சிறுமியைக் கொலை செய்ததாக தாய், தாயின் கணவர் மீது குற்றச்சாட்டு; மகன்களைப் பார்க்க இருவரும் அனுமதி கோரினர்

சிறுமியைக் கொலை செய்ததாக தாய், தாயின் கணவர் மீது குற்றச்சாட்டு; மகன்களைப் பார்க்க இருவரும் அனுமதி கோரினர்

2 mins read
a5d25ec1-a891-469f-aaf9-bb686e4bbb65
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -
Google News Preferred Icon

11 வயதுச் சிறுமியைக் கொலை செய்ததாக சிறுமியின் தாய், தாயின் கணவர் ஆகியோர் மீது இன்று (நவம்பர் 12) நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

26 வயதான அந்தத் தம்பதி இன்று காணொளி இணைப்பு வாயிலாக நீதிமன்றத்தில் முன்னிலையாகினர். பொதுவான நோக்கத்துடன் கொலை செய்ததாக இருவர் மீதும் குற்றம் சாட்டப்பட்டது.

சிறுமி கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகல் 12.40 மணியளவில் உயிரிழந்தார். சுயநினைவிழந்த நிலையில் சிறுமி அன்று காலை 11 மணியளவில் இங் டெங் ஃபோங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

இம்மாதம் 6 முதல் 10ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் ஜூரோங்கில் உள்ள குடியிருப்பு ஒன்றில் அந்தத் தம்பதி மேற்கொண்ட செயல்கள்தான் சிறுமி உயிரிழக்கக் காரணமாக இருக்கக்கூடும் என நீதிமன்ற ஆவணங்கள் குறிப்பிட்டன.

நீதிமன்றத்தில் அந்த மாது தன்னுடைய மூன்று மகன்களைப் பார்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அவர்களில் இருவரது பொறுப்பை தம் முன்னாள் கணவருடன் பகிர்ந்துகொள்கிறார் அவர். அந்தச் சிறுவர்களில் ஒருவர் தொடக்கப்பள்ளி ஒன்றாம் வகுப்பில் விரைவில் சேர இருப்பதால், சில ஆவணங்களை தம்முடைய முன்னாள் கணவரிடம் சேர்ப்பிக்க விரும்புவதாகத் தெரிவிக்கப்பட்டது.

அந்த மாதுவின் கணவரும் தம் மகனைக் காணொளி இணைப்பின் வழியாகப் பார்க்க நீதிமன்றத்தின் அனுமதி கோரினார்.

அவ்விருவருக்கும் பிணை வழங்க இயலாது எனக் குறிப்பிட்ட மாவட்ட நீதிபதி, அவர்களது கோரிக்கைகளின் தொடர்பில் விசாரணை அதிகாரி உதவுவார் என்று குறிப்பிட்டார்.

குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கும் இவ்வாண்டு ஏப்ரல் மாதத்தில் திருமணம் நடந்தது. அந்த மாதின் முதல் திருமணம் 2013ல் நடந்தது.

இவ்விருவரும் இம்மாதம் 19ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலையாவர். குற்றம் நிரூபிக்கப்பட்டால், இருவருக்கும் மரண தண்டனை விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்