'சிங்கப்பூரில் அதிக பெண்கள் இதய நோய்களால் உயிரிழப்பு'

- அசதி
-செரிமானமின்மை
- கழுத்து, தாடை, தோள்ப்பட்டை போன்றவற்றில் ஏற்படும் வலி
- சுவாசப் பிரச்சினை
- வாந்தி

இதயப் பிரச்சினைகளின் தொடர்பில் பெண்களுக்கு ஏற்படும் அறிகுறிகளில் இவை சில.

இந்த அறிகுறிகள் பெண்களுக்கு ஏற்பட்டால் சாதாரணமாக எடுத்துக்கொள்ளாமல் தேவையான மருத்துவ உதவியை நாடுவது அவசியம்.

எவ்வித அறிகுறியும் இல்லாமல்கூட பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படக்கூடும் என கிளனிகள்ஸ் மருத்துவமனையின் இதய நோய் நிபுணர் டாக்டர் ரோஹித் குரானா குறிப்பிட்டுள்ளார். நீரிழிவு போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படும் மரத்துப்போகும் தன்மையால் வலி போன்ற அறிகுறிகளை உணர முடியாமல் போவதுமுண்டு என்கிறார் டாக்டர் குரானா.

ஆண், பெண் ஆகிய இரு பாலருக்கும் மார்பில் ஏற்படும் வலி இதயப் பிரச்சினைக்கான அறிகுறியாக உள்ளது.

பெண்களிடையே மோசமான உயிர்க்கொல்லியாக...

சிங்கப்பூரில் பெண்களிடையே மோசமான உயிர்க்கொல்லி நோயாக மார்பகப் புற்றுநோய் கருதப்படுகிறது.

ஆனால், அதனைப் பொய்யாக்கி அதிக எண்ணிக்கையிலானோரைப் பலிவாங்கியுள்ளது இதய நோய்.

‘கோ ரெட் ஃபார் வுமன்’ எனும் ஆய்வில் பங்கேற்ற 34 விழுக்காட்டினர், மார்பகப் புற்றுநோய்தான் மாபெரும் உயிர்க்கொல்லி என்று கருத்துரைத்துள்ளனர்.

கடந்த ஆண்டு சிங்கப்பூரில் இதய நோயால் உயிரிழந்த பெண்களின் எண்ணிக்கை 2,689; ஆனால், மார்பகப் புற்றுநோயால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 445.

பெண்கள், குறிப்பாக இளம் வயதினர், இதயப் பிரச்சினைகளால் ஏற்படும் அபாயத்தைக் கண்டுகொள்வதில்லை என மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையின் இதய நோய் நிபுணர் டாக்டர் கோ பிங் பிங் கருத்துரைத்துள்ளார்.

“புற்றுநோய்களை விட ஆறு மடங்கு அதிகமாக இதய நோயால் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர்,” என்றார் அவர்.

'விழிப்புணர்வு இல்லை'

தங்களுக்கும் மாரடைப்பு ஏற்படக்கூடும் என்ற அபாயத்தைப் பல பெண்கள் உணர்வதில்லை என்று கூறப்படுகிறது. ரத்த நாளங்களில் படியும் கொழுப்பு, ரத்தக் கட்டிகள் போன்றவை இதய நோயால் கடந்த ஆண்டில் இங்கு பல பெண்களின் உயிரிழப்புக்குக் காரணம் என பிறப்பு, இறப்புப் பதிவகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் தொடர்பில், கடந்த ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை, 21 முதல் 64 வயது வரையிலான 1,002 பெண்களிடையே சிங்கப்பூர் இதய அற நிறுவனம் நடத்திய ஆய்வில், 9 விழுக்காட்டினர் மட்டுமே இந்தத் தகவலைத் தெரிந்திருந்தனர்.

இதய செயலிழப்பு, மாரடைப்பு, மூளைக்கு ரத்தம் செல்வது தடைப்பட்டு பக்கவாதம், மூளை பாதிப்பு, இறப்பு போன்றவை பொதுவாக அறியப்படும் இதயப் பிரச்சினைகள்.

இதய நோய் தொடர்பான அறிகுறிகள் தொடர்பான விழிப்புணர்வு பெண்களிடையே அவ்வளவாக இல்லாததால், அந்த நோயைக் கண்டுபிடிப்பது, அதற்கு சிகிச்சை அளிப்பது போன்றவையும் தாமதிக்கப்படுகின்றன. அதனால் நோயின் தீவிரம் அதிகமான பிறகே கண்டுபிடிக்கப்படும் அபாயம் நிலவுகிறது.

உயர் ரத்த அழுத்தம், உயர் ரத்த கொழுப்பு, நீரிழிவும் புகைபித்தல், உடலுழைப்பு, உடற்பருமன், அதிக எடை, பரம்பரை போன்ற பல அம்சங்கள் இதய நோய்க்கான காரணிகளாக உள்ளன.

மாதவிடாய் நின்ற பிறகு பெண்களுக்கு ஆஸ்ட்ரஜென் ஹார்மோன் சுரப்பு நின்று விடுவதால், அவர்களுக்கு இதய நோய் ஏற்படும் அபாயம் அதிகரிப்பதாக டாக்டர் கோ குறிப்பிடுகிறார்.

வருமுன் காக்க... வந்தபின் பராமரிக்க...

இதய நோய்கள் ஏற்படுவதைத் தவிர்க்க சில ஆலோசனைகளையும் வழங்குகிறார் மருத்துவர் குரானா.

1. ஆரோக்கியமான உணவுப் பழக்கம் - டிரான்ஸ் கொழுப்பு, உப்பு, சர்க்கரை போன்ற உணவுகளைத் தவிர்ப்பது அல்லது குறைப்பது

2. புகை பிடிப்பதைத் தவிர்ப்பது - சிகரெட்டுகளில் இருக்கும் ரசாயனங்களால் ரத்த நாளங்கள் சுருங்கி பல பிரச்சினைகளுக்கு வழிவகுக்கக்கூடும்

3. உடலுழைப்பு, உடற்பயிற்சி மேற்கொள்வது - வாரத்துக்கு குறைந்தபட்சம் 150 நிமிட உடற்பயிற்சி

4. ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரிப்பது - அதிக உடற் பருமன் இருந்தால் உயர் ரத்த அழுத்தம், உயர் ரத்தக் கொழுப்பு, இன்சுலின் எதிர்ப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்

5. மன அழுத்தத்தைக் குறைத்துக்கொள்வது - அதிகம் உண்பது, குடிப்பழக்கம் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்

6. நல்ல உறக்கம் - சுமார் 7 முதல் 8 மணி நேர உறக்கம் தேவை; உடற்பருமன், உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, நீரிழிவு, மன அழுத்தம் போன்ற பிரச்சினைகளை தூக்கமின்மை ஏற்படுத்தக்கூடும்.

7. சீரான இடைவெளிகளில் ரத்த அழுத்தம், ரத்த சர்க்கரை அளவும் ரத்த கொழுப்பு அளவு போன்றவற்றைப் பரிசோதிப்பது - பிரச்சினைகளை கூடிய விரைவில் கண்டுபிடிக்க உதவும்.


அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!