சிங்கப்பூர் பயணிகளுக்கு கொவிட்-19 காப்புறுதி

சிங்கப்பூர் பயணிகளுக்கு கொவிட்-19 காப்புறுதி

2 mins read
23832532-0dfc-424f-9664-fb5c2d99fe7f
-

சிங்கப்பூருக்கு வரும் பயணிகள் இங்கு இருக்கும்போது ஏற்படும் கொவிட்-19 தொடர்பான செலவுகளுக்கு காப்புறுதியை வாங்கிக்கொள்ளலாம்.

கொவிட்-19 கிருமி தொடர்பான மருத்துவ சிகிச்சைகளுக்காகவும் மருத்துவமனையில் தங்கும் செலவுகளுக்காகவும் குறைந்தது $30,000 காப்பீட்டுத் தொகையை உள்ளடக்கிய பயணக் காப்புறுதியை மூன்று காப்புறுதி நிறுவனங்கள் உருவாக்கியுள்ளதாக இன்று காலை சாங்கி விமான நிலையக் குழுமமும் சிங்கப்பூர் பயணத்துறைக் கழகமும் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தன.

சுகாதார அமைச்சின் பரிந்துரையை ஏற்று குறைந்தபட்ச காப்பீட்டுத் தொகை முடிவுசெய்யப்பட்டுள்ளது.

தனியார் மருத்துவமனைகளில் கொவிட்-19 சிகிச்சைக்கான கட்டணத்தைப் பரிசீலித்து அந்தப் பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது.

'ஏஐஜி ஏஷியா பசிஃபிக் இன்ஷுரன்ஸ்', 'சப் இன்ஷுரன்ஸ் சிங்கப்பூர் லிமிடெட்', 'எச்எல் அஷுரன்ஸ்' ஆகிய மூன்று நிறுவனங்கள் இந்தக் காப்புறுதியை வழங்குகின்றன.

'சப்' நிறுவனம் இம்மாதம் 27ஆம் தேதி முதல் காப்புறுதியை விற்கத் தொடங்கும் என்றாலும் இதர இரண்டு நிறுவனங்களும் ஏற்கெனவே விற்கத் தொடங்கிவிட்டன.

தற்போது செயல்பாட்டில் இருக்கும் விதிமுறைகளின்படி வெவ்வேறு பாதுகாப்புப் பயணத் தடங்களின் மூலம் சிங்கப்பூருக்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு கொவிட்-19

கிருமித்தொற்று இருப்பது சந்தேகிக்கப்பட்டாலோ சிங்கப்பூரில் கொவிட்-19 கிருமித்தொற்றுக்கான மருத்துவ சிகிச்சைகளைப் பெறவேண்டி இருந்தாலோ அந்தச் செலவுகளை அவர்களே ஏற்றுக்கொள்ளவேண்டும்.

மருத்துவச் சிகிச்சை, பரிசோதனை, தனிமைப்படுத்துதல் ஆகியவற்றுக்கான முழுச் செலவையும் அந்தப் பயணிகள் ஏற்றுக்கொள்ளவேண்டும்.

அதனால் இந்தப் பயணக் காப்புறுதித் திட்டம் அந்தச் செலவுகளின் ஒரு பகுதியைச் சமாளிக்க உதவும் என்று சாங்கி விமான நிலையக் குழுமமும் சிங்கப்பூர் பயணத்துறைக் கழகமும் தெரிவித்தன.

இந்தக் காப்புறுதித் திட்டங்களுக்கான கட்டணம் பொருள், சேவை வரியைச் சேர்த்து $5.35லிருந்து தொடங்கும் என்றும் காப்புறுதி நிறுவனங்களின் இணையத்தளம் மூலம் நேரடியாக வாங்கிக்கொள்ளலாம் என்றும் இரு அமைப்புகளும் தெரிவித்தன.

புதிய காப்புறுதித் திட்டங்கள் இதற்கு முன்னர் வெளிவந்த, பாதுகாப்பான வர்த்தகக் காட்சிகள், கண்காட்சிகள் போன்ற அறிவிப்புகளை நிறைவுசெய்வதாக உள்ளன என்று இரு அமைப்புகளும் தெரிவித்தன.