சுடச் சுடச் செய்திகள்

பிடோக்கில் 35 வயது தாயும் பிறந்து 5 வாரங்களான மகளும் வீவக கீழ்த்தளத்தில் இறந்து கிடந்தனர்

பிடோக்கில் அமைந்துள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) அடுக்குமாடி குடியிருப்பின் கீழ்த்தளத்தில் 35 வயது தாயும், பிறந்து 5 வாரங்களே ஆன பச்சிளங்குழந்தையும் இறந்து கிடந்தனர்.

பிடோக் நார்த் ரோட்டில் இருக்கும் புளோக் 81ல் நிகழ்ந்த சம்பவம் குறித்து, நேற்று (அக்டோபர் 29) மாலை 5.47 மணிக்கு போலிசுக்கு தகவல் கிடைத்தது. 

தாயும் மகளும் உயிரிழந்தது சம்பவ இடத்திலேயே உறுதி செய்யப்பட்டது.

இந்தச் சம்பவத்தின் தொடர்பில் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதே அடுக்குமாடிக் குடியிருப்பில்தான் தாயும் மகளும் வசித்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டது.

அவர்களது வீட்டை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பார்வையிட்டபோது,  வீட்டில் யாரும் இல்லை. ஒரு பையில் உணவும் கதவில் ஒரு சிறு குறிப்பும் இருந்தது.

போலிஸ் கூடாரத்துக்கு அருகில் ஆடவர் ஒருவர் அழுதுகொண்டிருந்ததைப் பார்த்ததாகக் கூறப்பட்டது. இறந்துபோன இளம்பெண்ணின் கணவராக அவர் இருக்கலாம் என்று கூறப்பட்டது.

அந்தத் தம்பதிக்கு 5 வயதில் மற்றொரு பெண் குழந்தை இருப்பதாகவும் கூறப்படுகிறது.

புளோக்கின் கீழ்த் தளத்தில் இறுதிச்சடங்குக்கான ஏற்பாடுகளில் நண்பர்களும் உறவினர்களும் ஈடுபட்டிருந்தனர்.

நேற்று மாலை 5.30 மணியளவில் கீழ்த்தளத்தில் தம் நண்பருடன் உரையாடிக்கொண்டிருந்ததாகக் குறிப்பிட்ட 18 வயதான திரு யாங், பலத்த சத்தம் கேட்டு, அந்தத் திசையை நோக்கிச் சென்றதாக குறிப்பிட்டார்.

“ஒரு பெண்ணும் ஒரு பச்சிளம் பெண் குழந்தையும் விழுந்து கிடந்தனர்,” என்றார் அவர்.

இருவரது உடல்களும் சுமார் 2 மீட்டர் இடைவெளியில் கிடந்ததைப் பார்த்ததாக புளோக் 78ல் வசிக்கும் திருவாட்டி ஜேனி டியோ குறிப்பிட்டார்.

திருமணமான அந்தப் பெண், இந்தச் சம்பவம் நடப்பதற்கு 3 வாரங்களுக்கு முன்பு, வருத்தத்துடன் காணப்பட்டதாகவும் மின்தூக்கியில் குழந்தை தொடர்ந்து அழுது கொண்டிருந்ததாகவும் அண்டைவீட்டில் வசிக்கும் 80 வயதான திருவாட்டி லோ குறிப்பிட்டார்.

“அந்தக் குடும்பத்தைப் பற்றிய விவரம் தெரியாது; ஆனால், அந்தப் பெண் அமைதியானவர்,” என்று திருவாட்டி லோ குறிப்பிட்டார்.

“எந்தப் பிரச்சினையும் தீர்க்க முடியாததல்ல,” என்று இரு இளம் உயிர்கள் பிரிந்ததன் தொடர்பில் வருத்தம் தெரிவித்தார் திருவாட்டி லோ.

உதவிக்கு அழைக்க:

சிங்கப்பூர் அபய ஆலோசனை சங்கம் (Samaritans of Singapore): 1800-221-4444

மனநலத்திற்கான சிங்கப்பூர் சங்கம் (Singapore Association for Mental Health): 1800-283-7019

மனநல கழகம்: 6389-2222

டிங்கல் பிரண்ட் (Tinkle Friend):1800-274-4788

தேசிய பராமரிப்பு தொடர்பு எண் (National Care Hotline): 1800-202-6868

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon