பாலஸ்டியரில் போலிசாருடன் இன்று (நவம்பர் 5) காலை நிகழ்ந்த மோதலில் ஆடவர் ஒருவரின் அடிவயிற்றில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்தது. அந்த ஆடவர் ஒரு போலிஸ் அதிகாரியைத் தாக்கியதுடன் மற்றொரு அதிகாரியின் துப்பாக்கியைக் கைப்பற்ற முயற்சி செய்ததாகக் கூறப்பட்டது.
துப்பாக்கிச் சூடு பட்ட அந்த 36 வயது ஆடவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். தற்போது அவரது உடல் நிலை சீராக உள்ளதாக போலிசார் தெரிவித்தனர்.
பொதுச்சேவை ஊழியரை அவரது பணியைத் தொடர விடாமல் தடுக்கும் நோக்கில் வேண்டுமென்றே காயம் விளைவித்ததற்காகவும் மோசடி, சட்ட விரோதமாக கூடுதல், போதைப்பொருள், சுங்கத்துறை தொடர்பான குற்றச்சாட்டுகள் போன்றவற்றுக்காகவும் அந்த ஆடவர் கைது செய்யப்பட்டார்.
சிங்கப்பூரின் லிட்டில் இந்தியாவுக்கு அருகில் பாலஸ்டியர் ரோட்டில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இன்று அதிகாலை சுமார் 1 மணியளவில், மோசடி குற்றச்சாட்டுகளில் ஈடுபட்ட நால்வரைக் கைது செய்யும் பணியில் போலிசார் ஈடுபட்டபோது இந்த மோதல் நிகழ்ந்தது.
அந்தக் குடியிருப்புக்குள் போலிசார் நுழைந்தபோது அந்த 36 வயது ஆடவர் போலிஸ் அதிகாரி ஒருவர் மீது பாய்ந்து மீண்டும் மீண்டும் அடித்தார். முகத்தில் ரத்தக் காயமடைந்த போலிஸ் அதிகாரி கீழே விழுந்தார்.
போலிஸ் அதிகாரியைத் தாக்குவதை நிறுத்துமாறு இரண்டாவது போலிஸ் அதிகாரி விடுத்த எச்சரிக்கைகளுக்கு அந்த ஆடவர் இணங்க மறுத்தார். அந்த வீட்டில் தங்கியிருந்த 22 வயது ஆடவர் தம் கூட்டாளியுடன் சேர்ந்து போலிசைத் தாக்கியதைப் பார்த்த இரண்டாவது அதிகாரி, தமது கைத்துப்பாக்கியை எடுத்தார்.
போலிசாரைத் தாக்கிக்கொண்டிருந்த 36 வயது ஆடவர், இரண்டாவது அதிகாரியை நோக்கிப் பாய்ந்து அவரிடமிருந்த துப்பாக்கியைப் பறிக்க முயற்சி செய்தார். அந்தப் போராட்டத்தில் துப்பாக்கி ஒரு முறை சுடப்பட்டது. ஆனாலும் அந்த ஆடவர், போலிஸ் அதிகாரியுடன் தொடர்ந்து போராடினார்.
மற்ற சில அதிகாரிகள் சேர்ந்து அந்த ஆடவரை மடக்கிப் பிடித்தனர்.
இந்தச் சம்பவத்தில் இரண்டு போலிஸ் அதிகாரிகளும் காயமடைந்தனர். ஒரு அதிகாரிக்கு முகத்திலும் கையிலும் காயங்கள்; இரண்டாவது அதிகாரிக்கு கைகளிலும் உதட்டிலும் காயங்கள்.
பொதுச் சேவை அதிகாரி தன் கடமையைச் செய்வதைத் தடுக்க முற்பட்டதன் தொடர்பில் 22 வயது ஆடவரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அந்த வீட்டில் இருந்த 33, 23 வயதுடைய இரு பெண்களும் மோசடி, கட்டுப்படுத்தப்பட்ட போதைப்பொருளை உட்கொண்டது போன்ற குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டனர். அவர்கள் இருவரும் போலிசுடன் மோதிய ஆடவர்களின் காதலிகள் என்று கூறப்பட்டது.
இந்த நால்வரைத் தவிர 18 முதல் 32 வயதுக்குட்பட்ட மேலும் மூவர் மோசடிக் குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டனர்.
நேற்று முன்தினமும் இன்றும் நடத்தப்பட்ட வெவ்வேறு தேடுதல் வேட்டைகளில் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
மற்றவர்களின் கடன் பற்று அட்டைத் தகவல்களைக் கொண்டு கைபேசிகளை தொலைத்தொடர்பு நிறுவனங்களிலிருந்து வாங்கி பின்னர் அவற்றை விற்றுப் பணமாக்கி மோசடியில் இந்த கும்பல் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பின்னர் வங்கிகளிடமிருந்து பணத்தைக் கோரிப் பெற முயற்சி செய்யும்போது அந்தப் பரிவர்த்தனைகள் நிராகரிக்கப்பட்டன. இதன் தொடர்பில் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு $42,000 வரை நஷ்டம் ஏற்பட்டது.