பிரதமர்: 'அரசாங்கம் மீது மக்கள் நம்பிக்கை வைப்பது மிக முக்கியம்'

1 mins read
6ec1a27d-9fda-4509-98e3-a1562af164e6
-

கொவிட்-19 கிருமித்தொற்று ஒரு சுகாதாரப் பிரச்சினை மட்டுமல்ல, அது அரசியல் ரீதியான ஒரு சவாலும் கூட. ஏனெனில், அது அரசு மீதும் அரசியல் தலைவர்கள் மீதும் உலகத் தலைவர்கள் நம்பிக்கை வைப்பது தொடர்பானது என்று பிரதமர் லீ சியன் லூங் கூறியுள்ளார். பொருளியலைத் திறந்துவிடுவது, கொரோனா கிருமித்தொற்று கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது என இவை இரண்டுக்கும் இடையே சமநிலை காண்பது சிக்கலான ஒன்று என்று பிரதமர் கூறினார்.

இதன் தொடர்பில் பல நாடுகள் சமநிலை காணத் தவறியதுடன் கிருமித்தொற்று மீண்டும் அதிகரித்துள்ள நிலையையும் அவர் சுட்டினார். கட்டுப்பாடுகளைத் தளர்த்திய அந்த நாடுகள், தொற்று எண்ணிக்கை கீழிறங்கியவுடனே குறைந்த அளவு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் தங்கள் பொருளியலைத் திறந்துவிட்டன.

இதனால், அந்த நாடுகளில் கிருமித்தொற்று மீண்டும் அதிகரித்து மறுபடியும் அவை முடக்கநிலையை அறிவிக்க வேண்டி இருந்தன என்று பிரதமர் லீ விளக்கினார். ஆனால் அந்த நிலையில், அந்நாடுகளைச் சேர்ந்த மக்கள் கட்டுப்பாடுகளால் சோர்வடைந்து, அவற்றின் மீது அவநம்பிக்கை கொண்டு கேள்விகள் கேட்கத் துவங்கினர்.

இதனால், தங்கள் அரசுகளின் மீதே குறைகூறி, ஏற்பட்டுள்ள நிலைமைக்குத் தங்கள் தலைவர்களே காரணம் என அவர்கள் கூற ஆரம்பித்துவிட்டனர். இதன்மூலம், தொற்று எண்ணிக்கை, குறிப்பாக அது குறைவாக இருக்கும்போது, பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து வைத்திருப்பது எவ்வளவு முக்கியம் என்பதை மக்களுக்கு உணர்த்துவதற்கு நல்ல அரசியல் தலைமைத்துவம் தேவை என்பதை நமக்கு தெளிவுபடுத்தியிருக்கிறது என்று பிரதமர் சுட்டினார்.