சிங்கப்பூரில் இன்று காலை நிலவரப்படி ஜோ பைடன் 243 தொகுதிகளிலும் டிரம்ப் 214 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளனர்.
வெற்றிக் கனியை எட்டிப் பிடிக்கும் நிலையில் திரு பைடன் இருக்கும் நிலையில், பெனிசில்வேனியாவில் வாக்களிப்பு நடைமுறையை நிராகரித்தும் மிச்சிகனில் வாக்குகள் எண்ணும் பணியை நிறுத்தக் கோரியும் நவம்பர் 4ஆம் தேதி (அமெரிக்க நேரப்படி) நீதிமன்றத்தை திரு டிரம்ப் நாடியுள்ளார்.
சிங்கப்பூர் நேரப்படி நேற்றுக் காலையில் வாக்குப்பதிவு முடிவடைந்ததை அடுத்து, வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன் தொடக்கத்தில் ஏறுமுகத்தில் இருந்தார். இருந்தாலும், ஃபுளோரிடா, ஒஹையோ, பென்சில்வேனியா போன்ற மாநிலங்களில் வெற்றி பெற்றதன் மூலம் இப்போதைய அதிபரும் குடியரசுக் கட்சி வேட்பாளருமான டிரம்ப் வித்தியாசத்தை மிகவும் குறைத்தார்.
விஸ்கான்சன், மிச்சிகன் மாநிலங்களில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளார். ஆயினும், விஸ்கான்சன் மாநிலத்தில் வாக்குகளை மீண்டும் எண்ண வேண்டும் என டிரம்ப் கோரிக்கை விடுத்துள்ளார்.
வாக்குகள் எண்ணும் பணி தொடர்ந்ததால் இறுதி வெற்றியாளரை அறிவிப்பது தாமதமாகலாம் எனச் சொல்லப்பட்டது. சிங்கப்பூர் நேரம் இன்று காலை 10.30 மணி நிலவரப்படி ஜோ பைடன் 243-214 என்ற வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்ததாக செய்திகள் குறிப்பிட்டன.
தேர்தல் சபையில் இடம்பெறக்கூடிய 538 பேரை அமெரிக்க மக்கள் தங்கள் வாக்குகள் மூலம் தேர்ந்தெடுப்பர். அவர்களில் குறைந்தது 270 பேரின் ஆதரவு பெறுபவர் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார்.
அலபாமா, ஆர்கன்சாஸ், ஃபுளோரிடா, ஐடஹோ, இண்டியானா, அயோவா, கான்சஸ், கென்டக்கி, லூய்சியானா, மிசிசிபி, மிசூரி, மோன்டானா, நெப்ராஸ்கா, வடக்கு டக்கோட்டா, ஒஹையோ, ஒக்லஹாமோ, தெற்கு கேரொலைனா, தெற்கு டக்கோட்டா, டென்னசி, டெக்சஸ், யூட்டா, அரிசோனா, ஜார்ஜியா, மிச்சிகன், வடக்கு கேரொலைனா, பென்சில்வேனியா ஆகிய மாநிலங்களில் அதிபர் டிரம்ப் வென்றதாக அல்லது முன்னிலையில் இருந்ததாகக் கூறப்பட்டது.
எதிர்த்துப் போட்டியிட்ட ஜோ பைடன், கலிஃபோர்னியா, கொலராடோ, கனெக்டிகட், டெலவேர், கொலம்பியா, ஹவாயி, இல்லினாய், மேரிலேண்ட், மசசூசட்ஸ், மினசோட்டா, நியூ ஹேம்ப்ஷியர், நியூஜெர்சி, நியூ மெக்சிகோ, நியூயார்க், ஓரிகன், ரோட் ஐலண்ட், வெர்மான்ட், வெர்ஜீனியா, வாஷிங்டன், நெவாடா, விஸ்கான்சின், மெய்ன் ஆகிய மாநிலங்களில் வெற்றி பெற்றதாக அல்லது முன்னிலையில் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, வாக்குகள் முழுமையாக எண்ணி முடிக்கப்படாத நிலையிலேயே தான் வென்றுவிட்டதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.
வாக்குகள் எண்ணப்பட்டு வந்த நிலையில் வெள்ளை மாளிகையில் உரையாற்றிய டிரம்ப், "இவ்வளவு அதிக எண்ணிக்கையில் வாக்குகள் பதிவானதில்லை. பென்சில்வேனியாவிலும் ஜார்ஜியாவிலும் நாங்கள் பெற்றுள்ள வெற்றி முக்கியமானது. அதுபோல, ஃபுளோரிடா, டெக்சஸ், வடக்கு கேரொலைனா எனப் பல இடங்களில் நாங்கள் வென்றுள்ளோம்.
"ஆனால், இந்த முடிவுகளை எல்லாம் எதிர்க்கட்சியினர் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அவர்கள் மோசடி செய்கிறார்கள். எங்களுக்குச் சாதகமாக முடிவுகள் வந்துகொண்டிருக்கும் வேளையில் திடீரென எல்லாவற்றையும் நிறுத்த முற்படுகின்றனர்.
"ஆகவே, வாக்கு எண்ணிக்கையை நிறுத்தக் கோரி நாங்கள் உச்ச நீதிமன்றத்திற்குச் செல்லப் போகிறோம். என்னைப் பொறுத்தமட்டில், நாங்கள் ஏற்கெனவே வென்றுவிட்டோம்," என்று டிரம்ப் பேசினார்.
அப்படி டிரம்ப் நீதிமன்றத்திற்குச் செல்லும்பட்சத்தில், அவரது முயற்சியை முறியடிக்கத் தங்களது சட்டக்குழுவும் தயாராக இருப்பதாக திரு பைடனின் தேர்தல் பிரசாரக் குழு நிர்வாகி ஜென் ஓமேலி தில்லன் ஓர் அறிக்கை மூலமாகத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, "நாம் வெற்றிப் பாதையில் இருக்கிறோம். நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும்," என்று தம் ஆதரவாளர்களை திரு பைடன் கேட்டுக்கொண்டார். ஒவ்வொரு வாக்கும் எண்ணப்பட்டு முடிக்கும் வரை முடிவு உறுதி இல்லை என்றார் அவர்.

