ஆட் குறைப்பு தவிர்க்க முடியாத பட்சத்தில், தொழிலில் நிலைத் தன்மையை உறுதி செய்வ தற்காக தகுதி, திறமை யுடையவர்களைத் தக்க வைத்துக் கொள்வது போன்ற காரணங்களின் அடிப்படையில் நிறுவனங்கள் அதனை மேற்கொள்ள வேண்டும். அதே நேரத்தில், சிங்கப்பூரர்களை மூலாதாரமாகக் கொண்ட ஊழியரணியைக் கட்டிக்காக்க வேண்டிய தேவை உட்பட நீண்டகால நோக்கிலான தங்களது மனிதவளத் தேவைகளை நிறுவனங்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.
மிகையான மனிதவளம், பொறுப்பான ஆட்குறைப்பு நிர்வாகம் தொடர்பில் முத்தரப்பு ஆலோசனைக் குறிப்பு நேற்று வெளியிடப்பட்டது. மனிதவள அமைச்சு, தேசிய தொழிற்சங்க காங்கிரஸ், சிங்கப்பூர் தேசிய முதலாளிகள் சம்மேளனம் ஆகியவை இணைந்து அந்த ஆலோசனைக் குறிப்பை வெளியிட்டன.
தேசிய சம்பள மன்றத்தின் அண்மைய வழிகாட்டி நெறிமுறைகளின் அடிப்படையில் மற்ற அனைத்து செலவுக் குறைப்பு நடவடிக்கைகளையும் எடுத்த பிறகு, கடைசி நடவடிக்கையாகத்தான் ஆட்குறைப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் என்று நிறுவனங்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன.
"உள்ளூர் ஊழியர்களின் விகிதத்தைக் குறைப்பதாக ஆட்குறைப்பு அமைந்துவிடக்கூடாது. ஆட்குறைப்பு நடவடிக்கையின்போது விகிதாச்சார அடிப்படையில் அதிக உள்ளூர்வாசிகளைத் தக்கவைப்பதன் மூலம் இதை எட்ட முடியும்," என்று அந்த வழிகாட்டி நெறிமுறைகள் கூறுகின்றன.
தொழில் நிலவரம் மேம்படும்போது, அதிகமான சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகளை வேலைக்கு எடுத்து தங்களது உள்ளூர் ஊழியரணியை வலுப்படுத்த நிறுவனங்கள் வெளிப்படையாக முயற்சி எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாட்டின் பொருளியல் வளர்ச்சிக்கும் உள்ளூர்வாசிகளுக்கு நல்ல வேலைகளை உருவாக்கவும் உதவக்கூடிய வெளிநாட்டவர்களை வரவேற்கும் விதமாக சிங்கப்பூர் தொடர்ந்து தனது கதவுகளைத் திறந்து வைத்திருக்கும் என்றும் அந்த வழிகாட்டி நெறிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாண்டில் இரண்டாம் முறையாகப் புதுப்பிக்கப்பட்ட இந்த வழிகாட்டி நெறிமுறைகள், ஆட்குறைப்பு நடவடிக்கையை பொறுப்புடனும் உணர்வுபூர்வமாகவும் மேற்கொள்வது எப்படி என்பது குறித்தும் விவரித்து இருக்கிறது.
ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ள அல்லது சட்டபூர்வமாகத் தேவைப்படும் காலத்திற்கும் முன்னதாகவே ஆட்குறைப்பு குறித்து தகவல் தெரிவிப்பது, முடிந்தவரை ஆட்குறைப்பு செய்யப்படுபவரிடம் தனியாக அதைப் பற்றிச் சொல்வது போன்றவை அதில் அடங்கும்.
ஆட்குறைப்பு செய்யப்படும் ஊழியர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கவும் அவர்களின் கருத்துகளைக் கேட்கவும் ஏதுவாக மனிதவளப் பணியாளர்களும் தொழிற்சங்கப் பிரதிநிதிகளும் அவ்விடத்தில் இருப்பதைப் பொறுப்பான நிறுவனங்கள் உறுதிசெய்ய வேண்டும்.
பணியிடத்தைக் காலி செய்யும்படி சொல்லுமுன், தாங்கள் ஆட்குறைப்பு செய்யப்படும் தகவலை அறிந்து, அதற்குத் தங்களை ஆயத்தப்படுத்திக்கொள்ள போதிய கால அவகாசமும் அதற்கான வெளியும் பாதிக்கப்படும் ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
தேவைப்பட்டால், பாதிக்கப்படுவோரின் உணர்வுசார் தேவைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் அவர்களுக்கு ஆலோசனை ஆதரவும் அளிக்கப்பட வேண்டும்.
ஆட்குறைப்பின்போது நிறுவனங்கள் இந்த வழிகாட்டி நெறிமுறைகளைப் பின்பற்றும் என மனிதவள அமைச்சு எதிர்பார்ப்பதாக அதன் பேச்சாளர் கூறினார்.
"செலவுக் குறைப்பு அல்லது ஆட்குறைப்பு நடவடிக்கைகளின்போது பொறுப்பற்று நடந்துகொள்ளும் நிறுவனங்களுக்கு எதிர்காலத்தில் அரசாங்க ஆதரவு வழங்காதிருப்பது அல்லது வேலை அனுமதிச்சீட்டுச் சிறப்புரிமைகளை ரத்து செய்வது குறித்து அரசாங்கம் பரிசீலிக்கும்," என்று அந்தப் பேச்சாளர் எச்சரித்தார்.

