கிருமிப்பரவல் காலக்கட்டத்தில் தனிமையில் இருக்கும் முதியோருடன் தொடர்பில் இருப்பதற்காக உருவாக்கப்பட்ட செயலி ஒன்றை நிரலிடுதல் போட்டி ஒன்றில் பங்கேற்ற ஒரு குழு உருவாக்கியது. ஆனால், சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர் சமூகத்திற்கு மற்றோர் அவசரத் தேவை இருப்பதை உணர்ந்தனர். எனவே, 'கால் ஹோம்' (Call Home) என்ற இணைய அழைப்பு சேவையின்மீது தொழில்நுட்ப வல்லுநர்களான அந்தக் குழுவினர் தங்களது கவனத்தைத் திருப்பினர்.
இணைய வசதி பல கிராமங்களில், குறிப்பாக பங்களாதேஷிலுள்ள கிராமங்களில் கிடைப்பது அரிதாக இருப்பதாக அரசாங்க அமைப்பு ஒன்றில் பணியாற்றும் குமாரி குளோரியா சுவா, 26, தெரிவித்தார். "பங்களாதேஷைக் காட்டிலும் இந்தியாவில் இணைய வசதி அதிக பரவலாக உள்ளது," என்று அவர் கூறினார்.
இணைய வசதி இல்லாத தங்கள் குடும்பத்தினரோடு பேச ஊழியர்கள் 'வாட்ஸ்அப்' அழைப்புகளை மேற்கொள்ள முடியாது. தரைவழி இணைப்புகளின் (landline) மூலம்தான் அவர்களிடம் பேச முடிவதால் முன் கட்டண அட்டைகளை ஊழியர்கள் இங்குள்ள கடைகளிலிருந்து வாங்க வேண்டி இருக்கிறது. இதற்காக அவர்கள் தங்களது மாதச் சம்பளத்தில் 10 விழுக்காடு ( கிட்டத்தட்ட 40 வெள்ளி) செலவு செய்யவேண்டும்.
ஆயினும், கிருமித்தொற்று காலக்கட்டத்தில் தங்களது குடும்பத்தாருடன் பேசுவது அவர்களுக்கு மிகவும் அரிதாகிவிட்டது.
டுவில்லியோ (Twilio) என்ற அந்தச் செயலி, 3ஜி அழைப்பை தரைவழி தொலைபேசிச் சேவையுடன் இணைக்கிறது. அதாவது, 3ஜி அழைப்பை சாதாரண தொலைபேசி வழியாக ஏற்க இந்தச் செயலி வகை செய்கிறது. ஒரு மணி நேரத்திற்கு இந்தச் செயலியின் வழியாக பேசுவதற்கு 1.5எம்பி தரவு (டேட்டா) மட்டுமே தேவைப்படுகிறது.
ஊழியர்களின் அழைப்பு அட்டைகளுக்காக கடந்த சில மாதங்களாக கிட்டத்தட்ட 1 பில்லியன் வெள்ளியைச் செலவழித்து 'டிடபிள்யூசி2' ஊழியர் நல அமைப்பு இந்தத் திட்டத்தை வரவேற்பதாகத் தெரிவித்தது.

