அவசரநிலை தொடர்பில் மலேசிய மன்னர்கள் ஆலோசனை; மக்கள் அமைதி காக்குமாறு மாமன்னர் வேண்டுகோள்

மலேசியாவில் கொவிட்-19 நோய்ப் பரவலைத் தடுக்கும் முயற்சியாக அந்நாட்டில் அவசரநிலையை அறிவிக்கும் திட்டம் தொடர்பில் மாமன்னர் அப்துல்லா ரியாத்துடின், நாளை (அக்டோபர் 25) மற்ற மாநில மன்னர்களுடன் கலந்தாலோசிக்க இருக்கிறார்.

இவ்வேளையில், மக்களின் நல்வாழ்வே தமது முக்கிய அக்கறையாக இருப்பதாகவும் அதனால் எதுகுறித்தும் அனுமானிக்காது மக்கள் அமைதி காக்குமாறும் மாமன்னர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதன் தொடர்பில் அறிக்கை விடுத்துள்ள மலேசிய அரண்மனையின் தலைமைக் கணக்காளர் அகமது ஃபடில் ஷம்சுதீன், “பிரதமர் முகைதீன் யாசின் நேற்று மாலையில் மாமன்னரைச் சந்தித்துப் பேசினார். அன்று காலையில் புத்ராஜெயாவில் இடம்பெற்ற சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்தைத் தொடர்ந்து, மாமன்னர் - பிரதமர் இடையிலான சந்திப்பு இடம்பெற்றது.

“ஒன்றரை மணி நேரம் நடந்த அச்சந்திப்பின்போது, சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் அடங்கிய கோப்பு மாமன்னரிடம் வழங்கப்பட்டது. அவற்றைப் பரிசீலிக்கும்படியும் அவற்றை நடைமுறைப்படுத்த ஒப்புதல் அளிக்குமாறும் மாமன்னரிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது,” என்று திரு ஃபடில் ஓர் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.

பிரதமருடனான சந்திப்பிற்குப் பிறகு, மாநில ஆட்சியாளர்களை அரண்மனைக்கு வரவழைத்து, அவர்களுடன் கலந்தாலோசிப்பது என மாமன்னர் முடிவெடுத்துள்ளதாகவும் திரு ஃபடில் கூறினார்.

“ஆகையால், இப்போதைய சூழலில் பிரதமர் முன்வைத்துள்ள தீர்மானங்களின் மீது முடிவெடுக்கும் வரை, மக்கள் பீதியடையாமல் அமைதியாகவும் பொறுமையாகவும் இருக்குமாறு மாமன்னர் கேட்டுக்கொண்டுள்ளார்,” என்றும் அவர் சொன்னார்.

மலேசிய கூட்டரசு அரசியல் அமைப்புச் சட்டம் 150ன்படி, நாட்டிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் சூழலில் நாட்டில் அவசரநிலையை அறிவிக்கும்படி மாமன்னருக்குப் பரிந்துரைக்கலாம்.

நாட்டில் நிலைத்தன்மையற்ற அரசியல் சூழல் நிலவுவதால், கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் செலவிடும் தொகை பாழாகி விடாமல் இருக்க ‘பொருளியல் அவசரநிலை’யைப் பிறப்பிப்பது எனச் சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

அடுத்த மாதம் 6ஆம் தேதி நாடாளுமன்றம் கூடவுள்ள நிலையில், பிரதமர் முகைதீன் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு கோரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது பிரதமர் தமது பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் போகும் பட்சத்தில், வரவுசெலவுத் திட்டத்தைத்  தாக்கல் செய்ய முடியாது.

இத்தகைய சூழலில், அவசரநிலை பிறப்பிக்கப்பட்டால் நாடாளுமன்றம் முடக்கப்பட்டு, பிரதமர் முகைதீனின் ஆட்சிக்கு இருக்கும் ஆபத்தும் விலகிவிடும்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon