கொவிட்-19 நெருக்கடி நீடித்தால் பிரதமர் பதவியில் தொடர்ந்து இருந்து, மசெக அணிக்குத் தலைமை தாங்கி அடுத்த தேர்தலைச் சந்திப்பது பற்றி பிரதமர் லீ சியன் லூங் பரிசீலிக்க வேண்டி இருக்கும் என்று முன்னாள் மூத்த அமைச்சர் பேராசிரியர் எஸ். ஜயகுமார் தெரிவித்து இருக்கிறார்.
'ஆளுமை: ஒரு சிங்கப்பூர் கண்ணோட்டம்' என்ற பேராசிரியர் ஜயகுமார் எழுதியுள்ள புத்தகம் நேற்று வெளியிடப்பட்டது.
அந்தப் புத்தகத்தில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். பிரதமர் லீக்கு 2022 பிப்ரவரி வந்தால் 70 வயதாகும். அந்த வயதில் பதவியில் இருந்து ஓய்வு பெறலாம் என்று தான் நம்புவதாக திரு லீ முன்பே தெரிவித்து இருக்கிறார்.
இருந்தாலும் கொவிட்-19 கிருமித்தொற்று, 2020 பொதுத் தேர்தல் ஆகியவற்றைத் தொடர்ந்து பிரதமர் திரு லீ பதவியில் தொடர வேண்டும் என்ற கருத்து தீவிரமடைந்து இருக்கிறது என்று புத்தகத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவை எல்லாம் கொவிட்-19 எவ்வளவு காலத்திற்கு நீடிக்கும் என்பதைப் பொறுத்து இருக்கும் என்றார் அவர். அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்பாகவே வழக்கநிலை திரும்பிவிட்டால் பிரதமர் பதவியில் இருந்து விலகுவது என்ற திரு லீயின் விருப்பத்திற்கு மக்கள் ஆதரவு அளிப்பார்கள்.
ஆனால் கொவிட்-19 நெருக்கடி தொடரும் பட்சத்தில் பதவி விலகும் எண்ணத்தை திரு லீ மீண்டும் பரிசீலிக்க வேண்டும். நாட்டிற்கு மிரட்டல் அகன்ற பிறகே அவர் அடுத்த தலைமுறையிடம் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும் என்று சிங்கப்பூரர்களில் பலரும் விரும்புவார்கள் என்றே தான் நினைப்பதாக பேராசிரியர் ஜயகுமார் குறிப்பிட்டு இருக்கிறார்.
கொவிட்-19 பாதிப்புகளைக் கருத்தில்கொண்டு பார்க்கையில் தலைமைத்துவ மாற்றம் பற்றி பேசுவதற்கு இது சரியான நேரமாக இருக்காது என்றே தோன்றுவதாக வெளியுறவு அமைச்சில் தனது புதிய புத்தகம் பற்றி பேட்டி அளித்த போது செய்தியாளர்களிடம் பேராசிரியர் ஜயகுமார் தெரிவித்தார்.
கொவிட்-19 நெருக்கடி முற்றிலும் அகலுவதை உறுதிப்படுத்தப் போவதாக பிரதமர் லீ சியன் லூங் கோடிகாட்டி இருக்கிறார்.
இதன்மூலம் அவர் நான்காம் தலைமுறை தலைவர்களுக்கும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டு பல பொறுப்புகளில் அமர்த்தப்பட்டு இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் விலைமதிப்பில்லாத வாய்ப்பை அளிக்கிறார்.
அவர்கள் திரு லீயிடம் இருந்தும் மூத்த அமைச்சர்களிடம் இருந்தும் கற்றுக்கொள்ளலாம் என்று புத்தகத்தில் பேராசிரியர் குறிப்பிட்டு உள்ளார். சிரமமான சூழ்நிலையில் நான்காம் தலைமுறை தலைவர்கள் உறுதியான போக்கை புலப்படுத்தி இருக்கிறார்கள் என்று குறிப்பிட்ட அவர், இளம் சிங்கப்பூரர்களின் இதயத்தையும் மனதையும் வெற்றிகொள்ள வேண்டியது அவர்கள் எதிர்நோக்கும் சவால் என்றார்.
சிங்கப்பூரை நிறுவிய முன்னாள் பிரதமர் லீ குவான் இயூ பற்றி தமது புத்தகத்தில் பல விவரங்களையும் தெரிவித்து இருக்கும் பேராசிரியர், அவருக்கு காலம் விலைமதிப்புமிக்கதாக இருந்தது என்றார்.
உலக விவகாரங்கள் பற்றிய பயனுள்ள எண்ணங்களைத் தெரிவிக்கக்கூடியவர்களைச் சந்திக்க வே திரு லீ விரும்பினார்.
ஆகையினால் அவர் அப்போதைய வெளியுறவு அமைச்சுக்கு ஒரு செய்தி அனுப்பி இருந்தார்.
எல்லாரும் வந்து வேடிக்கை பார்க்க நான் விலங்குக் காட்சி சாலையில் உள்ள பாண்டா அல்ல, தன்னைச் சந்திக்க வந்திருக்கும் ஒருவரை சந்திப்பது ஏன் முக்கியம் என்பதை வெளியுறவு அமைச்சு விளக்க வேண்டும் என்று திரு லீ குறிப்பிட்டு இருந்ததாக புத்தகத்தில் பேராசிரியர் தெரிவித்துள்ளார்.
முக்கியமான அமைச்சர்களை உள்ளடக்கிய ஒரு சிறு குழுவை திரு லீ குவான் இயூ அமைத்திருந்தார். அவசர முடிவுகளை எடுக்க வேண்டி இருக்கும்போது அந்தக் குழுவைக் கூட்டி அவர் விவாதிப்பார்.
அந்தக் குழுவுக்கு முதலில் 'கிச்சன் கேபினட்' என்று பெயர். பிறகு அது 'அரசியல் குழு' என்று பெயர் மாறியதாக பேராசிரியர் புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.

