சேண்ட்ஸ் கண்காட்சி, மாநாட்டு மையத்தில் அமைச்சர் ஈஸ்வரன் உரை
சிதறிக் கிடக்கும் விநியோகத் தொடர் குறித்த தகவல்கள் வெளிப்படையாக, நம்பகத்தன்மையுடையதாக இருப்பதை உறுதி செய்யும் வகையில் அதற்கென ஒரு பொதுவான கட்டமைப்பை உருவாக்க புதிய திட்டம் ஒன்று செயல்படவுள்ளது.
இதை தனியார், அரசு சார்ந்த அமைப்புகள் அடங்கிய ஒரு குழு மேற்கொண்டு வருவதாக தொடர்பு, தகவல் அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் நேற்று சேண்ட்ஸ் கண்காட்சி, மாநாட்டு மையத்தில் நடைபெற்ற 'இன்சைட்ஸ்' எனப்படும் மாநாட்டில் தெரிவித்தார்.
இந்தக் கட்டமைப்பு அனைத்து இறக்குமதி, ஏற்றுமதி அமைப்புகள் மற்றும் கப்பல் நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் ஆகியவை பயன்படுத்தும் தகவல் தளங்களை ஒன்றிணைக்கும்.
இதனால், ஆவணங்களை கைப்பட ஆய்வு செய்வது, அதன் தொடர்பில் ஏற்படக்கூடிய மோசடிச் சம்பவங்கள் போன்றவற்றைக் குைறக்கலாம். அதேசமயம், கொள்கலன்கள் கையாளப்படும் இடங்களில் நெரிசல் குறையும் என்றும் அமைச்சர் ஈஸ்வரன் கூறினார்.
மின்னிலக்கமயமாவதில் சிங்கப்பூர் நிச்சயமற்ற எதிர்காலத்தை எதிர்நோக்கும் இவ்வேளையில், இதில் தனியார், அரசு சார்ந்த அமைப்புகள் ஒன்றிணைந்து செயல்படுவதன் தேவையை அமைச்சர் ஈஸ்வரன் வலியுறுத்தினார்.
"இது கட்டுப்பாடுகளைத் தாண்டி புதிய யோசனைகள், மாற்று வழிகள் பற்றி சிந்திப்பது தொடர்பானது. இங்குதான் தனியார் துறை அரசுத் துறையுடன் இணைந்து பணியாற்ற வேண்டியிருக்கும்.
"சில சந்தர்ப்பங்களில் விதிமுறை கட்டுப்பாடுகளால் வெவ்வேறு அமைப்புகள் இணைந்து பணியாற்ற முடியாத சூழல் உருவாகலாம்.
"இங்குதான் அரசாங்கம் இவற்றைத் தாண்டி இதனால் ஏற்படக்கூடிய சவாலையும் எதிர்கொண்டு ஒரு திட்டத்தை அதற்கேற்ற வளங்களுடன் செயல்படுத்த முடியும்," என்று அமைச்சர் விளக்கினார்.
புதிய யோசனைகளை முன்வைக்கும்போது அவை அரசாங்கத்தால் எவ்வாறு ஏற்றுக்கொள்ளப்படுமோ என்ற தயக்கம் தனியார் துறையில் இருப்பது குறித்துப் பேசிய அமைச்சர், அரசாங்கம் பொதுவாகவே ஆக்கபூர்வமான சிந்தனையை வரவேற்றுள்ளதைச் சுட்டினார்.
தொழில்நுட்பத் துறையில் தனியார், அரசுத் துறை ஒத்துழைப்புக்கு அடித்தளமாக உள்ள நான்கு அம்சங்களில் புதிய சிந்தனைப் போக்குக்கே அரசாங்கம் முதல் இடம் தருவதாகக் கூறிய அமைச்சர் ஈஸ்வரன், வர்த்தக ரீதியிலான தீர்வுகளைக் காணும் புத்தாக்கப் போக்கு, யோசனைகளை செயல்படுத்துவது, மின்னிலக்கமயமாவதில் சமுதாயத்தில் உள்ள அனைவரையும் உள்ளடக்கிச் செயல்படுவது என மற்ற மூன்று அம்சங்களையும் பட்டியலிட்டார்.
பொதுவான தகவல் உள்கட்டமைப்பை விநியோகத் தொடர் மின்னிலக்கமயமாதல் செயல்திட்டத்திற்கான கூட்டணி வழிநடத்துகிறது.
பன்னாட்டு நிறுவனங்கள், சிறிய, நடுத்தர நிறுவனங்கள், அரசாங்க அமைப்புகள், புதிதாகத் தொழில் தொடங்கிய நிறுவனங்கள் போன்றவை இந்தக் கூட்டணியில் இடம்பெற்றுள்ளன.
வர்த்தக, நிதி தகவல்களை மின்னிலக்கமயமாக்குவதிலும் கொள்கலன்கள் கையாளப்படும் இடங்களில் நெரிசலைக் குறைப்பதிலும் இரு முன்னோட்டச் சோதனைகள் தொடங்கப்பட்டுள்ளன.

