சிங்கப்பூரில் பணிப்பெண் தேவையும் பற்றாக்குறையும்: கொவிட்-19 கிருமிப் பரவலால் ஏற்பட்ட விளைவு

சிங்கப்பூரில் பணிப்பெண்கள் பிரச்சினையை கொவிட்-19 மேலும் பெரிதாக்கிவிட்டது. ஒருபுறம் பணிப்பெண்களுக்குத் தேவையும் மறுபுறம் அவர்களுக்கான பற்றாக்குறையும் கூடிவிட்டது. புதிய பணிப்பெண்களை வரவழைக்க முடியாத சூழலில், இருப்பவர்களைக் கொண்டே நிலைமையைச் சமாளிக்க வேண்டி இருக்கிறது. இதைச் சில பணிப்பெண்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்வதாகக் கூறப்படுகிறது. சில முதலாளிகள் பணிப்பெண்களை அதிக வேலைகளில் ஈடுபடுத்துவதாகவும் சொல்லப்படுகிறது. அரசாங்கம் மேலும் ஆதரவு தரவேண்டும் என்று முதலாளிகள், பணிப்பெண்கள், முகவர்கள் எல்லாத் தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தச் சூழலில் இந்த விவகாரத்தை நாடாளுமன்றம் அடுத்தவாரம் கையில் எடுக்கிறது.

கொவிட்-19 நோய்ப்பரவல் முறியடிப்புக் காலகட்டத்தில், ஜூன் மாதம் முதல் குழந்தை தன்யா சமிக்ஷா பிறந்தபோது 35 வயது எ.துர்கா, உதவிக்கு உற்றார் உறவினர் வீட்டுக்கு வர முடியாத நிலையில், பணிப்பெண்ணையும் அமர்த்த முடியாமல் சமாளிக்க வேண்டியிருந்தது.

சந்தைப்படுத்துதல் துறையில் பணியாற்றும் திருமதி துர்கா, சமையல் தேவைகளுக்காகவும் தமது குழந்தை தமிழ் உரையாடல்களைக் கேட்டு வளர வேண்டும் என்பதற்காகவும் இந்தியப் பணிப்பெண்ணைப் பெற விரும்பினார்.

“ஐந்து மாதங்களாக பத்துக்கும் அதிகமான முகவர்களை அணுகினேன். இறுதியில் எனது 90 வயது தாத்தாவைப் பார்த்துக்கொள்வதற்காக என் தாயார் வீட்டில் இருந்த பணிப்பெண்ணை எனது தேவைகளுக்காக என் தாயார் விட்டுக்கொடுத்தார். என் பெயருக்கு அவரை மாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டது,” என்றார் துர்கா.

“பணிப்பெண்களைப் பகிர்வது சட்டப்படி குற்றம். எனினும், நியாயமான முறையில் பணிப்பெண் சேவையை குடும்பத்தினர் பகிர்ந்துகொள்ளும் வசதியை அரசாங்கம் ஏற்படுத்தினால் பலருக்கு உதவியாக இருக்கும்,” என திருமதி துர்கா கூறினார்.

இவ்வாண்டு ஜூன் மாத நிலவரப்படி சிங்கப்பூரில் தற்போது 252,600 பணிப்பெண்கள் பணியாற்றுகின்றனர். இது, கடந்தாண்டு டிசம்பர் மாத எண்ணிக்கையான 261,800ஐக் காட்டிலும் 3.5% குறைவு. 2015ஆம் ஆண்டு முதல் அதிகரித்து வந்த இந்த எண்ணிக்கை 2020ல் முதன்முறையாகக் குறைந்திருப்பதை மனிதவள அமைச்சின் இணையப்பக்கம் காட்டுகிறது.

அனைத்துலக அளவில் நிலவும் கடுமையான பயணக் கட்டுப்பாட்டுச் சூழலால் புதிய பணிப்பெண்கள் சிங்கப்பூருக்கு வருவது மிகக் கடினம். வெளிநாட்டு ஊழியர்களை சிங்கப்பூருக்கு வரவழைக்கத் திட்டமிடும் முதலாளிகளும் முகவர்களும் மனிதவள அமைச்சின் அனுமதியைப் பெறவேண்டும். வெளிநாட்டிலிருந்து வரும் பணிப்பெண்களை 14 நாட்கள் ஹோட்டலில் தனிமைப் படுத்துவதற்கு $1,700 முதல் $2,000 வரை செலவாகிறது. $1200-$1500 வரையிலான முகவர் கட்டணம், $60-$300 வரையிலான ஊழியர் தீர்வை, $450-$650 வரையிலான சம்பளம் என மொத்தமாக ஒரு புதிய பணிப்பெண்ணுக்கான செலவு மிக அதிகமாக உள்ளது.

இதில், நிரந்தரவாசிகள் பணிப்பெண்களுக்காக விண்ணப்பிக்கும்போது கூடுதல் சிரமத்தை எதிர்நோக்குவதாகக் கூறினார் பணிப்பெண் முகவர் நிர்மலா, வெளிநாடுகளிலிருந்து பணிப்பெண்கள் இங்கு வருவதற்கு அரசாங்கம் இன்னமும் அனுமதி வழங்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

“புதிய பணிப்பெண்கள் வரமுடியாத நிலையில், வேலை அனுமதிக் காலம் முடிந்த பணிப்பெண்களை சொந்த நாடுகளுக்குத் திருப்பி அனுப்பாமல் வேறு வீடுகளுக்கு மாற்றும்படி முதலாளிகளை ஊக்குவித்து வருகிறோம்,” என்று மனிதவள அமைச்சு தமிழ் முரசிடம் தெரிவித்தது. சிங்கப்பூரில் வீடு மாறும் பணிப்பெண்களுக்கான தேவை கூடியிருப்பதாகவும் அமைச்சு குறிப்பிட்டது.

சமையல், மொழித் தொடர்பு, சமயம் சார்ந்த காரணங்களுக்காக, இந்திய பணிப்பெண்களையே இந்தியர்கள் அதிகம் விரும்புகின்றனர். உலக நாடுகள் முழுவதிலும் பயணக் கட்டுப்பாடுகள் நிலவினாலும் கிருமிப் பரவல் மிக அதிகமாக உள்ள இந்தியாவிலிருந்து பணிப்பெண்களை வரவழைப்பது மேலும் கடினமாக இருப்பதாக திருவாட்டி நிர்மலா தெரிவித்தார்.

மருத்துவப் பணியாளரான 41 வயது ஜானுவின் வீட்டுக்கு ஜனவரி மாதம் வந்த புதிய பணிப்பெண் ஒரு மாதத்திற்குள் தாய்நாட்டுக்குத் திரும்பவேண்டும் என்றதால், தமது வீட்டில் முன்னர் பணியாற்றியவரை இந்தியாவிலிருந்து மீண்டும் வரவழைக்க $1,700 கட்டணம் செலுத்தினார். மார்ச் மாதம் மனிதவள அமைச்சின் ஒப்புதல் கிடைத்த மறுநாளே இந்தியாவில் தேசிய முடக்கநிலை நடைமுறைக்கு வந்தது. இந்த மாத இறுதிக்குள் முன்னாள் பணிப்பெண் வருவார் என திருமதி ஜானு எதிர்பார்க்கிறார்.

குறையும் தெரிவுகளும் தரமும்

உள்ளூரிலேயே வேலை மாறும் பணிப்பெண்களில் எவரேனும் ஒருவரைத் தேர்ந்தெடுக்க வேண்டிய சூழலில் தற்போது இருக்கும் முதலாளிகள், அந்தப் பணிப்பெண்கள் பலர் அதிக எதிர்பார்ப்புகளை வைத்திருப்பதாக பணிப்பெண் முகவர்கள் கூறுகின்றனர்.

“நீண்ட காலம் பணியில் இருந்தவர்கள் வேறு வீட்டுக்கு மாறுவது சுமுகமாக இருக்கும். வேலையில் சேர்ந்து ஓராண்டு ஆகாத நிலையில் சிலர் கூடுதல் சம்பளம் எதிர்பார்ப்பதுடன் வீட்டில் பிள்ளைகள், முதியவர்கள் இருக்கக்கூடாது என எதிர்பார்க்கின்றனர்,” என்று பல முகவர்களும் கூறினர்.

பொறுப்பில்லாத முறையில் நடந்துகொண்ட தமது பணிப்பெண்ணை திருப்பி அனுப்பமுடியாமலும் வேறு ஒருவரை அமர்த்த முடியாத நிலைமையிலும் கிருமிப் பரவல் முறியடிப்புக் காலகட்டத்தில் திரு மேத்தியூ மேக்னஸ் சிரமப்பட்டார்.

“நானும் என் மனைவியும் முன்களப்பணியாளர்கள். எனது 29 வயது இந்தியப் பணிப்பெண் வேலைகளைச் சரிவர செய்யாததுடன் பெரியவர்களுக்கு மரியாதை தராமலும் கூடா நட்புகளையும் வைத்திருந்தார்,” என்றார் திரு மேக்னஸ். எனினும் அவரைத் திருப்பி அனுப்புவதற்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தபோது அந்தப் பணிப்பெண் மனம் மாறி வீட்டிலேயே தங்க ஒத்துக்கொண்டதாக அவர் கூறினார்.

சில நேரங்களில் முதலாளிகளுக்கு ஏற்படும் பண நெருக்கடியால் பணிப்பெண்கள் வேலையை இழக்கின்றனர்.

“கிட்டத்தட்ட ஈராண்டுகளாக என் வீட்டில் அருமையாக வேலை செய்திருந்த பணிப்பெண்ணை வேலையிலிருந்து அனுப்பவேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டேன். கிருமிப்பரவலால் எனது வர்த்தகம் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தது,” என்றார் 42 வயது மோகன்.

கொவிட்-19 சூழலில் சிலர் தங்களது குடும்ப உறுப்பினர்களுடன் இருக்க விரும்பி சிலர் தங்கள் நாடுகளுக்குத் திரும்புகின்றனர். இதனால் இங்குள்ள முதலாளிகளின் தெரிவுகள் தொடர்ந்து குறைந்து வருகின்றன. குறைந்த எண்ணிக்கையிலானவர்கள், பெரும்பாலும் தவிர்க்க முடியாத தனிப்பட்ட காரணங்களால் சொந்த நாட்டுக்குத் திரும்புவதாக மற்றொரு பணிப்பெண் முகவரான திருவாட்டி ராணி கூறினார்.

புதியவரை வரவழைப்பது அதிக செலவு என்பதோடு, வேலை செய்யும் வீட்டை பணிப்பெண்களுக்குப் பிடிக்கவில்லை என்றாலும் பிரச்சினைதான் என்ற திருவாட்டி ராணி, புதியவர்கள் வந்தாலும் அவர்களுக்குப் பயிற்சி கொடுப்பது கடந்த சில மாதங்களாக மிகவும் சிரமமாக உள்ளது என்றார்.

இங்குள்ள பணிப்பெண்களின் வேலை ஒப்பந்தங்களின் புதுப்பிப்பு கூடியிருப்பதாகவும் அவர் சுட்டினார். அதேநேரத்தில், பணிப்பெண் முகவர்கள் ஐந்து விழுக்காடு வர்த்தகத்தைத் தக்கவைப்பதுகூட சிரமமாக இருப்பதாகக் கூறிய ராணி, அரசாங்கத்தின் நிதியுதவி கிடைத்தாலும் அது போதாது என்று அவர் கூறினார்.

பகுதிநேரப் பணிப்பெண்கள்

பகுதிநேரப் பணிப்பெண்களுக்கான தேவை தற்போதை சூழலில் வெகுவாக அதிகரித்துள்ளதாகவும் அவர்களுக்கு பற்றாக்குறை இருப்பதாகவும் பகுதிநேரப் பணிப்பெண்கள் சேவை வழங்கும் த. சேகரன் தெரிவித்தார். பகுதி நேரப் பணிப்பெண்களில் சிலர் சிங்கப்பூரர்களாகவும் நிரந்தரவாசிகளாகவும் உள்ளனர். பலர், மலேசியாவையும் பாத்தாமையும் சேர்ந்தவர்கள். மலேசியாவின் நடமாட்டக்க கட்டுப்பாட்டால் பணிப்பெண்களின் வரவு பாதிக்கப்பட்டது. அதே நேரத்தில் இத்தகைய வெளிநாட்டவர்களைப் பணிக்கு அமர்த்துவதற்கான வேலை அனுமதி ஒதுக்கீடு(கோட்டா) தேவைக்குக் குறைவாகவே உள்ளது,” என்று அவர் கூறினார்.

மலேசியாவின் நடமாட்டக் கட்டுப்பாட்டால் நாடு திரும்ப முடியாமலும் வேலை இழந்த நிலையிலும் இருந்த மலேசியர்கள் பலர் பகுதிநேரப் பணிப்பெண் வேலையைச் செய்ய முற்பட்டபோதும் வேலை அனுமதி ஒதுக்கீடு காரணமாக அவர்களைப் பணிக்கு அமர்த்த முடியவில்லை. சிங்கப்பூரர்களுக்கான இடத்தை சிங்கப்பூரர்கள் நிரப்புவதில்லை, ஏனெனில் அவர்களில் பெரும்பாலானோர் இந்த வேலைக்கு வர விரும்பமாட்டார்கள்,” என்றார் திரு சேகரன்.

பணிப்பெண்களுக்கும் சிரமம்

தற்போதைய சூழலில் சிலருக்கு வேலைப்பளு வெகுவாக உயர்ந்துள்ளது. ஓய்வெடுக்க வேண்டிய நாட்களில் பணிப்பெண்களை வேலை செய்யச் சொல்லும் முதலாளிகளும் இருப்பதாக ‘ஹோம்’ அமைப்பு தெரிவித்தது.

தங்களுக்கு உணவு வாங்கிக் கொள்ளுதல், உடற்பயிற்சி, பணம் அனுப்புதல் போன்ற அத்தியாவசிய காரியங்களுக்கு முதலாளிகள் இக்காலக்கட்டத்தில் பணிப்பெண்களைச் செய்ய விடாமல் தடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

நோய்ப்பரவல் காலகட்டத்தின்போது வீட்டைவிட்டு வெளியே செல்ல இயலாத பணிப்பெண்களுக்கு தனிமை உணர்வு கூடுவதாகவும் அந்த அமைப்பு கூறுகிறது. இக்காலகட்டத்தில் ஊதியம் குறைந்த அல்லது இழந்த முதலாளிகளால் தங்களது பணிப்பெண்களுக்குச் சம்பளம் கொடுக்க இயலாதபோது அதனால் பணிப்பெண்கள் பாதிப்பதாகவும் அது குறிப்பிட்டார்.

அரசாங்கம் கூடுதலாக உதவலாம்

வீட்டில் தங்கும் உத்தரவை நிறைவேற்றும் பணிப்பெண்ணுக்காக முதலாளிகள் 240 வெள்ளி வரையிலான மானியத்தைப் பெறலாம் என்று மனிதவள அமைச்சு முன்னதாக அறிவித்திருந்தது. ஆயினும், இந்தக் தொகை போதாது என்றும் பணிப்பெண்ணின் உதவியை அதிகம் தேவைப்படுவோருக்கு மானியத்தை அரசாங்கம் இன்னும் தாராளமாக வழங்கலாம் என்றும் சில முதலாளிகளும் முகவர்களும் கருதுகின்றனர். அத்துடன், இக்காலகட்டத்தில் பணிப்பெண்களே சில செலவுகளை ஏற்கும்படி மனிதவள அமைச்சு கட்டாயப்படுத்தினால் நல்லது என்று அவர்கள் கூறுகின்றர்.

முதலாளிகளும் பணிப்பெண்களும் தங்களது எதிர்பார்ப்புகளை சூழலுக்கு ஏற்ப மாற்றிக்கொண்டு நியாயமாக நடந்துகொண்டால் இரு தரப்பினருக்குமே பயன் கிடைக்கும் என்று பணிப்பெண் முகவரான திருவாட்டி பானுமதி கருதுகிறார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!