'சிங்கப்பூரில் மூன்றாம் கட்டத் தளர்வுகள் ஓராண்டுக்கு மேலும்கூட நடப்பில் இருக்கலாம்; தொற்று அதிகரித்தால் மீண்டும் கட்டுப்பாடுகள்'

2 mins read
76464f1b-f020-4755-9c43-20ba8e796620
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் இவ்வாண்டு இறுதிவாக்கில் நடைமுறைக்கு வரவுள்ள கொவிட்-19 தொடர்பிலான மூன்றாம் கட்டத் தளர்வு நடவடிக்கைகள் ஓராண்டு வரை நீடிக்கலாம் எனவும் தொற்று சம்பவங்கள் அதிகரித்தால் கட்டுப்பாடுகள் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படலாம் எனவும் சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் இன்று (நவம்பர் 4) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

உலகின் மற்ற பகுதிகளில் கிருமித்தொற்று கடுமையாக கட்டுப்படுத்தப்படும் வரை அல்லது கொவிட்-19க்கான சிகிச்சை அல்லது தடுப்பு மருந்து பரவலாக கிடைக்கும் வரை இந்த நிலை தொடரும் என்றார் அவர்.

அன்றாட வாழ்க்கை, வேலை, முக்கியமான நிகழ்வுகள் இவற்றுக்கிடையே அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் நடப்பில் இருக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

மூன்றாம் கட்டத் தளர்வு, அதனை வகுக்கும்போது கணக்கில் கொள்ளப்பட்ட காரணிகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் போன்றவை பற்றி தெம்பனிஸ் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திருவாட்டி செங் லி ஹுய் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தபோது திரு கான் இந்தத் தகவல்களை வெளியிட்டார்.

நிகழ்ச்சிகள் அடிக்கடி நடத்தப்படுபவையா, அவற்றால் ஏற்படும் அபாயம், அபாயத்தைக் கையாள கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்படுமா என்பது போன்ற காரணிகளைப் பொறுத்து நிகழ்வுகளுக்கு எத்தனை பேர் அனுமதிக்கப்படலாம் என்பதை வகுத்ததாக திரு கான் தெரிவித்தார்.

மூன்றாம் கட்டத் தளர்வுகளில் 8 பேர் ஒன்று கூட அனுமதி வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. பெரிய குழுக்கள் கூட அனுமதிப்பது, பாதுகாப்பான இடைவெளி ஆகியவற்றுக்கிடையே சமநிலையை எட்ட இது உதவும் என்று திரு கான் குறிப்பிட்டார்.

பரிசோதனைகளும் தொடர்பு தடமறிதலும் கூடுதலான நடவடிக்கைகள் மீண்டும் தொடர முக்கியமானவை என்று அமைச்சர் குறிப்பிட்டார்.