சிங்கப்பூரில் மகிழ்உலா கப்பல் பயணங்கள் நவம்பரில் தொடங்கும்

2 mins read
7272d3dc-72cf-49d2-adf4-66703a1a5421
ஜென்டிங் குரூஸ் லைன்ஸ் நவம்பர் 6 முதல் அதன் கப்பல் பயணங்களைத் தொடங்கும். ராயல் கரிபியன் டிசம்பர் முதல் தொடங்கிடும் என்று கூறப்பட்டது. படம்: ROYAL CARIBBEAN INTERNATIONAL -

சிங்கப்பூர்வாசிகளுக்கான மகிழ்உலா உல்லாசக் கப்பல் பயணங்கள் நவம்பர் மாதம் முதல் தொடங்கவுள்ளன.

கப்பல்களை இயக்க இரண்டு சொகுசுக் கப்பல் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் சுற்றுப்பயணக் கழகம் தெரிவித்தது.

கப்பல் பயணத்தின்போது கொரோனா கிருமிப் பரவலைத் தடுப்பதற்கான பாதுகாப்பு வழிகாட்டிகள் தொகுப்பு ஒன்று உருவாக்கப்பட்டதை அடுத்து மகிழ்உலா கப்பல் பயணங்களைத் தொடங்க ஜென்டிங் குரூஸ் லைன்ஸ் மற்றும் ராயல் கரிபியன் இன்டர்நேஷனல் ஆகியவற்றுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு உலா வரும் கப்பல்கள், எந்தத் துறைமுகத்திலும் ஒதுங்காது என்று தெரிவிக்கப்பட்டது.

வழக்கமானதைப் போல 50% பயணிகளே இந்தப் பயணங்களில் அனுமதிக்கப்படுவர் என்று கழகம் அதன் அறிக்கையில் குறிப்பிட்டது. ஜென்டிங் குரூஸ் லைன்ஸ் நவம்பர் 6 முதல் அதன் கப்பல் பயணங்களைத் தொடங்கும். ராயல் கரிபியன் டிசம்பர் முதல் தொடங்கிடும் என்று கூறப்பட்டது.

இதற்கிடையே, பாதுகாப்பு கருதி கப்பலுக்குள் செல்வதற்கு முன் அனைத்து பயணிகளும் முதலில் கொவிட்-19 பரிசோதனை செய்துகொள்வர் என்று தெரிவிக்கப்பட்டது. அத்துடன் முகக் கவசம் அணிவது, பயணக் கும்பல்களுக்கிடையே ஒரு மீட்டர் பாதுகாப்பு இடைவெளியைக் கடைப்பிடிப்பது, நெருக்கத்தைக் குறைப்பது, வெவ்வேறு பயணக் குழுக்கள் ஒன்றுகூடுவதைத் தவிர்ப்பது, கப்பல்களை அடிக்கடி சுத்தம் செய்து கிருமி நீக்கத்துக்கான பணிகள் மேற்கொள்வது உட்பட பாதுகாப்பு நிர்வாக நடவடிக்கைகளையும் பயணிகள் பின்பற்ற வேண்டும்.

கொவிட்-19 சூழல் கருதி இவ்வாண்டு மார்ச் 13ஆம் தேதி முதல் சிங்கப்பூர் துறைமுகங்களில் உல்லாசக் கப்பல்கள் ஒதுங்க அனுமதிக்கப்படவில்லை.

இந்நிலையில் சிங்கப்பூரர்களுக்கு டிசம்பர் மாதம் வழங்கப்படவுள்ள $100 சுற்றுப்பயணப் பற்றுச்சீட்டுகளை இக்கப்பல் பயணங்களுக்குப் பயன்படுத்த முடியாது என்று தெரிவிக்கப்பட்டது.

இதன் தொடர்பிலான விரிவான செய்திகளுக்கு தமிழ் முரசின் நாளைய (அக்டோபர் 9) அச்சுப் பிரதியை நாடுங்கள்!

குறிப்புச் சொற்கள்