வியட்னாமில் தொடர்ச்சியான பருவமழை, வெள்ளத்திற்கு மத்தியில் அந்நாட்டின் மத்திய பகுதியில் திடீரென ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் 11 ராணுவ வீரர்கள் புதையுண்டு மாண்டனர். சம்பவ இடத்தில் காணாமல் போன மேலும் 11 பேருக்கான தேடல் மும்முரமாக நடந்து வருகிறது.
கடந்த வாரம் தொடங்கிய அந்நாட்டில் குறைந்தது 64 பேர் உயிரிழந்ததாக வியட்னாமின் பேரிடர் நிர்வாக ஆணையம் தெரிவித்தது. வெள்ள நீர்மட்டம் கூடுதலாக அதிகரிக்கக்கூடும் என்ற கவலையும் தற்போது நிலவுகிறது.
குவாங் திரி மாநிலத்திலுள்ள ராணுவ நிலையத்தின் தங்கும் வசதி ஒன்றின் மீதான நிலச்சரிவின்போது சகதியிடன் கற்கள் பொழிந்தன. இதில் 22 வீரர்கள் புதைந்திருக்கலாம் என்று வியட்னாமின் அதிகாரபூர்வ அரசாங்க இணையத்தளம் ஒன்று குறிப்பிடுகிறது.
"அதிகாலை இரண்டு மணி முதல், நான்கு முதல் ஐந்து நிலச்சரிவுகள் நடந்துள்ளன. அந்த மலையே உடைந்து சிதறப் போவது போல இருந்தது," என்று அந்தப் பகுதியில் தங்கியிருந்த உள்ளூர் அதிகாரி ஹா நுகோக் டுவோங் தெரிவித்தார். சில நாட்களுக்கு முன்னர் அந்நாட்டில் இதே போன்ற ஒரு நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கிய நீர்சக்தி ஆலை ஒன்றில் பணியாளர்களைக் காப்பாற்றச் சென்ற மீட்புப் பணிக்குழுவைச் சேர்ந்தோரில் 13 பேர் உயிரிழந்தர். ஆலை பணியாளர்களில் இருவரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எஞ்சிய 15 பேர் காணவில்லை.
குவாங் திரி ஆற்றின் நீர்மட்டம் இருபது ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவிற்கு உயர்ந்திருப்பதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

