அமெரிக்க அதிபர் தேர்தலில் அதிபர் டோனல்ட் டிரம்ப்புக்கும் ஜனநாயகக் கட்சி வேட்பாளரும் முன்னாள் துணை அதிபருமான ஜோ பைடனுக்கும் இடையே மிகக் கடுமையான போட்டி நிலவுகிறது.
இந்நிலையில், முக்கியமான இரண்டு மாநிலங்களாகக் கருதப்படும் விஸ்கான்சின், மிச்சிகன் ஆகியவற்றை திரு பைடன் கைப்பற்றியுள்ளார். இதன் மூலம் 270 இடங்கள் பெரும்பான்மையை அவர் நெருங்குவதாக அமெரிக்க அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர். தற்போது 264 தேர்தல் சபை உறுப்பினர்களின் ஆதரவை திரு பைடன் பெற்றுள்ளார். இன்னும் ஆறு இடங்களில் வென்றால் அவரே அடுத்த அதிபராக அறிவிக்கப்படுவார். வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் இதுவரை 70.5 மில்லியன் வாக்குகளை திரு பைடன் பெற்றுள்ளார். மறுமுனையில் அதிபர் டிரம்ப் 67.8 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
எஞ்சியுள்ள மாநிலங்களில் கடுமையான போட்டி நிலவுவதாலும் இரு வேட்பாளர்களுக்கு இடையிலான இடைவெளி மிகவும் குறைவாக இருப்பதாலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று கூறப்படுகிறது.
அலெஸ்கா, நிவேடா, ஜார்ஜியா, பென்சில்வேனியா, நார்த் கரோலைனா ஆகிய மாநிலங்களில் வாக்குகள் எண்ணப்படுகின்றன. நெவேடா மாநிலத்தில் திரு பைடன் வெற்றி பெற்றால் போதும், பெரும்பான்மையை அவர் பெற்றுவிடுவார்.
இந்நிலையில், விஸ்கான்சின் மாநிலத்தில் வாக்குகளை மீண்டும் எண்ண வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார் திரு டிரம்ப். மிச்சிகன், பென்சில்வேனியா, ஜார்ஜியா ஆகிய மாநிலங்களில் வாக்குகள் எண்ணுவதை நிறுத்த வழக்கு தொடுக்கப் போவதாகவும் அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டதாக அறிவிப்பதற்கான நேரம் இன்னும் கனியவில்லை என்று திரு பைடன் கூறினார். ஆனால், போதுமான மாநிலங்களை வென்றிருப்பதை விஸ்கான்சின், மிச்சிகன், பென்சில்வேனியா ஆகிய மாநிலங்களில் தமக்குக் கிடைத்திருக்கும் ஆதரவு காட்டுவதாக, தமது சொந்த ஊரான வில்மின்டனில் செய்தியாளர்களிடம் திரு பைடன் தெரிவித்தார். இது ஒருபுறம் இருக்க, வாக்கு எண்ணுவதில் மோசடி நிகழ்வதாக எவ்வித ஆதாரத்தையும் முன்வைக்காமல் அதிபர் டிரம்ப் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், பென்சில்வேனியா, ஜார்ஜியா, நார்த் கரோலைனா ஆகிய மாநிலங்களில் தாம் வெற்றி பெற்றுவிட்டதாக அவர் கூறி வருகிறார். அந்த மாநிலங்களில் அவர் முன்னிலை வகித்து வருகிறார்.
இந்நிலையில், வாக்குகள் எண்ணப்படுவதை நிறுத்த வேண்டும் என அதிபர் டிரம்ப் விடுத்த கோரிக்கைக்குக் கடுமையான எதிர்ப்பலைகள் ஏற்பட்டுள்ளன. போர்ட்லந்து நகரில் வாக்களிப்புக்குப் பிறகு, கலவரம் மூண்டது. சாலைகளில் திரண்ட ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்க கலவரத் தடுப்பு அதிகாரிகள் நிறுத்தப்பட்டனர்.
ஏறத்தாழ 11 பேர் கைது செய்யப்பட்டதாகவும் சுத்தியல், துப்பாக்கிகள் போன்ற ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் போர்ட்லந்து போலிசார் தெரிவித்தனர். நியூயார்க் நகரில் கிட்டத்தட்ட 50 ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர். அமெரிக்காவின் பல மாநிலங்களில் ஜோ பைடனின் ஆதரவாளர்களால் அமைதி யான முறையில் போராட்டம் நடத்தப்பட்டது. டென்வரில் போலிசாருடன் கைகலப்பில் ஈடுபட்ட நால்வர் கைது செய்யப்பட்டனர். வாக்குகள் முழுமையாக எண்ணப்பட வேண்டும் எனக் கோரி அட்லாண்டா, டெட்ராய்ட், ஓக்லந்து ஆகிய இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.
அரிசோனாவில் அதிபர் டிரம்ப் கூறியது போல வாக்குகள் எண்ணுவதை நிறுத்த வேண்டும் எனக் கூறி அவரது ஆதரவாளர்கள் வாக்கு எண்ணும் மையத்தை முற்றுகையிட்டனர். மோசடி மூலம் மட்டுமே அரிசோனாவை திரு பைடன் கைப்பற்ற முடியும் என அவர்கள் கூறினர். திரு பைடன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டால் அதை ஏற்கப்போவதில்லை என்று அவர்கள் முழக்கமிட்டனர்.
இலக்கை நெருங்கும் பைடன்; மோசடி எனப் போர்க்கொடி உயர்த்தும் டிரம்ப்

