'சிங்கப்பூர் ரீடிஸ்கவர்' பற்றுச்சீட்டுகளை டிசம்பர் 1 முதல் பயன்படுத்தலாம்

'சிங்கப்பூர் ரீடிஸ்கவர்' பற்றுச்சீட்டுகளை டிசம்பர் 1 முதல் பயன்படுத்தலாம்

2 mins read
3eccd664-a28b-4bb3-90f3-8591b47fa314
'சிங்கப்பூர் ரீடிஸ்கவர்' பற்றுச்சீட்டுகளைப் பயன்படுத்துவது தொடர்பான விவரங்களை சிங்கப்பூர் பயணத்துறை வாரியம் இன்று (நவம்பர் 23) வெளியிட்டது. படங்கள்: மரினா பே சேண்ட்ஸ், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -
Google News Preferred Icon

அடுத்த மாதம் 1ஆம் தேதியிலிருந்து 18 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய சிங்கப்பூரர்கள் தங்கள் 'சிங்கப்பூர் ரீடிஸ்கவர்' பற்றுச்சீட்டுகளைப் பயன்படுத்தலாம். $100 பெறுமானமுள்ள பற்றுச்சீட்டுகள் வழங்கப்படுகின்றன.

ஒவ்வொருவருக்கும் $10 பெறுமானமுள்ள பத்து பற்றுச்சீட்டுகள் வழங்கப்படும்.

அதுமட்டுமல்லாது, தங்களுடைய பற்றுச்சீட்டுகளில் மீதமுள்ள தொகையை அவர்கள் இணையத்தில் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

'சிங்கப்பூர் ரீடிஸ்கவர்' பற்றுச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்வது தொடர்பாக உதவி தேவைப்படுவோருக்கு நாடெங்கும் பல இடங்களில் முனையங்கள் அமைக்கப்படும்.

சிங்கப்பூர் ஹோட்டல்களில் தங்கவும் உல்லாசத் தளங்களுக்கான நுழைவுச் சீட்டுகளைப் பெறவும் உள்ளூர் சுற்றுப்பயணங்களில் ஈடுபடவும் சாங்கி ரெக்கமெண்ட்ஸ், குளோபல்டிக்ஸ், டிரேவலோக்கா, டிரிப்.காம், குலூக் ஆகிய இணையத்தில் முன்பதிவு தளங்கள் வாயிலாக அடுத்த மாதம் 1ஆம் தேதியிலிருந்து அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை முன்பதிவு செய்துகொள்ளலாம்.

பட்டியலில் உள்ள ஹோட்டல்கள், உல்லாசத் தளங்கள், உள்ளூர் சுற்றுப்பயணங்கள் ஆகியவற்றுக்கு 'சிங்கப்பூர் ரீடிஸ்கவர்' பற்றுச்சீட்டைப் பயன்படுத்தலாம்.

ஆனால் கடைகளில் பொருட்கள் வாங்குவதற்கும் உணவு மற்றும் பானங்களை வாங்குவதற்கும் பற்றுச்சீட்டுகளைப் பயன்படுத்த முடியாது.

தொகுப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக மட்டும் உல்லாசக் கப்பல் பயணங்களுக்குப் பற்றுச்சீட்டுகளைப் பயன்படுத்தலாம்.

உல்லாசத் தளங்களுடனான தொகுப்புத் திட்டங்களுடன் உபின் தீவில் சைக்கிள் பயணம், செக் ஜாவா சதுப்புநிலப் பயணம், ஹோட்டலில் தங்குவது போன்றவற்றுக்கு முன்பதிவு செய்யலாம் என்று சிங்கப்பூர் பயணத்துறை வாரியம் தெரிவித்தது.

பற்றுச்சீட்டுகளைப் பயன்படுத்தக்கூடிய பொருட்களில் 'சிங்கப்பூர் ரீடிஸ்கவர்' பற்றுச்சீட்டு சின்னங்கள் இருக்கும் என்றும் கழகம் கூறியது.

சிங்கப்பூர் ரீடிஸ்கவர் பற்றுச்சீட்டுகளைப் பயன்படுத்துவது தொடர்பான விவரங்களை வாரியம் இன்று (நவம்பர் 23) வெளியிட்டது.

தங்களுக்கு விருப்பமான பொருளைத் தேர்ந்தெடுத்ததும் பற்றுச்சீட்டுகளைப் பயன்படுத்தும் தெரிவுகள் வழங்கப்படும்.

அதைத் தொடர்ந்து, அரசாங்க இணையப்பக்கம் ஒன்றில் சிங்பாஸைப் பயன்படுத்தி தங்கள் அடையாளத்தை உறுதி செய்து பயன்படுத்த விரும்பும் பற்றுச்சீட்டுத் தொகையைத் தேர்வு செய்யலாம்.

பற்றுச்சீட்டுக் குறியீடு ஒன்று அனுப்பிவைக்கப்படும். அதை முன்பதிவு இணையப்பக்கத்தில் தட்டச்சு செய்ய வேண்டும். முன்பதிவு பூர்த்தியானதும் பற்றுச்சீட்டுகளைப் பயன்படுத்தலாம்.

முன்பதிவு தளங்களுடன் சிங்பாஸ் தரவுகள் பகிர்ந்துகொள்ளப்படாது என்று வாரியம் தெரிவித்தது.

சிங்பாஸ் கணக்கு இல்லாதோர் அடுத்த மாதம் 1ஆம் தேதிக்கு முன்பு புதிய கணக்கைப் பதிவு செய்துகொள்ளும்படி அது அறிவுறுத்தியது.