தடுப்பூசி வழங்குவதில் யாருக்கு முன்னுரிமை?... எந்த தடுப்பூசியைத் தேர்ந்தெடுப்பது?... இன்னும் பல கேள்விகளுக்கு நிபுணர்களின் பதில்கள்

தடுப்பூசி வழங்குவதில் யாருக்கு முன்னுரிமை?... எந்த தடுப்பூசியைத் தேர்ந்தெடுப்பது?... இன்னும் பல கேள்விகளுக்கு நிபுணர்களின் பதில்கள்

4 mins read
eb986b75-8313-4801-868e-b0e2d0c42ddc
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

உலக அளவில் பல கொவிட்-19 தடுப்பு மருந்துப் பரிசோதனைகள் இறுதிக்கட்ட பரிசோதனையில் இருக்கின்றன. பரிசோதனைகள் வெற்றிகரமாக நிறைவுறும்பட்சத்தில், அடுத்த மாதத் தொடக்கத்தில் கொவிட்-19 தடுப்பு மருந்துகள் பயன்பாட்டுக்கு வரக்கூடும்.

சிங்கப்பூருக்கு தடுப்பு மருந்தைப் பெறும் நோக்கில் பல தடுப்பு மருந்து நிறுவனங்களுடன் சிங்கப்பூர் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளது என சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் தெரிவித்தார்.

அமெரிக்க நிறுவனமான ஃபைசர், ஜெர்மன் நிறுவனமான பையோஎன்டெக் உடன் சேர்ந்து தயாரிக்கும் தடுப்பு மருந்து 90% திறனுடன் செயல்படுவதாக மருந்தகப் பரிசோதனைகள் தெரிவிக்கின்றன.

அனைத்துலக அளவில் இந்தத் தடுப்பு மருந்துகள் தேவைப்படுவதால், அவற்றை வாங்குவதில் நாடுகளுக்கிடையே போட்டி நிலவுகிறது.

தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு வரத் தொடங்கியதும் சிங்கப்பூரில் அனைவருக்கும் போடுவதற்குப் போதிய அளவுக்கு தடுப்பு மருந்து கிடைக்குமா என்பது சந்தேகம்தான். சிலருக்கு தடுப்பு மருந்துகள் 2 டோஸ்களில் கொடுக்கப்பட வேண்டியிருக்கும்.

அதனால், சிங்கப்பூரில் கொவிட்-19 தடுப்பு மருந்து முதலில் யாருக்கெல்லாம் கொடுக்கப்பட வேண்டும் என்பதைத் தீர்மானிக்க குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 தடுப்பு மருந்தை வழங்குவதில் முன்னுரிமை தரப்படவேண்டியவர்கள், தடுப்பு மருந்துகள் எவ்வளவு பாதுகாப்பு அளிக்கும், தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு வந்த பிறகு, வாழ்க்கை முன்புபோல மாறிவிடுமா என்பது பற்றி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் மூத்த செய்தியாளர் சல்மா காலிக், நிபுணர்களுடன் உரையாடினார்.

அந்த உரையாடலின்போது கேட்கப்பட்ட கேள்விகள் - அளிக்கப்பட்ட பதில்களின் முக்கிய அம்சங்கள் சில கீழே:

1. முதலில் கிடைக்கும் தடுப்பு மருந்தைப் பயன்படுத்துவதா? அல்லது கூடுதல் பாதுகாப்பான, திறன் மிகுந்த தடுப்பூசிக்காகக் காத்திருப்பதா?

தற்போது உலக அளவில் மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கப்படும் 48 தடுப்பு மருந்துகளை ஆராயும் குழுவின் முதன்மை விசாரணை அதிகாரி டியூக்-என்யுஎஸ் மருத்துவப் பள்ளியின் பேராசிரியர் ஊய் எங் இயோங்: நோய்ப் பரவல் அபாயம் அதிகமாக இருந்தால், முதலில் கிடைப்பதைப் பயன்படுத்த வேண்டும். ஆனால், சில மாதங்கள் காத்திருப்பதாலேயே, கூடுதல் தகவல்கள் கிடைக்கும் வாய்ப்பு குறைவு என்றார் அவர். தடுப்பு மருந்துகளின் நீண்டகால தாக்கம் பற்றிய தகவல்கள் தற்போதைக்கு கிடைக்காது என அவர் விளக்கம் அளித்தார். தடுப்பு மருந்துப் பரிசோதனைகளில் இருந்து கிடைக்கும் தகவல்களைப் பொருத்து மருந்துகளின் பாதுகாப்பையும் திறனையும் தெரிந்துகொள்ளலாம் என்றார் என்யுஎஸ் சா சுவீ ஹாக் பொதுச் சுகாதாரப் பள்ளியின் தொற்று நோய்கள் நிபுணர் இணைப் பேராசிரியர் சு லி யாங் தெரிவித்தார்.

2. தடுப்பு மருந்தைப் பயன்படுத்தியதும் அந்த நபர் தொற்றிலிருந்து பாதுகாக்கப்படுகிறாரா? 2 டோஸ் மருந்துகளில் முதல் டோஸ் மருந்து போட்டதும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுகிறதா?

முழுமையாக தடுப்பு மருந்து (2 டோஸ்கள் தேவைப்பட்டால் 2 டோஸ்களும்) கொடுத்த 15 நாட்களுக்குப் பிறகே தடுப்பு மருந்துகளின் திறன் பரிசோதிக்கப்படுவதாக பேராசிரியர் ஊய் குறிப்பிட்டார்.

இரண்டாவது டோஸ் தடுப்பு மருந்து கொடுக்கப்பட்ட 28 நாட்களுக்குப் பிறகுதான் ஃபைசர் அதன் நோய்த் தடுப்புத் திறனை அளவிடத் தொடங்கியது. முதல் டோஸ் வழங்கப்பட்டு 21 முதல் 28 நாட்களுக்குள் வழங்கப்பட வேண்டிய இரண்டாவது டோஸ் தடுப்பு மருந்தை வழங்காவிட்டால், முதல் டோஸ் தடுப்பு மருந்து வீணாகிவிடும் என தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையின் தொற்று நோயியல் மூத்த நிபுணர் பேராசிரியர் ஃபிஷெர் குறிப்பிட்டார்.

3. நாடு முழுவதும் ஒரே தடுப்பு மருந்தைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக பல விதமான தடுப்பு மருந்துகளைப் பயன்படுத்துவதால் ஏதும் சாதகமான நிலைமை உருவாகுமா?

நாடு முழுமைக்கும் பயன்படுத்தும் அளவுக்கு ஒரே தடுப்பு மருந்து கிடைப்பது சவாலானதாக இருக்கும்.

சில தடுப்பு மருந்துகள் மூத்தோரிடையேயும், நோய்வாய்ப்பட்டவர்களிடையேயும் திறம்பட செயல்படக்கூடும். வேறோர் தடுப்பு மருந்து ஆரோக்கியமானவர்களிடையே சிறப்பாகச் செயல்படலாம்.

பல்வேறு விதமான தடுப்பு மருந்துகளைப் பயன்படுத்தினால், கூடுதல் எண்ணிக்கையில் தடுப்பு மருந்துகளைப் பெற வாய்ப்பு உள்ளது என பேராசிரியர் சு தெரிவித்தார்.

4. தடுப்பு மருந்து போட்டுக்கொள்வது எவ்வளவு காலத்துக்கு நோயெதிர்ப்புத் திறனைக் கொடுக்கும்? சளிக்காய்ச்சல் தடுப்பு மருந்து போல ஆண்டுக்கொரு முறை போட்டுக்கொள்ள வேண்டுமா?

அது பற்றிய தகவலை இவ்வளவு சீக்கிரம் பெற முடியாது. தேவை இருப்பின் 'பூஸ்டர்' தடுப்பு மருந்துகளை நிறுவனங்கள் தயாரிக்கும்.

பொதுவாக இயற்கையான நோயெதிர்ப்புத் திறன்களே நீண்டகாலத்துக்கு இருக்கும் என்றார் பேராசிரியர் சு.

5. 90% திறனுள்ள தடுப்பு மருந்து என்றால் என்ன?

கொவிட்-19 தடுப்பு மருந்து பரிசோதனைக்கு உட்பட்ட பத்து பேரில் ஒருவருக்கு மட்டுமே தொற்று ஏற்படும் வாய்ப்பு இருப்பதை இது குறிப்பிடுகிறது.

ஃபைசர் நிறுவன தடுப்பு மருந்து பரிசோதனையில் பங்கேற்ற 22,000 பேரில் 8 பேருக்கு மட்டுமே தொற்று ஏற்பட்டது.

6. தடுப்பு மருந்து போட்டுக்கொண்ட பிறகு முகக்கவசம், பாதுகாப்பான இடைவெளி தேவையா?

தொடக்க காலத்தில் அவை நிச்சயம் தேவை என்று பேராசிரியர் குக் தெரிவித்தார். 'ஹெர்டு இம்யூனிட்டி' எனப்படும் நோயெதிர்ப்புத் திறனைப் பெறுவதற்கு எற்ப பலருக்கு தடுப்பு மருந்து கொடுக்கப்பட்ட பிறகு பாதுகாப்பான இடைவெளி தெரிவுக்குட்பட்டதாகிவிடும்.

90% திறனுடைய தடுப்பு மருந்தின் வழி ஹெர்டு இம்யூனிட்டி பெறப்படவேண்டுமானால், சுமார் 60% மக்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்று பேராசிரியர் குக் தெரிவித்தார்.

ஹெர்டு இம்யூனிட்டி ஏற்பட்டால் கொவிட்-19 யாருக்கும் ஏற்படாது என்பது பொருளல்ல; அப்படியே யாருக்கும் தொற்று ஏற்பட்டாலும் அது பெரிய குழுக்களிடையே பரவாமல், தானாகவே தொற்று குறைந்துவிடும் என்று பேராசிரியர் சூ குறிப்பிட்டார்.

7. தடுப்பு மருந்து வழங்கும்போது யாருக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும்?

அதனைத் தீர்மானிக்க சிங்கப்பூரில் 14 உறுப்பினர்களைக் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான நாடுகளில் வயதானவர்களுக்கும் சுகாதாரப் பிரச்சினைகள் உடையவர்களுக்கும் தடுப்பு மருந்து வழங்கலில் முன்னுரிமை வழங்க திட்டமிடப்படுகிறது.

சிங்கப்பூரில் சுகாதார, பராமரிப்புத் துறை முன்களப் பணியாளர்கள், வயதானவர்கள் போன்றோருக்கு முன்னுரிமை வழங்கப்படக்கூடும் என பேராசிரியர் குக் தெரிவித்தார். வெளிநாட்டு ஊழியர்களிடையே கிருமிப் பரவல் அதிகமாக இருந்ததையும் பேராசிரியர் ஃபிஷர் குறிப்பிட்டார்.

8. தடுப்பூசி போட்டுக்கொள்வது கட்டாயமாக்கப்படுமா?

தொடக்க காலத்தில் அது கட்டாயமாக்கப்படாது என நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்