மகளைக் கொன்ற வழக்கு: தண்டனை முடிந்து விடுவிக்கப்பட்ட தந்தை

மகளைக் கொன்ற வழக்கு: தண்டனை முடிந்து விடுவிக்கப்பட்ட தந்தை

2 mins read
8a4d36ef-c9d1-46e9-9c2c-0a201c4ed0c5
-

மனநோயால் பாதிக்கப்பட்ட மகளைக் கொன்ற தந்தைக்கு இரண்டு ஆண்டுகள், ஒன்பது மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட நாளிலிருந்து அவரது தண்டனைக் காலம் கணக்கிடப்படுவதால் டான் இன்று விடுவிக்கப்பட்டார். 66 வயது டான் தியேன் சாயும் அவரது மனைவியும் மனநோயால் பாதிக்கப்பட்ட அவர்களது மகளைப் பார்த்துக்கொண்டனர்.

மனநோய் இருந்தும் டானின் மகளான குமாரி டெசரி டான் சிகிச்சை பெற மறுத்துவிட்டார். டெசரி டான் தமது பெற்றோரை அடிக்கடி ஏசியதாகவும் அவர்களிடம் எப்போதும் குறைகண்டதாகவும் தமக்கு முன் நின்று தலை வணங்க வைத்ததாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

மகளை அமைதிப்படுத்த டானும் அவரது மனைவியும் தங்களால் ஆன அனைத்தையும் செய்து வந்தனர். ஒருமுறை தமது மகளைத் திருப்திப்படுத்த டான் தமது மனைவியை அறைந்தார்.தமது பெற்றோரிடம் அவர்களது பணம் அனைத்தையும் தமக்குக் கொடுக்கும் டெசரி டான் கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாது, மேலும் அதிக நேரம் தனியார் வாடகை கார் ஓட்டி கூடுதல் பணம் சம்பாதிக்க டெசரி தமது தந்தையை வற்புறுத்தியதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், 2018ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19ஆம் தேதியன்று தமது தந்தையிடம் கத்தியைக் காட்டி அவரைக் கொலை செய்ய வேண்டும் போல தமக்குத் தோன்று வதாக டெசரி டான் தெரிவித்தார். இதையடுத்து, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது தமது பிடோக் சவுத் வீட்டின் சமையலறையில் தமது 35 வயது மகளை டான் கழுத்தை நெரித்துக் கொன்றார்.

டான் கடுமையான மன இறுக்கத்துக்கு ஆளானதாகவும் மனநோயால் பாதிக்கப்பட்ட தமது மகளைப் பார்த்துக்கொண்டதில் அவருக்கு மிகவும் மோசமான அளவில் மனவுளைச்சல் ஏற்பட்டதாகவும் மனநலப் பரிசோதனையில் தெரியவந்தது.