சுடச் சுடச் செய்திகள்

வீட்டிலேயே செங்குத்து தோட்டம்; தெம்பனிசில் முன்னோடித் திட்டம்

தெம்பனிஸ் குடியிருப்பாளர்கள் சொந்த பயனீட்டிற்குத் தேவையான ரசாயன உரம் சாராத கீரை உள்ளிட்ட காய்கறிகளைத் தங்கள் வீட்டிலேயே பயிரிடக்கூடிய வாய்ப்பு விரைவில் ஏற்படும்.

மண்ணில் பயிர்களை வளர்த்து உருவாக்குவதற்குப் பதிலாக, குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளில் சிறுசிறு இடங்களில் செங்குத்தான சாதனங்களில் கீரை முதலான காய்கறிகளை  வளர்க்கும் வாய்ப்பை ‘அவர் தெம்பனிஸ் ஹப்’ வழங்கும். 

அந்தச் செங்குத்து சாதனம் ஒன்றில் சுமார் 20 தாவரத்தை வளர்க்க முடியும். அந்தச் சாதனம் 1 மீட்டர் அகலம் இருக்கும். உயரம் 2 மீட்டருக்கும் குறையாமல் இருக்கும். தெம்பனிசில் தொடங்கும் முன்னோடித் திட்டத்தில் இத்தகைய சுமார் 50 சாதனங்கள் இலவசமாக வழங்கப்படும். 

போதிய சூரிய வெளிச்சத்துடன் தாவரத்தை வளர்த்து உருவாக்க உகந்த சூழல் உள்ள வீடுகளைக் கொண்டுள்ள குடும்பத்தினர் இதற்குத் தேர்வு செய்யப்படுவர்.

‘நமது பசுமைக் குடில்’ என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக இது இடம்பெறுகிறது. இந்தத் திட்டத்தையொட்டி செங்குத்து பண்ணை ஒன்றும் இன்று அறிமுகம் கண்டது. 
அந்தப் பண்ணை 15க்கும் அதிகமான கீரை, காய்கறி வகைகளை உற்பத்தி செய்யும். 

இந்தத் தொடக்க நிகழ்ச்சியில் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சரும் தெம்பனிஸ் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான மசகோஸ் ஸுல்கிஃப்லியும் திரு டெஸ்மண்ட் சூ, திருவாட்டி செங் லி ஹுய் ஆகிய இதர  நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டார்கள். 

இந்தச் செங்குத்துச் சாதன பண்ணைத் திட்டத்தில் தெம்பனிஸ் குடியிருப்பாளர்கள் சுமார் 600 பேர் ஆர்வம் கொண்டு இருக்கிறார்கள். 

தெம்பனிஸ் வட்டாரத்துக்குள் உணவு, தானியத்தை உற்பத்தி செய்வது நமது பெரும் திட்டமாக இருக்கிறது என்று குறிப்பிட்ட அமைச்சர், இதற்காக கார்பேட்டை கூரைத் தோட்டங்கள் ஒதுக்கித் தரப்படுவதாகத் தெரிவித்தார். 

அந்தத் தோட்டங்கள் வெறும் காய்கறிகளை மட்டும் பயிர் செய்யாமல் பொருளியல் ரீதியில் பலன் அளிக்கக்கூடிய உச்சிக் கூரைத் தோட்டங்களில் பொதுமக்கள் ஈடுபாடு கொள்வதையும் ஊக்குவிக்கும் என்று அமைச்சர் மசகோஸ் குறிப்பிட்டார். 

சிங்கப்பூர் 2030ல் தனக்குத் தேவைப்படும் சத்துணவில் 30 விழுக்காட்டை தானே உற்பத்தி செய்ய வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்து இருக்கிறது. 

இந்த இலக்கை நிறைவேற்ற இந்தப் பண்ணைத் திட்டமும் உதவும் என்றும் அமைச்சர்  மேலும் தெரிவித்தார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon