டு விழாவைக் கொண்டாடிய சீனாவுக்கு அதிபர் ஹலிமா யாக்கோப்பும் பிரதமர் லீயும் தங்களது வாழ்த்துகளை அனுப்பி உள்ளனர்.

