சிங்கப்பூரில் ஊழியர்களின் மனநலம் காக்க புது வழிகாட்டி நெறிமுறைகள்

சிங்கப்பூரில் ஊழியர்களின் மனநலம் காக்க புது வழிகாட்டி நெறிமுறைகள்

2 mins read
d56fc8a7-d068-4868-9e5c-6e7162c89128
-

ஊழியர்களின் மனநலம் தொடர்பான தேவைகளுக்காகப் புதிய முத்தரப்புப் பங்காளித்துவ வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. நாடாளுமன்ற உறுப்பினர்களும் தொழிற்சங்கங்களும் இதனைப் பெரிதும் வரவேற்றுள்ளன.

மனவுளைச்சலால் பாதிக்கப்பட்டுள்ள ஊழியர்களை அடையாளம் காண்பதற்கும் ஊழியர்களுக்கு ஆதரவு வழங்கவும் பயிலரங்குகளை நடத்த நிறுவனங்களைப் புதிய வழிகாட்டி நெறிமுறைகள் ஊக்குவிக்கின்றன.

வேலை நேரத்துக்குப் பிறகு ஊழியர்களுக்குப் போதுமான ஓய்வு கிடைப்பது அவசியம் என்பதை முதலாளிகள் புரிந்துகொள்ள வேண்டும் என்று அது அழைப்பு விடுத்துள்ளது.

வேலை-வாழ்க்கை நல்லிணக்கக் கொள்கையை அமைப்பதன் மூலம் இந்த இலக்கை அடைய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலை நேரத்துக்குப் பிறகு வேலை தொடர்பான அழைப்புகள் பற்றி தெளிவுபடுத்த இது உதவும்.

மனிதவள அமைச்சு, தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (என்டியுசி), சிங்கப்பூர் தேசிய முதலாளிகள் சம்மேளனம் ஆகிய முத்தரப்பு பங்காளிகளால் புதிய வழிகாட்டி நெறிமுறைகள் நேற்று மெய்நிகர் மாநாட்டில் வெளியிடப்பட்டன.

சிங்கப்பூரர்களின் மனநலத் தேவைகளைப் பூர்த்தி செய்ய பல அமைப்புகளைச் சேர்ந்த புதிய குழு என்று அமைக்கப்பட்டிருப்பதாக கிட்டத்தட்ட ஒரு மாதத்துக்கு முன்பு பிரதமர் லீ சியன் லூங் அறிவித்தார். இதையடுத்து புதிய வழிகாட்டி நெறிமுறைகள் இன்று (நவம்பர் 17) வெளியிடப்பட்டன.

மனநலம் தொடர்பாக ஊழியர்கள் ஆலோசனை பெறவும் சிகிச்சை பெறவும் அவர்களுக்கான சலுகைகளை நீட்டிக்கும்படி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. அல்லது மனநலம் தொடர்பாக உதவி தேவைப்படும் ஊழியர்களுக்கு அதற்கான திட்டங்களுக்கு ஏற்பாடு செய்யும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமாளிக்க முடியாத மனவுளைச்சலால் துன்பப்படும் ஊழியர்களும் சுயதொழில் செய்பவர்களும் உதவி கேட்டு முன்வரலாம் என்று முத்தரப்புப் பங்காளிகள் கூறினர்.

இவ்வாண்டுக்கான சிங்கப்பூர் வேலையிடப் பாதுகாப்பு. சுகாதார மாநாட்டில் புதிய வழிகாட்டி நெறிமுறைகளை மனிதவள அமைச்சர் ஜோசஃபின் டியோ இன்று அறிமுகப்படுத்தினார்.