பாலஸ்டியர் ரோட்டில் உள்ள குடியிருப்பு ஒன்றில் நேற்று போலிசாருடன் மோதலில் ஈடுபட்ட ஒருவர் மீது துப்பாக்கிக் குண்டு பாய்ந்த சம்பவத்தின் தொடர்பில் இன்று மூவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
நேற்று துப்பாக்கிக் குண்டு பாய்ந்து, தற்போது மருத்துவமனையில் இருக்கும் பிரகாஷ் மதிவாணன் எனும் சந்தேக நபர் குற்றம் சாட்டப்பட்டவர்களுள் ஒருவர். 36 வயதான அந்த ஆடவர் இரண்டு குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார்.
சிங்கப்பூர் போலிஸ் படையைச் சேர்ந்த ஸ்டாஃப் சார்ஜன்ட் அதிகாரி தம் பணியைச் செய்யவிடாமல் தடுக்கும் நோக்கில் அவர் மீது வேண்டுமென்றே தாக்குதல் நடத்தி காயப்படுத்தியது ஒரு குற்றச்சாட்டு.
சிங்டெல் நிறுவனத்திடம் வாடிக்கையாளர்போல ஏமாற்றி 7 iPhone 11 Pro Max கைபேசிகளைப் பெற்று, அக்டோபர் 14ஆம் தேதி $14,273 மோசடி செய்தது மற்றொரு குற்றச்சாட்டு.
குற்றம் சாட்டப்பட்ட மற்ற இருவரில் ஒருவர் 22 வயது நிகில் எம் டுர்குடே; மற்றவர் 33 வயது மாலனி நாயுடு பிரபாகர் நாயுடு. இவர்கள் இருவர் மீது மாவட்ட நீதிமன்றத்தில் இன்று குற்றம் சாட்டப்பட்டது.
பொதுத் துறை அதிகாரி தம் பணியைச் செய்யவிடாமல் தடுக்கும் நோக்கில் வேண்டுமென்றே காயப்படுத்தியதாக டுர்குடே மீது குற்றம் சாட்டப்பட்டது.
அதிகாரியைத் தாக்கிய குற்றச்சாட்டை நீதிமன்றத்தில் டுர்குடே மறுத்தார். ஒரு வாரத்துக்கு காவலில் வைக்கப்படும் அவர், இம்மாதம் 13ஆம் தேதி நீதிமன்றத்தில் முன்னிலையாவார்.
மோசடி செயலில் ஈடுபட்டதாக மாலனி மீது குற்றம் சாட்டப்பட்டது. அவரும் 13ஆம் தேதி நீதிமன்றத்தில் முன்னிலையாவார்.
இந்த மூவர் மீதும் ஏற்கெனவே மோசடிக் குற்றச்சாட்டுகள் இருப்பதாகக் கூறப்பட்டது. 2017ஆம் ஆண்டில் மாலனியும் பிரகாஷும் சதித்திட்டம் தீட்டி மோசடியில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
நேற்று அதிகாலை 1 மணியளவில் பாலஸ்டியர் ரோட்டில் உள்ள சிட்டி சூட்ஸ் கொண்டோமினியத்தில் உள்ள குடியிருப்பு ஒன்றில், மோசடி குற்றச்சாட்டின் பேரில் நால்வரைக் கைது செய்வதற்காக, சீருடையில் இல்லாத மூன்று போலிஸ் அதிகாரிகள் கைவிலங்கு, துப்பாக்கி சகிதம் சென்றனர்.
அப்போது ஏற்பட்ட மோதலில் போலிஸ் அதிகாரி ஒருவரை பிரகாஷ் தாக்கினார், மற்றொரு போலிஸ் அதிகாரியிடமிருந்து துப்பாக்கியைப் பறிக்க முயன்றார். இந்த மோதலில் துப்பாக்கி வெடித்து, பிரகாஷின் வயிற்றுக்குள் குண்டு பாய்ந்தது.

