கொவிட்-19 தடுப்பூசிகள் கிடைத்ததும் அவை சமமாகவும் சீராகவும் கட்டுப்படியான விலையிலும் தங்கள் மக்களுக்கு வழங்கப்படுவதை தென்கிழக்காசிய நாடுகள் உறுதிசெய்ய வேண்டும் என்று நேற்று தொடங்கிய ஆசியான் உச்சநிலை மாநாட்டில் பிரதமர் லீ சியன் லூங் கேட்டுக்கொண்டுள்ளார்.
கொரோனா பரவலின் நீண்டகாலத் தாக்கத்தை மட்டுப்படுத்த வட்டார அளவிலான ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதமர் லீ, தடுப்பூசி பன்முகத்தன்மைக்கும் அழைப்பு விடுத்தார்.
'கோவேக்ஸ்' போன்ற உலகளாவிய தடுப்பூசித் திட்டங்களுக்குச் சிங்கப்பூர் ஆதரவளிக்கிறது என்று திரு லீ குறிப்பிட்டார். அத்திட்டத்தில் சிங்கப்பூர் உள்ளிட்ட பல ஆசியான் நாடுகளும் சிங்கப்பூரின் வெளிநாட்டுப் பங்காளிகளும் உறுப்பினர்களாக உள்ளன.
"நமது வெளிநாட்டுப் பங்காளிகளும் ஆசியான் உறுப்பு நாடுகளும் நம்பிக்கை அளிக்கும் வகையில் பல தடுப்பூசிகளை உருவாக்கி வருகின்றன," என்று பிரதமர் குறிப்பிட்டார்.
ஆசியான் வட்டாரத்தின் தேவைகளை நிறைவுசெய்யும் விதமாக தடுப்பூசிகள் தயாரிப்பிற்கும் விநியோகத்திற்கும் வழிவகை செய்ய அவர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று திரு லீ கேட்டுக்கொண்டார்.
கொவிட்-19 ஆசியான் மீட்பு நிதிக்காக சிங்கப்பூர் 100,000 அமெரிக்க டாலர் (S$134,900) வழங்கவிருக்கிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தத் தேவையான மருந்துப் பொருள்களையும் மருத்துவக் கருவிகளையும் கொள்முதல் செய்ய ஆசியான் உறுப்பு நாடுகளுக்கு அந்நிதி உதவுகிறது.
பொருளியலைப் பொறுத்தமட்டில், கொரோனா நெருக்கடிக்குப் பிந்தைய உலகில் ஆசியானின் போட்டித்தன்மையை மேம்படுத்துவதற்குத் தலைவர்கள் தங்களது முயற்சிகளை மீண்டும் இரட்டிப்பாக்க வேண்டும் என்று பிரதமர் சொன்னார்.
ஆசியாவின் இணைப்புத்திறன் 2025 பெருந்திட்டம், ஆசியான் அறிவார்ந்த நகரங்கள் கட்டமைப்பு போன்ற கட்டமைப்புகளைக் கொண்டு அதைச் செய்ய முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆசியான் சுங்க போக்குவரத்து அமைப்பு, நாடுகளுக்கு இடையே பொருள் விநியோகத்திற்கு வழிவகை செய்ய உதவுகிறது.
"இத்தகைய திட்டங்களால் நமது மீட்சியை முடுக்கிவிட முடியும். கொரோனா பரவலுக்குப் பிந்தைய உலகில் புதிய வாழ்க்கைமுறைகளுக்குப் பழகிக்கொள்ளவும் வர்த்தகம் புரியவும் தொழில்நுட்பத்தை நாம் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்," என்றார் திரு லீ.
ஆசியான் சமூக வரைவுத்திட்டங்களின் இடைப்பருவ மறுஆய்வு உட்பட பல துறைகளில் ஆசியான் முன்னேற்றம் கண்டிருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
கொவிட்-19 பரவலுக்குப் பிந்தைய ஆசியான் சமூகத்தின் இலக்கை உருவாக்கும் பணிகள் தொடங்கிவிட்டன. பல ஆண்டுகாலப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு வட்டார நிலையிலான விரிவான பொருளியல் பங்காளித்துவ உடன்பாடு நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தென்கிழக்காசியாவிலும் ஆதிக்க சக்திப் போட்டி இல்லாமல் இல்லை எனக் குறிப்பிட்ட திரு லீ, அந்தச் சவாலை எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்றார்.
அமெரிக்கா-சீனா இடையிலான பதற்றநிலை இந்த வட்டாரத்தைப் பெரும் நெருக்கடிக்கு உள்ளாக்கி இருக்கிறது என்றும் ஆசியானின் நடுநிலைத்தன்மைக்கும் ஒற்றுமைக்கும் அது சோதனையாக இருந்து வருகிறது என்றும் பிரதமர் கூறினார்.
இருந்தாலும், வல்லரசு நாடுகளுக்கு இடையே மேம்பட்ட இருதரப்பு நம்பிக்கையையும் ஒத்துழைப்பையும் ஏற்படுத்துவதில் ஆசியான் குறிப்பிட்ட அளவில் பங்களிக்க முடியும் என்றும் அவர் சொன்னார்.
பயங்கரவாத எதிர்ப்பு, இணையப் பாதுகாப்பு, எல்லை தாண்டிய புகைமூட்டம் போன்ற வட்டார, உலக அளவிலான சவால்களை எதிர்கொள்ள இணைந்து பணியாற்றுவதில் மற்ற நாடுகளுக்கு ஆசியான் ஒரு நடுநிலைத்தன்மையுடன் கூடிய தளமாக விளங்குகிறது என்ற மதிப்பை நாம் கட்டிக்காக்க வேண்டும் என்றும் பிரதமர் லீ வலியுறுத்தினார்.

