திரு லியோங் தமது வலைப் பதிவில் பகிர்ந்துகொண்ட தகவல் உண்மையல்ல என்று அவருக்குத் தெரியாமல் இருந்திருக்கலாம். ஆனால் உண்மை எது என்று கண்டறிய அவர் எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்று நீதிமன்ற சாட்சிக் கூண்டிலிருந்து கூறினார் பிரதமர் லீ.
வலைப்பதிவாளர் திரு லியோங் ஸி ஹியனுக்கு எதிராக பிரதமர் லீ சியன் லூங் தொடுத்துள்ள அவதூறு வழக்கு விசாரணை நேற்று தொடங்கியது. விசாரணையின் இரண்டாம் பாதியில் பிரதமர் இவ்வாறு கூறினார்.
திரு லியோங்கின் வழக்கறிஞராக எதிர்க்கட்சி அரசியல்வாதி திரு லிம் தியென் வாதிடுகிறார்.
உண்மை எது என தம் கட்சிக்காரருக்குத் தெரியாத நிலையில் திரு லியோங் தீங்கிழைக்கும் எண்ணத்துடன் செயல்படுவதாக ஏன் பிரதமர் லீ குற்றம் சாட்டுகிறார் என்று திரு லிம் வினவினார்.
அதற்கு திரு லீ, "அவர் உண்மையை அறிய முயற்சி எடுக்கவில்லை. இது உண்மையை அவமதிக்கும் பொறுப்பற்ற செயல்," என்று பதிலளித்தார். 2018ஆம் ஆண்டு நவம்பர் 7ஆம் தேதியன்று திரு லியோங் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துகொண்ட ஒரு பதிவு தொடர்பில் பிரதமர் லீ அவதூறு வழக்கு தொடுத்துள்ளார்.
'1எம்டிபி' தொடர்பான மோசடியில் கள்ளப் பணத்தை நல்ல பணமாக்குவதில் சிங்கப்பூர் வங்கிகள் உதவும் என்று பிரதமர் லீயும் முன்னாள் மலேசிய பிரதமர் நஜிப் ரசாக்கும் ரகசிய ஒப்பந்தங்கள் செய்துகொண்டதாக 'தி கவரேஜ்' மலேசிய செய்தித் தளத்தில் கூறப்பட்டது. இதற்கான இணைப்பு திரு லியோங் பகிர்ந்த பதிவில் இருந்தது.
மலேசியாவில் உள்ள சிங்கப்பூர் தூதரகம், சிங்கப்பூர் நாணய ஆணையம், தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் ஆகியவற்றை அடுத்து சட்ட, உள்துறை அமைச்சர் கா.சண்முகமும் வழக்கு தொடர்பில் அறிக்கை வெளியிட்டார். 'பொஃப்மா' எனப்படும் இணையவழி பொய்ச் செய்திக்கும் சூழ்ச்சித் திறத்திற்கும் எதிரான பாதுகாப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டபோது, உண்மையை அறியாத நிலையில் பொய்ச் செய்திகளைப் பரப்புவோர் அஞ்சத் தேவையில்லை என்று திரு சண்முகம் குறிப்பிட்டதாக திரு லிம் நேற்று நீதிமன்றத்தில் சுட்டினார்.
உண்மையல்லாத தகவல்களைப் பரப்புவோரை 'பொஃப்மா' சட்டம் தண்டிக்காது என்றும் அவ்வாறு செய்வோருக்கு எதிராக அவதூறு வழக்கு தொடுப்பது நியாயமற்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இருப்பினும் இவை சட்டம் தொடர்பான வாதங்கள் என்றும் சாட்சியிடத்தில் கேட்கப்படாமல் தம்மிடம் சமர்ப்பிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் நீதிபதி ஏடிட் அப்துல்லா பதிலளித்தார்.
இதே செய்தியைப் பகிர்ந்துகொண்ட மற்ற அரசியல்வாதிகளை ஏன் திரு லீ விட்டுவைத்தார் என்றும் அரசாங்கத்தை வெகுவாக விமர்சிக்கும் திரு லியோங் மீது வழக்கு தொடுப்பதால் பிறருக்கு அச்சம் ஏற்படச் செய்வதே பிரதமர் லீயின் நோக்கம் என்றும் திரு லிம் கூறினார்.
தமது அரசாங்கத்தை விமர்சிப்பவராக திரு லியோங் உள்ளார் என்பதை பிரதமர் லீ ஒப்புக்கொண்டபோதும் பயமுறுத்துவதற்காக திரு லிம் மீது தாம் வழக்கு தொடுக்கவில்லை என்று பதிலளித்தார்.
பதிவை முதன்முதலில் உருவாக்கியவர் மீது வழக்கு தொடுக்காமல் ஏன் பகிர்ந்துகொண்டவர் மீது வழக்கு தொடுத்து 'எளிய' வழியை பிரதமர் லீ நாடினார் என்றும் திரு லிம் சுட்டினார். தமது நற்பெயரை நிரூபிக்க இதுவே சிறந்த வழி என்று ஆலோசனை பெற்று முடிவெடுத்ததாக பிரதமர் லீ பதிலளித்தார்.
திரு லியோங் சாதாரணமாகத்தான் பகிர்ந்துகொண்டதாக திரு லிம் வாதிட்டபோது, அவ்வாறு பகிர்வதே செய்தியை வெளியிடுவதற்குச் சமம் என்றார் பிரதமர். இந்தப் பகிர்வால் பிரதமர் லீ மீது கொண்ட எண்ணம் பாதிக்கப்பட்டதாக யாரேனும் தெரிவித்தனரா என்று நீதிமன்றத்தில் கூறுமாறு திரு லிம் வினவினார். அதற்கு பிரதமர் லீ, "இந்த கேள்வியை அணுகும் முறை இதுவல்ல. நற்பெயரைக் குலைக்கும் ஒரு செய்தி வெளியிடப்பட்டுள்ளது, வலம் வந்துள்ளது. மேலும் ஒரு துளி நஞ்சு சேர்வதற்கு முன் என் பெயரை நான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும்," என்றார்.
பிரதமர் லீயைக் குறுக்கு விசாரணை செய்தது, நினைத்தபடி 'சிறப்பாகவே' நடந்ததாக பின்னர் திரு லிம் செய்தியாளர்களிடம் கூறினார்.
இன்று வழக்கு விசாரணை தொடர்கிறது. திரு லியோங் சாட்சிக் கூண்டில் ஏறுவது தொடர்பில் இன்னும் தாம் முடிவெடுக்கவில்லை என்றார் திரு லிம்.

