2021 தொடக்கப்பள்ளி இறுதியாண்டுத் தேர்வு: உயர்நிலைப் பள்ளிக்கான நுழைவுப்புள்ளி விவரங்கள்

2021 தொடக்கப்பள்ளி இறுதியாண்டுத் தேர்வு: உயர்நிலைப் பள்ளிக்கான நுழைவுப்புள்ளி விவரங்கள்

3 mins read
04c5676c-14d8-48b4-b451-3e5d0898712b
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -
Google News Preferred Icon

2021ஆம் ஆண்டுக்கான தொடக்கப்பள்ளி இறுதியாண்டுத் தேர்வின் புதிய மதிப்பெண் அளவைமுறையின்கீழ், உயர்நிலைப் பள்ளிக்கான நுழைவுப்புள்ளி விவரங்களை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.

கடந்த ஆண்டின் தொடக்கநிலை 6 தரவுகளின் நுழைவு அடிப்படையில் அமைந்துள்ள இந்த நுழைவுப்புள்ளிகள், மாணவர்களின் உயர்நிலைப் பள்ளித் தெரிவுகளில் வழிகாட்டவும் எந்தெந்த பள்ளிகள் அவர்களுக்குக் கிடைக்கும் சாத்தியம் உள்ளது என்பதைக் குறிக்கவும் உதவும்.

அரசாங்கப் பள்ளிகள், அரசாங்க உதவி பெற்ற பள்ளிகள், தன்னாட்சிப் பள்ளிகள் என பள்ளிகள் பரவலாக மூன்று பிரிவுகளில் அடங்கும்.

புதிய பிஎஸ்எல்இ மதிப்பெண் அளவைமுறையின்கீழ் இந்த ஆண்டு தொடக்கநிலை 5ல் பயிலும் மாணவர்கள் தரம் பிரிக்கப்படுவர்.

சக மாணவர்களின் தேர்ச்சி எத்தகையதாக இருந்தாலும், பாடங்களில் ஒரு மாணவரின் தனிப்பட்ட செயல்திறனின் அடிப்படையில் மதிப்பீடு செய்யும் இந்தப் புதிய முறை குறித்து 2016ல் கல்வி அமைச்சு அறிவித்தது.

மாணவர்களுக்கு 'ஏ' ஸ்டார் முதல் 'ஈ' வரையிலான தரநிலைக்குப் பதிலாக ஒவ்வொரு பாடத்திற்கும் சாதனை நிலைகள் (ஏஎல்) 1 முதல் 8 வரை வழங்கப்படும்.

மாணவர் ஒருவர் ஆங்கிலம், தாய்மொழி, கணிதம், அறிவியல் ஆகிய நான்கு பாடங்களிலும் தனித்தனியாகப் பெற்ற இந்த சாதனை நிலையின் கூட்டு புள்ளிகளாக, அவரது மொத்த பிஎஸ்எல்இ புள்ளிகள் இருக்கும்.

நான்கு பாடங்களிலும் ஒரு மாணவர் 'ஏஎல் 1' தகுதி பெற்றால், அவர் ஆகச்சிறந்த புள்ளியான நான்கு பெற்றுள்ளார் என்று குறிக்கும்.

சென்ற ஆண்டின் பிஎஸ்எல்இ முடிவுகள், பள்ளித் தேர்வுமுறைகள் ஆகியவற்றின் அடிப்படையில் வெவ்வேறு பள்ளிப் பிரிவுகளுக்கான ஏஎல் புள்ளி வரம்புகளை உருவாக்கியதாக நேற்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கல்வி அமைச்சு தெரிவித்தது.

மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் பள்ளிகளைத் தேர்வுசெய்வது, பட்டியலிடுவது குறித்து உதவுவதற்காக உயர்நிலைப் பள்ளிகளுக்கான ஏஎல் புள்ளி வரம்புகள் அடுத்த ஆண்டின் முதல் பாதியில் வெளியிடப்படும்.

இது இந்த ஆண்டின் பிஎஸ்எல்இ முடிவுகள், பள்ளித் தெரிவுகள் ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்திருக்கும். தன்னாட்சிப் பள்ளிகளின் விரைவுநிலைக்கான (ஐபி-ஒருங்கிணைந்த திட்டம்) புள்ளி வரம்பு 7 முதல் 9 வரையாகவும் சுயேட்சைப் பள்ளிகளுக்கு 6 முதல் 8 வரையாகவும் இருக்கும்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான விரைவுநிலை (ஓ நிலை) புள்ளி வரம்பு 8 முதல் 22 வரையிலும், வழக்கநிலை (ஏட்டுக்கல்வி) 22 முதல் 25 வரையிலும், வழக்கநிலை (தொழில்நுட்பம்) 26 முதல் 30 வரையிலும் இருக்கும். தன்னாட்சிப் பள்ளிகளின் விரைவுநிலை (ஓ நிலை) புள்ளி வரம்பு, 8 முதல் 16 வரை இருக்கும். தன்னாட்சிப் பள்ளிகளின் வழக்கநிலை (ஏட்டுக்கல்வி), வழக்கநிலை (தொழில்நுட்பம்) படிப்புகளுக்கு, புள்ளி வரம்புகள் முறையே 22 முதல் 25 மற்றும் 26 முதல் 29 வரை இருக்கும்.

விரைவுநிலைக்கு (ஓ நிலை) சுயேச்சைப் பள்ளிகளுக்கான புள்ளி வரம்பு 8 முதல் 10 ஆகும்.

தற்போதைய மதிப்பெண் அளவைமுறைப் போலவே, இந்த புள்ளி வரம்புகளும் ஆண்டுதோறும் மாறுபடும்.

உயர்நிலை ஒன்றுக்கான வழக்கநிலை ஏட்டுக்கல்வி, தொழில்நுட்ப மாணவர்களுக்கு ஆங்கில மொழி, கணிதம் போன்ற பாடங்களை உயர்நிலையில் பயிலத் தேவையான தரம் குறித்த மாற்றங்களையும் அமைச்சு நேற்று வெளியிட்டது. பாடம் அடிப்படையிலான தரம் பிரித்தலின் கீழ் தற்போது இவ்வாறு படிக்கும் தேர்வு மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.

புதிய பிஎஸ்எல்இ மதிப்பெண் அளவைமுறையின்கீழ், குறிப்பிட்ட பாடத்தில் மாணவர் பெற்ற ஏஎல் மதிப்பெண்ணைக் கொண்டு இது தீர்மானிக்கப்படும்.

"பிஎஸ்எல்இ என்பது ஒரு மாணவர் வாழ்க்கையில் முக்கியமானதொரு மைல்கல். அதனால் கொஞ்சம் பதற்றம் ஏற்படுவது மனித இயல்புதான். ஆனால் மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் இன்புற்று கற்றலில் ஈடுபட வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். அதுதான் மிக முக்கியம்," என்றார் கல்வி அமைச்சின் கல்வித்துறை தலைமை இயக்குநர் திரு வோங் சியு ஹூங்.