தீபாவளி தினத்தன்று மகிழ்ச்சியுடன் கூடிய குடும்பத்தை சோக இருளில் ஆழ்த்தியது, அக்குடும்பத்தைச் சேர்ந்த ஏழு வயது பிள்ளையின் எதிர்பாரா மரணம்.
மலேசியாவின் ஈப்போ மாநிலத்தின் சித்தியாவான் பகுதியில் சேர்ந்த அந்தக் குடும்பத்தின் சிறுவன், கையில் கத்தியை நீட்டிக்கொண்டிருந்த 11 வயது சிறுவனை நோக்கி நேராக ஓடி நெஞ்சில் குத்தப்பட்டான். இந்த இரண்டாவது சிறுவன் அதே குடும்பத்தைச் சேர்ந்தவராவர்.
வீட்டுக்கு வெளியே கயிறு வெட்டுவதற்காக அந்தக் கத்தியை 11 வயது சிறுவன் தன் கையில் வைத்திருந்ததாக உயிரிழந்த சிறுவனின் உறவினரான டி. மதியழகன், 43, செய்தியாளர்களிடம் தெரிவித்தார். நெஞ்சில் குத்தப்பட்ட சிறுவன் சம்பவ இடத்திலேயே சுயநினைவு இழந்ததாகக் கூறப்பட்டது.
சம்பவத்திற்கு பின்னணியில் குற்றச்செயல் அல்லது கவனக்குறைவு குறித்த விசாரணை தொடர்வதாக மலேசிய போலிசார் தெரிவித்தனர்.

