சிங்கப்பூர்- ஹாங்காங் விமானப் பயணம் தினம் ஒரு விமானச் சேவையுடன் தொடங்குகிறது

சிங்கப்பூர்- ஹாங்காங் விமானப் பயணம் தினம் ஒரு விமானச் சேவையுடன் தொடங்குகிறது

2 mins read
50f213c8-62e9-4e8c-badb-0b04ec897218
படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், ஏஎஃப்பி -

இம்மாதம் 22ஆம் தேதி முதல் சிங்கப்பூரர்கள் விமானம் வழி ஹாங்காங்கிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ள முடியும்.

கொவிட்-19 தொற்று ஏற்பட்டு வெளிநாட்டு விமானப் போக்குவரத்துத் தடைகள் அமலாக்கப்பட்டதிலிருந்து சுற்றுபயணத்திற்காக சிங்கப்பூரர்களுக்கு விமானப் போக்குவரத்துச் சேவை திறந்துவிடப்படுவது இதுவே முதல்முறை.

சிங்கப்பூருடனான முதல் 'ஏர் பபல்' ஒப்பந்தத் திட்டத்தின் கீழ் நாளுக்கு ஒரு விமானம் வீதம் இரு நாடுகளுக்கிடையே விமானச் சேவைகள் இருக்கும்.

ஒரு நாளில் அதிகபட்சம் 200 பேர் பயணம் செல்ல அனுமதி உண்டு. டிசம்பர் 7 முதல் ஒரு நாளுக்கு இரு விமானங்கள் ஹாங்காங்கிற்குச் செல்லும்.

இந்த விவரங்களைப் போக்குவரத்து அமைச்சர் ஓங் யி காங் இன்று அறிவித்தார்.

எனினும் தொடர்ந்து ஏழு நாட்களுக்கு இரு நாட்டுப் பயணிகளிடையே ஒன்றோடு ஒன்று தொடர்பு இல்லாத கொவிட்-19 தொற்று சம்பவங்கள் ஐந்துக்கும் மேலாக இருந்தால் இந்த பயணத் திட்டம் 2 வாரங்களுக்கு நிறுத்தி வைக்கப்படும் என்று சிங்கப்பூர் சிவில் விமானத்துறை ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

இந்த ஏற்பாட்டின்படி பயணிகள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டியதில்லை. வீட்டிலேயே தங்கி இருக்க வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்படும் வாய்ப்பும் இராது.

ஆனால், சிங்கப்பூரிலிருந்து ஹாங்காங் செல்லும் பயணிகள் பயணம் மேற்கொள்ளும் நாளுக்கு குறைந்தது ஏழு நாட்களுக்கும் முன், பிசிஆர் முறை பரிசோதனை முடிவைச் சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம்.

டிசம்பர் 1ஆம் தேதி முதல் ஹாங்காங் பயணம் மேற்கொள்வோர் பயண அனுமதி பெறத் தேவையில்லை. பயண நாளுக்கு 72 மணி நேரம் முன்பாக கொவிட்-10 நோய் இல்லை என்ற முடிவுகளைப் பயணிகள் பெற்றிருக்க வேண்டும்.

ஹாங்காங் சென்றடையும் சிங்கப்பூர் பயணிகள் விமான நிலையத்திலும் கொவிட்-19 பரிசோதனை மெற்கொண்டு முடிவுகள் வரும் வரை காத்திருக்க வேண்டும். இதற்குக் கிட்டத்தட்ட 4 மணி நேரம் ஆகும் என்றார் அமைச்சர் ஓங். இதற்கு கிட்டத்தட்ட $87 (499 ஹாங்காங் டாலர்) செலவாகும் என கூறப்படுகிறது.

சிங்கப்பூர் வரும் பயணிகள் 'டிரேஸ்டுகெதெர்' செயலியைப் பதிவிறக்கம் செய்வது அவசியம் என்றும் அவர் சுட்டினார்.

குறிப்புச் சொற்கள்