விலைமதிப்பற்ற தீபாவளிப் பரிசு

1 mins read
b4f782b1-3428-4554-b452-7ce9d3e825da
தீபாவளியன்று பின்னிரவு 12.57 மணிக்குப் பிறந்த குழந்தையால் தாங்கள் விவரிக்க இயலாத ஆனந்தத்தை அடைந்து இருப்பதாக இந்தத் தம்பதி கூறினர். குழந்தைக்குப் பொருத்தமான பெயரை இந்த தம்பதி தேடிக் கொண்டு இருக்கின்றனர். (படம்: தேசிய பல்கலைக்கழக மருத்துவமனை) -

திவினியா-பிராயனேஷ் தம்பதியருக்கு விலைமதிப்பற்ற பரிசாக இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது. தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையில் நேற்று முன்தினம் தீபாவளியன்று பின்னிரவு 12.57 மணிக்குப் பிறந்த தங்கள் மகனால் விவரிக்க இயலாத ஆனந்தத்தை அடைந்திருப்பதாக குழந்தையின் பெற்றோர் கூறினர். செங்காங் வட்டாரத்தில் வசிக்கும் இத்தம்பதிக்கு நள்ளிரவு வாக்கில் அவசர அறுவை சிகிச்சை மூலம் இக்குழந்தை பிறந்தது. குழந்தைக்கு பொருத்தமான பெயரை இத்தம்பதி தேடிக்கொண்டிருக்கின்றனர்.

கடந்தாண்டு டிசம்பர் மாதத்தில் கருத்தரித்த இல்லத்தரசியான திருமதி திவினியா, 23, கொவிட்-19 கிருமிப் பரவல் காலகட்டத்தின்போது சுகாதாரப் பரிசோதனைகள் சற்று தாமதம் அடைந்ததாலும் முகக்கவசம் அணிய வேண்டிய கட்டாயத்தினாலும் சிரமப்பட்டதாகக் கூறினார்.

சிங்கப்பூர் குடியரசு ஆகாயப் படையில் பொறியாளராகப் பணியாற்றும் திரு பிராயனேஷ் பாலு, 27, கிருமிப் பரவல் சூழலால் தாமும் ஆயுதப் படையினர் பலரும் இரண்டு வார சுழற்சி முறையில் ராணுவ முகாம்களில் தங்க வேண்டி இருந்ததால், மனைவியையும் இரண்டு வயது மகளையும் தனியாக வீட்டில் விட்டுச் செல்ல வேண்டியிருந்ததாக வருத்தத்துடன் கூறினார்.

இந்தச் சிரமங்களுக்கு மத்தியில் பிறந்த குழந்தையால் தீபாவளி உணர்வு அதிகரித்திருப்பதாக இத்தம்பதியர் தெரிவித்தனர். "இந்த தீபத் திருநாளில் மகன் பிறந்தது நாங்கள் செய்த பெரும்பாக்கியம்," என்றார் திரு பிராயனேஷ்.