இதுவரை 400,000க்கும் அதிகமான 'டிரேஸ்டுகெதர்' கருவிகளை சிங்கப்பூர்வாசிகள் பெற்றுச் சென்று விட்டனர். இதையடுத்து, தொடர்புகளின் தடமறிதலில் பங்கேற்போர் எண்ணிக்கை 50 விழுக்காட்டை எட்டியிருக்கிறது.
இவ்வாண்டு இறுதிக்குள் டிரேஸ்டுகெதர் செயலி அல்லது கருவிகளைப் பயன்படுத்துவது கட்டாயமாக்கப்படவுள்ளது. இதற்கேதுவாக, செயலியைப் பயன்படுத்த விரும்பாத அனைவருக்கும் கருவிகளை வழங்கும் முயற்சிகளை அரசாங்கம் முடுக்கிவிடும் என்று அறிவார்ந்த தேச, மின்னிலக்க அரசாங்கக் குழு தெரிவித்ததாக 'தி சண்டே டைம்ஸ்' கூறியது.
மூன்றாம் கட்டத் தளர்வுகளை அறிவிக்க சிங்கப்பூர் தயாராகி வரும் நிலையில், மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கினர் மின்னிலக்கவழி தொடர்புகளின் தடமறிதலில் பங்கேற்பது அவசியம் எனத் தெரிவிக்கப்பட்டது.
பரந்த அளவில் டிரேஸ்டுகெதர் கருவிகளை விநியோகிப்பதன் மூலம் மக்கள் புதிய விதிகளுக்கு இணங்கி நடக்க ஆயத்தமாவதை உறுதிசெய்யும். புதிய விதியின்படி, டிரேஸ்டுகெதர் செயலியை அல்லது கருவியைப் பயன்படுத்தினால் மட்டுமே பணியிடங்கள், பள்ளிகள், கடைத்தொகுதிகள், உணவகங்கள் போன்ற இடங்களில் நுழைவு அனுமதி வழங்கப்படும்.
ஆண்டிறுதி வரை இந்த விதி தளர்த்தப்படும். அதன்பின், கைபேசி படக்கருவி வழியாக 'சேஃப்என்ட்ரி' கியூஆர் குறியீடுகளை வருடி அல்லது சிங்பாஸ் கைபேசிச் செயலியை அல்லது அடையாள அட்டையில் உள்ள பட்டைக் குறியீடுகளைப் பயன்படுத்தி அவ்விடங்களுக்குச் செல்ல முடியாது.
தற்போது 38 சமூக நிலையங்கள், கடைத்தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 13 தற்காலிகச் சாவடிகள் மூலமாக டிரேஸ்டுகெதர் கருவிகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. அடுத்த மாத இறுதிக்குள், வில்லை விநியோகம் தீவில் உள்ள 108 சமூக மன்றங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.
இப்போதைக்கு, மக்கள்தொகையில் 50 விழுக்காட்டினர் மட்டுமே டிரேஸ்டுகெதர் செயலியைப் பதிவிறக்கம் (2.5 மில்லியன் பதிவிறக்கம்) செய்துள்ளனர் அல்லது கருவிகளைப் பெற்றுச் சென்றுள்ளனர்.
கைபேசி மின்திறன் விரைவில் தீர்ந்துவிடுவது, பணியிடத்தில் கையாள வசதியாக இருப்பது, பாதுகாப்பு குறித்த கவலைகள் போன்ற காரணங்களுக்காக கருவிகளைப் பெற்றுச் செல்வதாக அவர்களில் சிலர் தெரிவித்தனர்.

