சுடச் சுடச் செய்திகள்

சிங்கப்பூரில் கால்வாசி நிறுவனங்கள் சம்பளத்தை நிறுத்திவைக்க திட்டம்

சம்பள உயர்வை அடுத்த ஆண்டு சுமார் 25% சிங்கப்பூர் நிறுவனங்கள் நிறுத்திவைக்கத் திட்டமிட்டுள்ளன. இவ்வாண்டு சம்பளத்தை நிறுத்தி வைத்துள்ள 30% நிறுவனங்களைக் காட்டிலும் இது சற்று குறைவு.

சம்பளத்தை 3% முதலாளிகள் அடுத்த ஆண்டு குறைக்கத் திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்பட்டது. இவ்வாண்டு 29% நிறுவனங்கள் சம்பளக் குறைப்பு செய்திருந்தன.

இருப்பினும், பெரும்பாலான முதலாளிகள் உடனே முடிவெடுக்காமல் நிலைமையைக் கண்காணித்து வருவதாகக் கூறப்படுகிறது. நிறுவனங்கள் கொரோனா கொள்ளை நோயின் தாக்கத்தைக் கடந்துவரும் அதேவேளையில் சம்பள உயர்வு தொடர்பில் கவனமாக முடிவெடுக்க வேண்டும்.

‘மெர்செர்’ மேற்கொண்ட வருடாந்திர ‘மொத்த ஊதிய ஆய்வு’ கண்டுபிடிப்புகள் இன்று (நவம்பர் 19) வெளியிடப்பட்டன. ஆய்வில் 16 தொழில்துறைகளைச் சேர்ந்த 992 நிறுவனங்கள் பங்கேற்றன.

அடுத்த ஆண்டுக்கான ஒட்டுமொத்த சம்பள உயர்வு 3.5 விழுக்காடாக இருக்கும் என்றும் இவ்வாண்டு அது 3.6 விழுக்காடாக உள்ளது என்றும் ஆய்வு கண்டறிந்துள்ளது.

“வருங்காலம் குறித்து வர்த்தகங்கள் கவனமாகவும் நம்பிக்கையுடனும் உள்ளன. மாறிவரும் வேலைகளுக்கு ஏற்ப ஊழியர்களுக்கு உற்சாகமளிக்க முழுமையான திறன் உத்திமுறைகளை அவை கருத்தில் கொண்டுள்ளன,” என்றார் சிங்கப்பூருக்கான 'மெர்செர்' தலைமை நிர்வாக அதிகாரி பெட்டா லட்டிமெர்.

வர்த்தக மின்னிலக்கமயத்தைத் துரிதப்படுத்தத் தேவையான திறன்களை ஈர்ப்பதையும் தக்க வைத்துக்கொள்வதையும் தங்களின் எதிர்காலத் திட்டங்களில் தலைவர்கள் கொண்டுள்ளதாகவும் திருவாட்டி லட்டிமெர் குறிப்பிட்டார். 

வங்கி, நிதி, உயர் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் வழங்கப்படும் சம்பளம் அடுத்த ஆண்டில் ஒரு நிலையான சதவீதத்தில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தளவாடங்கள், பயனாளர் பொருட்கள் தொடர்பான துறைகளிலும் சற்று அதிக சம்பள உயர்வு காணப்படும் என்று கூறப்படுகிறது.

இருப்பினும் உயிர் அறிவியல், சொத்துச் சந்தை, ரசாயனம், வாழ்க்கைமுறை சார்ந்த சில்லறை வர்த்தகத் துறைகளில் அடுத்த ஆண்டு சம்பள உயர்வு மெதுவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

குறிப்பாக வாழ்க்கைமுறை சார்ந்த சில்லறை வர்த்தகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்குச் சம்பள உயர்வு மிதமாக இருக்கலாம். 2021ஆம் ஆண்டில் சம்பளம் 2.9% அதிகரிக்கலாம். இவ்வாண்டு இத்துறையில் சம்பளம் 3.3% உயர்ந்தது.

இதற்கிடையே வேலை அனுபவத்தை மறுவடிவமைப்பது, ஊழியர்களுக்குச் சலுகைகள் மற்றும் பலன்களை அளிப்பது போன்றவற்றில் பல சிங்கப்பூர் நிறுவனங்கள் கவனம் செலுத்தி வருகின்றன. 

ஆய்வில் பங்கேற்ற முதலாளிகளில் பாதிப் பேர், தங்களது ஊழியர்களின் இணையக் கட்டணம், மடிக்கணினிகள், கைபேசி ஆகியவற்றுக்கான செலவுகளை ஈடுகட்டுவர் என்று தெரிவித்தனர்.
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon